
ஸ்ரீ காஞ்சி பெரியவரின் குரல் - 06
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூலக வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
நம் மனதில் உள்ள அழுக்கு நீங்க என்ன வழி என்பதை ஸ்ரீ மகா பெரியவா மிக எளிமையாக விளக்குகிறார். நம் மனதில் அழுக்கு இருக்கிறதா? நம் மனம் எல்லாவற்றையும் ஒன்றாக பார்ப்பதில்லை. பேதம் பார்க்கிறது. அத்வைதம், ஞானம் இரண்டும் அடைந்தவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கிறார்கள். ஞான அறிவுடன் பார்த்தால் அனைத்தும் இவ்வுலகில் ஆனந்தமாகவே இருக்கும். ரோஜாவும் ஊமத்தம்பூவும் ஒரே ஆனந்தத்தை கொடுக்கும். ஞானம் இல்லாவிட்டால் ரோஜா வேறு விதமாகவும் ஊமத்தம்பூ வேறு விதமாகவும் தெரியும். கண்ணாடியில் அழுக்கு இருந்தால் நாமும் அழுக்காக தான் தெரிவோம்.
மனநிலை பாதித்த ஒருவரிடம் ஒரு கைத்தடியை கொடுத்து ஆடாமல் பிடித்துக் கொள்ள சொன்னால், அவரால் முடியாது. ஆனால் நம்மால் முடியும். அதே போல் நம்மால் நம் மனதை ஒரு நிமிடம் ஒரே விஷயத்தை தியானித்து இருக்கச் சொன்னால் முடியாது. பல இடங்களுக்கும் மனசு அலை மோதும். ஆனால் ஞானிகளால் முடியும். அவர்களுக்கு நாம் பைத்தியம் போல் தெரிவோம்.
நம் உடல் தோஷங்களினால் ஆனது. அந்த தோஷங்களை நாம் உடலின் அங்கங்களால் செய்துள்ளோம். அதனை பல புதிய காரியங்கள் செய்து போக்க வேண்டும். பூஜை, த்யானம், ஆலய தரிசனம், தருமம், தானம் போன்ற சத் காரியங்களால் போக்க வேண்டும். இவ்வாறு பாபங்களை போக்கிக் கொண்டு, பின்பு ஞான மார்கத்தில் ஈடுபடவேண்டும்.
ஓவியம்: TSN

Leave a comment
Upload