இதுதான் அம்மாவின் அரசா?!

மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழி முதலில் இடம் பெறவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க... எடப்பாடி, பணிந்து கடிதம் அனுப்ப... அதன் பிறகு மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படுவதாக அறிவிப்பு வெளியானது.
மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையைக் கேட்டால், 'இப்போது இல்லை... வேண்டும் என்றால் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசு சொல்கிறது. இதை பல மாநில அரசுகள் கண்டித்து கடிதம் எழுதி இருக்கிறது. தமிழக அரசு கெஞ்சிக் கொண்டிருக்கிறது.
2017 - 18, 2018 - 19 ஆகிய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்புதொகை 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசு வேறொரு கணக்கிற்கு மாற்றியதை சிஏஜி அறிக்கையில் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதே போல் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தமிழக மின்வாரியத்தில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மொழியில் எப்படி தேர்வானார்கள்? தமிழகத்தைச் சேர்ந்த பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவை எல்லாமே மத்திய அரசை திருப்திப்படுத்த மாநில உரிமையை, அதிமுக அரசு அடகு வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு தனக்கு சேவகம் செய்யாதவர்களை... வருமான வரி சோதனை, சிபிஐ என்று மிரட்டிப் பணிய வைப்பதால், அதிமுக அரசு பயந்துபோய் கைகட்டி சேவகம் செய்கிறது. வார்த்தைக்கு வார்த்தை 'இது அம்மாவின் அரசு' என்று ஜெயலலிதா எனும் ஆளுமை மிக்க தலைவரை அதிமுக அரசு இதன் மூலம் அவமானப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா மீதும் சிபிஐ விசாரணை இருந்தது, வருமான வரித்துறை அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இதற்கெல்லாம் பயந்து மத்திய அரசு செய்யும் துரோகத்தை எதிர்க்க அவர் என்றும் தயங்கியதே இல்லை. திட்டக் கமிஷன் அலுவலகத்தில், தனது மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி பேசிவிட்டு வெளியே வந்த ஜெயலலிதா, மத்திய அரசு மாற்றான் தாய்மையுடன் நடந்துகொள்கிறது என்று துணிச்சலுடன் சொன்னார். அவர் என்றும் மாநில உரிமையை விட்டுக் கொடுத்தது இல்லை. அம்மாவின் அரசு என்று சொல்பவர்கள் இதை நிச்சயம் மறக்கக்கூடாது.

Leave a comment
Upload