நவராத்திரியும் கொரோனாவும்...!

“ஏங்க நம்ப பழைய கொலு படி நல்லா இல்ல... ரொம்ப பழசு ஆயிடுச்சு, நான் கல்யாணம் பண்ணி வந்தபோது வாங்கியது.. புதுசா வாங்கணும் 3500 ரூபாய் வேண்டும்” என்றாள் என் மனைவி.
“சரி எடுத்துக்கோ” என்றேன். “அப்புறம் நாளை காலை கிப்ட் ஐட்டம் வாங்க பாரிஸ் போகவேண்டும், அதுக்கு ஒரு 3000” என்றால். அதற்கும் சரி என்றேன். உடனே, “அப்ப நாளை நம்ப பாரிஸ் போக வேண்டும்.”அதற்கும் சரி என்று தலையாட்டினேன்.
நவராத்திரி என்பது சின்ன வயதில் நான் கொண்டாடிய ஒரு திருவிழா. என் அம்மா கொலு வைக்கும் அழகே அழகு. ரசித்து ரசித்து கொலுவை அலங்கரிப்பாள். என் மனைவிக்கும் அந்த ரசனை தொற்றிக்கொண்டது. எனது இரண்டு சகோதரிகள் கூட கொலு அழகாக வைப்பார்கள்.
என் அம்மாவின் கொலு படிக்கட்டு ரொம்பவும் ஸ்பெஷல். பிரிட்டானியா பிஸ்கட் டின், டால்டா டின், மண்ணெண்ணெய் கேன், ஊஞ்சல் பலகை இதெல்லாம் கொண்டு தான் என் அம்மா கொலு படிக்கட்டு ரெடி செய்வாள். அதை மூடிமறைக்க, என் அப்பாவின் சலவை செய்த வேஷ்டிகளை பயன்படுத்துவாள். கொலு படிக்கட்டுகளை இரவு தான் தயார் செய்வாள். இரவு சாப்பாட்டிற்கு பிறகு இந்த வேலை நடக்கும். அன்றைய தினம் காலை சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மை பூஜை அறையில் எடுத்து வைத்திருப்பாள்.
தசாவதாரம் செட், ராதா ருக்மணி கல்யாண செட், பார்வதி - பரமசிவன் - முருகர் - விநாயகர் செட், ஜானவாசம் செட், பறவைகள், யானை, குதிரை இப்படி ரகம் ரகமாக பொம்மைகளை வரிசைப்படுத்தி, அழகாக வைப்பாள். கீழே நிறைய மணலை கொட்டி ஒரு பார்க் தயார் செய்வாள். அடுப்புக் கரியை அம்மியில் நைசாக அரைத்து, அதை தார் சாலையாக அழகு படுத்துவது, அந்தச் சாலையில் கார், பஸ், பாதசாரிகள் பொம்மைகள் இருக்கும். மணலில் கேழ்வரகு, கடுகு இவற்றைச் தூவி லேசாக தண்ணீர் தெளிப்பாள். இரண்டு நாளில் அந்த பார்க் பச்சை பசேலென்று இருக்கும். அதன் நடுவே யானை, குதிரை, புலி, சிங்கம், கரடி, நாய் என்று எல்லா விலங்கினங்களும் உலாவரும். இதுதவிர ஒரு ஓரமாக செட்டியார் - செட்டிச்சி பொம்மை வைத்து, சுற்றி எல்லா மளிகை கடை சாமான்களும் வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் அப்போது மிகவும் பிரபலமான ஆண்டாள் ஸ்டோர் பெயர் பலகையும் வைக்கப்பட்டிருக்கும்.
ஜவ்வரிசியை ஒரு பிளேட்டில் கோந்தில் லேசாகத் தேய்த்து ஒரு அழகிய ரங்கோலி கோலம் தயார் செய்து வைத்திருப்பார். அந்த கொலுவிற்கு இன்னும் அழகு சேர்க்கும். தவிர, இன்ஜெக்ஷன் கண்ணாடி பாட்டிலை வைத்து அழகாக ஒருதேர் செய்து வைத்திருப்பாள், அதில் ஒரு பெருமாள் இருப்பார். அது கீழே ஒரு கோயில் கோபுரம் வைக்கப்பட்டு, பக்தர்கள் பொம்மை வைக்கப்பட்டு, எங்கள் ஊர் கோயிலான ஏரி காத்த ராமர் பெயர் வைத்திருப்பார். தவிர, சீரியல் லைட், கலர் காகிதத்தில் பூனை, யானை, கிளி, மான் இதெல்லாம் செய்து தோரணமாக ஆங்காங்கே ஒட்டி வைத்திருப்பார். தற்போது பலர் இதையெல்லாம் கடையில் வாங்கி, கொலுவை அலங்கரிக்கிறார்கள். ஆனால், இப்போதும் என் மாமா, இதையெல்லாம் அவரே தயார் செய்து, தனது மகன், மகள் வீட்டு கொலுவை அலங்கரிப்பார்.
கொலுவுக்கு அழைப்பதற்கு எனது சகோதரிகள் இருவரையும் எனது அம்மா தினந்தோறும் அலங்கரிப்பார். ஒருநாள் கிருஷ்ணர் வேஷம், இன்னொருநாள் ஆண்டாள் கொண்டை, ஒருநாள் என்னுடைய சட்டை டிராயர் அணிவித்து ஆம்பளை வேஷம் என்று அசத்துவார். ஆனால் இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில் அழைப்பிதழ் அட்டை அச்சடிக்கப்பட்டு, எங்கள் வீட்டு கொலுவிற்கு வாருங்கள் என்று நேரமும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும், அந்த ஒரு நாள் வந்தால் போதும். தற்போது அதுவும் காணாமல் போய், வாட்ஸ்அப் குரூப்பில் பொதுவாக வாங்க என்கிறார்கள். ரொம்பவும் வேண்டப்பட்டவர்களாக இருந்தால், செல்பேசியில் கொலுவுக்கு வரச்சொல்லி அழைக்கிறார்கள். முன்பெல்லாம் பொம்மை விலை 100 ரூபாய்க்குள் இருக்கும். இப்போது 10,000, 15,000 என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நிறைய பேர் அதை வாங்கி போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். மயிலாப்பூர், மாம்பலம், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் நவராத்திரி நேரங்களில் பொம்மை விற்பனை படு ஜோராக நடக்கும். சில விவரமறிந்தவர்கள் நவராத்திரி முடியும் நாளன்று பொம்மைக் கடையில் போய் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி, அடுத்த வருட கொலுவிற்கு பயன்படுத்துவார்கள். வியாபாரியும் அடுத்த ஆண்டு வரை பத்திரப்படுத்த வேண்டும் என்று கேட்ட விலைக்கு கொடுத்துவிடுவார். இந்தத் தொழில் ரகசியம் சில பெண்களுக்கு மட்டுமே தெரியும்.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒரு ஐந்து ஆறு பேர் சேர்ந்து கொலு வைத்திருக்கும் வீட்டிற்கு செல்வோம். காரணம் சுண்டல் கிடைக்கும் என்பதுதான். சில வீடுகளில் பெண்களுக்கு மட்டும் சுண்டல் தருவார்கள். சிறுவர்கள் போனால், உங்களுக்கெல்லாம் சரஸ்வதி பூஜை அன்று தான் என்று திருப்பி அனுப்புவார்கள். அந்த வீட்டில் எல்லாம் நாங்கள் மெயினை ஆஃப் செய்து விட்டு ஓடி விடுவோம். பின்னால் இதை கண்டுபிடித்த உஷார் குடும்பத்தினர், வாசலிலேயே எங்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். மெயின் சுவிட்ச் இருக்குமிடத்தில் ஒரு கம்புடன் ஒரு பெரியவர் நின்று கொண்டிருப்பார்.
அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு கொலுவும் ரசிக்கும்படி இருக்கும். சில வீடுகளில் சுதந்திரப் போராட்ட தலைவர்களை வைத்து தனியாக ஒரு கொலு தயார் செய்து, பார்க்க ரசிக்கும்படி வைத்திருப்பார்கள். ராமதிலகம் என்ற பஸ் முதலாளி வீட்டு கொலு ரொம்பவும் பிரபலம். சாவி கொடுத்தால் ஓடும் ரயில், பஸ், கார் இவையெல்லாம் அங்கு வைத்திருப்பார்கள். குழந்தைகள் வந்ததும் அவர்களுக்கு டெமோ பண்ண ஒரு பெண் இருப்பாள், அவர் கீ கொடுத்து அவற்றை இயக்கி காண்பிப்பாள்.
அதே போல என் அம்மா பொம்மைகளை பத்திரப்படுத்தும் விதமே அலாதி. ஒவ்வொரு பொம்மையையும் பழைய செய்தித்தாளில் சுற்றி, அதை பழைய புடவையில் சுற்றி, பெரியபொட்டியில் வைக்கோல் எல்லாம் போட்டு, பூச்சி வராமல் இருக்க வேப்பிலை தழைகள்போட்டு... அவ்வளவு பந்தோபஸ்தாக பொம்மைகளை பத்திரப்படுத்துவாள்.
என் மனைவி வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால், என் அம்மாவுடன் சேர்ந்து கொலு வைக்க பழகி, ஒரு சில வருடங்களில் என் அம்மா, கொலு வைக்கும் பொறுப்பை அவளிடம் நம்பி கொடுத்தாள். என் அம்மா செட்டியார் - செட்டிச்சி வைத்து மளிகை கடைவைத்தாள். என் மனைவி மருந்து கடை, வண்டலூர் உயிரியல் பூங்கா எல்லாம் வைத்து அசத்தினாள். அதே போல் சுண்டல் கூட என் அம்மாவின் கைபக்குவ ரூசியுடன் செய்தாள். மீந்து போன பட்டாணி சுண்டலை, மசாலா குருமா செய்யும் தொழில் நுட்பம் தெரிந்து வைத்திருந்தாள். மற்ற சுண்டல்களை மறுநாள் புளிப்பு கூட்டாக செய்யவும் தெரிந்து வைத்திருந்தாள்.
என் மனைவி, இது தவிர சரஸ்வதி பூஜையின் போது குழந்தைகளுக்கு பென்சில், ரப்பர், ஷார்ப்பனர், பேனா, கிரையான்ஸ், டிராயிங் புக், ஸ்கெட்ச் பென், இது தவிர ரப்பர் பேண்ட், காது தோடு, தலை கிளிப் என்று புதிதாக யோசித்து தரத் தொடங்கினாள். இதேபோல் ரவிக்கைத் துணிக்கு பதில் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் ஜாடி என்று வெற்றிலை பாக்கு, சுண்டலுடன், கொலு பார்க்க வருபவர்களுக்கு தர துவங்கினாள். நவராத்திரிக்கு நாலு வாரம் முன்பு இந்த முறை என்ன செய்யலாம் என்று யோசிக்கிற அளவுக்கு அவளுடைய ஆர்வம் இருந்தது.
படிக்கிற காலத்தில் எனக்கு சரஸ்வதி பூஜை மிகவும் பிடித்த நாள். அன்று எல்லா புத்தகங்களையும் பூஜையில் வைத்து பூ போட வேண்டும். எப்போதும் புத்தகம் எடுத்து படி என்று சொல்லும் என் அப்பா, சரஸ்வதி பூஜை அன்றும் சொல்வார். நான் பூஜையில் புத்தகம் இருக்கிறது, எனவே எடுக்க கூடாது என்பேன். இல்லாவிட்டால் மட்டும் நீ உடனே படிச்சு கீழிச்சிட போறே என்று திட்டுவார். மறுநாள் விஜயதசமி அன்று பூஜையை முடித்து, புத்தகம் எடுத்து படிக்க வேண்டும். நான் புத்தகத்தை எடுத்து பத்து நிமிடத்தில் தூங்கி விடுவேன். “புத்தகத்தை எடுத்தால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும்” என்று முதுகில் சுளீரென்று வைப்பார் என் அப்பா. அதன் பிறகு, முதுகை தடவிக் கொண்டே படிக்க ஆரம்பிப்பேன். என் அப்பா ஆபீஸ் போனதும், புத்தகத்தை தூக்கி போட்டுவிட்டு விளையாட போய்விடுவேன்.
இந்த வருடம் கொரோனா பாதிப்பால் கிப்ட் ஐட்டத்துடன், கபசுர குடிநீர், முக கவசம், டெம்பரேச்சர் பார்ப்பதற்கான கருவி எல்லாம் வாங்கி வைத்திருக்கிறாள் என் மனைவி. டெம்பரேச்சர் நார்மலாக இருந்தால் தான் உள்ளே அனுமதி என்று ஒரு போர்டும் தயாராக வைத்திருக்கிறாள். அதை வாசலில் வைப்பதாக ஏற்பாடு. என் பேரன் டெம்பரேச்சர் பார்த்து நார்மல் என்றால் அனுமதிப்பான். அதற்கு அவனுக்கு பயிற்சி தரப்படும் வேலை நடந்து வருகிறது. இந்த முறை நவராத்திரி கொஞ்சம் கலாட்டாவாக தான் இருக்கும் போலிருக்கிறது. நல்லபடியாய் யாரிடமும் சண்டை இல்லாமல், வருகிறவர்களுக்கு டெம்பரேச்சர் நார்மலாக கொரோனா இல்லாமல் வரவேண்டும் என்று நான் என் இஷ்ட தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கிறேன். என் மனைவியோ கொரோனா சோதனைக்கு தயார் நிலையில் இருக்கிறாள்.

Leave a comment
Upload