
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
மாயை. எல்லாம் மாயை. இந்த உலகத்தில் எதுவும் சத்தியம் அல்ல, நிரந்தரமல்ல என்று எண்ணுபவர்கள் உண்டு. பிரபஞ்சம் முழுவதும் மாயைதான். பௌத்தம் இதைத்தான் சொல்கிறது. ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல அத்வைதம். பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக பிரம்மம் என்ற பரம்பொருள் இருக்கிறது என்கிறது அத்வைதம். இந்த உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் நம் கண் முன் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. செடிகள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள் இவையெல்லாம் இருந்தும் மாயை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். மாயை என்றால் எதுவும் இல்லாத விஷயம் என்று அர்த்தமல்ல... முயல் கொம்பு என்கிறோம், மலடி மகன் என்ற வார்த்தை உண்டு. அது போல் அல்ல... மாயை என்பது கானல் நீர் போன்றது. கானல் நீர் நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், அதனை பருக முடியாது.
மாயை என்பது அப்படிப்பட்ட ஒன்றுதான். ஞானிகளுக்கு இந்த உலகம் கண்களுக்குத் தெரிகிறது. மாயை என்பது நிரந்தரமல்ல என்றும் ஞானிகள் கூறுகின்றனர். பாம்பு போன்ற ஒரு கயிற்றை நாம் மிதித்துவிட்டு, பாம்பு என்று பயந்து நடுங்கி விடுகிறோம், பதற்றப் படுகிறோம், வியர்க்கிறது. ஆனால் பாம்பு அல்ல என்று தெரிந்தவுடன், நாம் சகஜ நிலைக்கு திரும்புகிறோம். பாம்பாக இல்லாத ஒரு விஷயத்தை நாம் மிதித்து பயப்படுவது போல் தான் இந்த உலகமும். அதுபோன்று உலகம் என்பது பிரம்மத்தை சார்ந்த ஒரு தோற்றம் மட்டுமே. ஞானம் கிடைத்தவுடன் அந்த தோற்றம் நமக்கு தெரிவதில்லை. உண்மை புரிகிறது.
மாயை என்பதற்கு அது இல்லாதது என்ற பொருள் அல்ல... நம் கண்ணுக்குத் தெரியாத பொருள் அல்ல. நமக்கு ஞானம் வருகிற வரையில் கிடைக்கக்கூடிய ஒரு தோற்றம் மட்டுமே, நமக்கு ஞானம் வருகிற வரையில் தெரிகிற ஒரு தோற்றம் மட்டுமே, கனவு காண்பது போல் தான் மாயை என்பது. கனவிலிருந்து விழித்த உடன் நாம் வேறு உலகத்திற்கு செல்கிறோம். விடிந்தவுடன் உண்மையான நிலை திரும்புகிறோம். அது போன்றதுதான் தற்காலிக உண்மைதான்.
மாயை என்பது ஞானிகளை பொறுத்தவரையில் பூஜ்ஜியம் தான், சூனியம் தான். ஆனால், மனிதர்களுக்கு அந்த பூஜ்ஜியம் அதற்கு முன்போ பின்போ பல இலக்கங்களை கொண்டு, இவர்களுக்கு பத்து நூறு ஆயிரம் என்பது போல் பல விதமாக இந்த மாயை தெரிகிறது.
ஞானியின் வெளிச்சம் நமக்கு இருட்டாகத் தெரிகிறது. கிளிஞ்சல்களில் சூரிய ஒளி படும் போது அது வெள்ளி உலோகம் போல் காட்சியளிக்கும். நம் கண்களின் சில நொடிகளுக்கு அப்படித் தெரிகிறது. ஞானிகளுக்கும் இந்த உலகம் அப்படிதான் பகல் வெளிச்சமாகவும், நமக்கு மட்டும் இருட்டாகவும் தெரிகிறது. இதைத்தான் ஞானியின் பகல், நமக்கு இரவு என்று சொல்வதுண்டு.
ஓவியம்: TSN

Leave a comment
Upload