

காவிரி மைந்தன்

மேகலையால் மூடிக்கொள்ளும் மோகனமென்ன?
அன்பு தேவியே!
நாளும் என்நெஞ்சில் தேன்வார்க்க நீ வேண்டும் என்று நான் கேட்டது நினைவில் உண்டா?
தேவதையின் பாதங்களுக்காக மயிலிறகும் மல்லிகையும் கலந்தபடி பாதை செய்வேன்.. பொன்னிதழில் புன்னகையை சிந்தும் நீ தாரகையோ?
பூமுத்தம் தருவதில் இன்னும் என்ன தாமதமோ?
களிநடனம் புரியும் கள்ளியே உன் மனம் இருவிழி வாசலிலும் தெரிகிறதே!
மறுமொழி கூற தயங்கியபடி மெளனத்தில் குடியிருக்கும் உன்னை என் உள்ளத்தால் கொள்ளையிட்டபோது.. வஞ்சியே உன் விழிகள்தானே இமைச்சிறகை மெல்ல அசைத்து சம்மதம் தந்தன!
ஆசையில் நெஞ்சம் துடிக்கிறபோதெல்லாம் அன்பின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன!
ஆனந்தத்தேன் வழியும் பூவல்லவா நீ?
உனை அன்றாடம் சந்திக்கும் பொழுதுகள் வேண்டும்!
கடிகார முள் கூட நமக்கிடையே இருக்கக் கூடாது என்று அதனைக் கைகழுவி பல நேரம் ஆகிறது!
கரங்களிலே ஆரமென்ன.. கைதழுவக் கேட்பதென்ன.. மெய்மறக்கும் நிலைகாண மேனியெங்கும் கொதிப்பதென்ன.. ஐவகை பாணங்களும் பாய்ந்திடும் பொழுதினிலே.. நான்கு குணங்களுமே உன்னில் இதம்பதமாய் சூழ்கையிலே ஓரிரு சொல்கூட சொல்ல முடியாமல் உன்பாடு திண்டாட்டம்தான்!
ஒரு வசந்த வைபவம் இப்படியென்று முன்னுரை தந்தேன்!
கேட்ட மாத்திரத்தில் உன்னை நீ முழுதாய் தந்தாய்!
தித்திக்கும் தேனள்ளி நானாகப் பருகிடவே .. என் திங்களே வா.. அருகே.. அள்ளியணைத்திடவும் அம்மம்மா பாடிடவும் கொஞ்சும் என் பைங்கிளியே..
மஞ்சமது வேண்டும் என பிடிவாதம் செய்ய மாட்டேன்.. உன் நெஞ்சமது போதுமென்றே மார்மீது சாய்ந்தேன்!
தேர்ந்தெடுப்பதில் எனக்குள்ள திறமைகண்டு தேவிக்குத்தான் எத்தனை சந்தோஷங்கள்?
நாளை வரை காத்திருக்க நம்மால் முடியாதென்றே இன்று ஒரு திருநாள் கண்டோம்!
விழியால் வலைபோட்டு விடியும்வரை தொடர்ந்திடும் விழாவல்லவா?
அன்பிலே ஆட்சி செய்தபடியால் நானென்றும் உன் அடிமை ஆனதில் வியப்பில்லையே! கண்மணியே!
காதல் அகராதியில் நானெழுதும் கடிதங்கள் உனக்கான பஞ்சணைதானே!
அவற்றை வாசிக்கும் நேரமெல்லாம் நேசிக்கும் உந்தன் நெஞ்சம் என்னில் தழுவிப் படருதடி!
கணநேரப் பிரிவைக்கூட தாங்கிட இயலாத இதயம் கனமாய் ஆனதடி!
கவிமழையால் உனை நனைத்திடத்தான் என் நெஞ்சம் கார்மேகம் சுமக்குதடி!
அடியே என்று உனை அன்பாய் அழைக்கும்போது ஆனந்த சொர்க்கமன்றோ என் முன்னே தெரியுதடி!
கண்ணே! கனியே! கன்னல் தமிழே! கவிபாடும் என் நிலவே!
மேவிவரும் வெள்ளமென ஆசையில் உன்னை நான் அள்ளி அணைக்கையில் உன் மேகலையால் மூடிக்கொள்ளும் மோகனமென்ன?
தாகமது தீர்ப்பதற்கு தரவேண்டிய மது உன் இதழ்களில் இருக்கிறதென்று நான் கண்டுபிடித்ததற்கு மறைவான இருள்மூழ்கி தவறாமல் தந்திட்டாய் போதை!
அதுதானே.. காதலிலே மூழ்கியவர் காண்கின்ற பாதை!!

Leave a comment
Upload