தொடர்கள்
பொது
டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு... - தீட்சிதா ஶ்ரீ

2020923200406183.jpeg

பெரம்பலூர் அருகே குளத்துக்குள் வண்டல் மண் எடுக்க பள்ளம் தோண்டியபோது, அங்கு பண்டைய டைனோசர் முட்டைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் செல்லும் சாலையில் குன்னம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ‘வெங்கட்டான் குளத்தில்’ மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக, கடந்த 21-ம் தேதி கடப்பாறை மற்றும் மண்வெட்டியால் கிராம மக்கள் வண்டல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பூமிக்குள் புதைந்திருக்கும் நிலையில், பண்டைய மாமிச கார்னோட்டரஸ் மற்றும் சைவ சௌரபோட் டைனோசர்களின் முட்டைகள், ஆமைகள், நத்தைகள், சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கல்மரங்களின் படிமங்கள் வெளி வந்திருக்கின்றன.

இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வாளர்களிடம் கேட்டதற்கு, ‘இவை அனைத்தும் சுமார்12 முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்’ என்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, மண்ணுக்குள் கிடைத்த கடல்வாழ் படிமங்களையும், முட்டை வடிவிலான படிமங்களையும் வருவாய் துறையினர் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். இப்பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து விலங்கியல் ஆய்வாளர்கள் தரப்பில், “இந்த கார்னோட்டரஸ் டைனோசர்கள், தென் அமெரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்பட்டு உள்ளன. இவை அசாத்திய உடல் பலத்துடன், மற்ற மிருகங்களை வேட்டையாடி வந்திருக்கிறது. இவை சுமார் 1.50 டன் எடையுடன் சுமார் 30 அடி நீளத்தில் இருந்திருக்கிறது. இவற்றின் வலுவான கால் தசையால், பல்வேறு மிருகங்களை வேகமாக வேட்டையாடும் திறன் கொண்டவை” என தகவல் தெரிவிக்கின்றனர்.