
அமெரிக்கா ஒரு கனவு தேசம்….. எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றினால், வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று துடிப்போடு பல வெளிநாட்டினர் காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று விட்டால், சொர்க்கத்தில் வாழ்வதாக பலரின் கணிப்பு உள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 325 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அமெரிக்கா என்பது ஐம்பது மாநிலங்களும் , ஒரு கூட்டரசு மாவட்டமும், ஐந்து தன்னாட்சி பகுதிளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும்.
உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும், பல இனமக்கள், அமெரிக்காவில் பெரிய அளவில் குடியேறியுள்ளனர். அமெரிக்காவின் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாக, உள்நாட்டு உற்பத்திக்கான GDP 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பது உலகின் மொத்த கொள்முதல் திறனில் 21% ஆகும்.
அமெரிக்கா உலகின் வல்லரசு நாடாக விளங்கினாலும், இன்றளவும் பல நாடுகளில் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் தான் வர்த்தகம் நடைப்பெற்று வருகிறது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உலக போலீஸ்காரர் அமெரிக்கா என்ற அடைமொழியும் அந்த நாட்டுக்கு உண்டு. இது அமெரிக்கா பற்றிய உலக மக்கள் இடையே இருக்கும் உடைக்க முடியாத இமேஜ்.
உலகின் வல்லரசு, ஒரு பொத்தானை தட்டினால், உலகின் எந்த மூலையில் இருக்கும் நாடும், அமெரிக்காவின் போர் ஆயுதங்களால் பஸ்பமாகி விடும் என்கிற நிதர்சனமான பேச்சும் உண்டு.
மறுபக்கம் அமெரிக்காவில் வாழும் கறுப்பினத்தையும், குழந்தைகளையும் வறுமையே வாட்டி வருகிறது எனும் ஆச்சர்யமான தகவல் வெளியானதை படித்த போது அதிர்ந்தே போனோம்.
சில வாரங்களுக்கு முன்பு… அமெரிக்காவில் வசிக்கும் 8.98 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலையில்லாததால், தங்களுக்கு அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை வழங்கவேண்டும் என மனுக்கள் வந்திருப்பதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் ஆடினாலும், சில மாதங்களாக வெளிநாட்டு கொள்கையில் அமெரிக்கா எடுத்த சில நிர்வாக சீரமைப்புகள், அமெரிக்கர்களுக்கு வேலையின்மையை உருவாக்கிவிட்டது என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சென்ற மே மாதத்தில், அமெரிக்காவில் 18 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
நம்மூரை விட அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை அதிகம். அத்துடன் அமெரிக்காவில் என்ன சம்பாதித்தாலும் அதில் பெருமளவு அரசிற்கு வரியாக செலுத்திவிட வேண்டும்.
அமெரிக்காவில் நால்வர் அடங்கிய குடும்ப வருட வருமானம் 26,200 அமெரிக்க டாலருக்கு கீழே இருந்தால், அவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என அமெரிக்க ஹெல்த் மற்றும் ஹியூமன் சர்வீஸ் துறை கணக்கிடுகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் 55 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். கொரோனா நோய் பரவலுக்கு பிறகு, மேலும் 8 லட்சம் அமெரிக்கர்கள் வறுமையில் தத்தளித்து வருகிறார்கள். நடப்பாண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை 16.7 சதவீத அமெரிக்கர்கள் ஏழ்மை நிலைக்கு வந்துவிட்டனர் என்று கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் நான்கு பெரிய நகரங்களில், கொரோனா பரவல் மற்றும் வேலையின்மையால், நான்கு பேர் கொண்ட பல குடும்பங்கள் தற்போது ஏழ்மை நிலைமைக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அரசாங்க ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கலிஃபோர்னியா அருகில் வசிக்கும் 24 வயதான கிரிஸ்டின் ஜெப்கோட் என்பவர், தனக்கும் தனது கணவருக்கும் வேலையில்லை என்ற நிலைமையில் வீட்டில் முடங்கி விட்டதாக தெரிவிக்கிறார். இவரது கணவர் வைத்திருந்த, இயந்திரங்களை சரி பார்க்கும் கருவிகளை விற்று குடும்பத்தை சில மாதங்கள் நடத்தி வந்துள்ளார். மின்சார ஜெனரெட்டர் மூலம் வீட்டிற்கு மின்சாரம் பெற்று வந்த நிலையில், ஜெனரேட்டருக்கு எரிபொருள் வாங்கி ஊற்றக்கூட வசதியில்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. வறுமை அதிகமானதால், வீட்டு வாடகை மற்றும் குழந்தைகளை பராமரிக்க பணமில்லததால் கிரிஸ்டின் தனது கர்ப்பப்பையில் உருவாகும் சினை முட்டைகளை விற்பனை செய்ய கருவுறுதல் மருத்துவமனைக்கு சென்றார். சினை முட்டைகள் போதிய வளர்ச்சியுடன் ஆரோக்கியாமாக இருக்கவில்லை என பரிசோதனையில் தெரியவந்ததால், தனது சினை முட்டைகளைக்கூட விற்க முடியாமல் கிரிஸ்டின் என்ற அந்த பெண்மணி தனது வீட்டிற்கு சோகத்துடன் திரும்பியுள்ளார்.
அமெரிக்கா அரசாங்கம் பணியில்லாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கிய 3900 அமெரிக்க டாலர்களை பெற்று கிரிஸ்டின் தனது மூன்று மாத வாடகை பாக்கியை செலுத்தி உள்ளார். இந்த அமெரிக்க அரசின் கேர் ஆக்ட் நிவாரண தொகை, ஜூலை மாதம் வரை வழங்கப்பட்டதாக தகவல். மாத கடைசியில் குழந்தைகளுக்கு உணவு வாங்க போதிய வருமானம் இல்லாததால் குழந்தைகளுக்கு மட்டும் உணவு அளித்து விட்டு, பல நாள் கிறிஸ்டின் சாப்பிட எதுவும் உணவு இல்லாமல் இருந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா காலத்தில் வேலை இழந்த ஒரு குடும்பம், வீட்டு வாடகை பாக்கி செலுத்ததால், மாரிகோப்பா கவுண்டி காவல்துறையினர் வீட்டை காலி செய்து அழைத்து வரும் புகைப்படம் அமெரிக்க நாளிதழ்களில் ஹாட் டாபிக்காக வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஏழ்மை நிலைமையில் இருக்கும் பெரியவர்களுக்கு 1200 டாலரும், சிறியவர்களுக்கு 500 டாலரும் அரசு CARES (The Coronavirus Aid, Relief, and Economic Security (CARES)) Act படி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எகானிமிக் ரிலீஃப் பேக்கேஜ் என அமெரிக்க அரசு வழங்கிய போது, கிட்டதட்ட 4 மில்லியன் பேர் வரையில் ஏழ்மையில் வாடியவர்கள் குறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களில் கொரோனா பாதிப்பு அமெரிக்கர்களை ஏழ்மை நிலைமைக்கு தள்ளி உள்ளது. இதற்கிடையே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், அமெரிக்காவில் இருக்கும் பிரபல செய்தி சேனலான சிஎன்என் பெயரை சொல்லி ‘கொரோனா… கொரோனா என்று பரப்பி விட்டது இவர்கள்தான்’ என திட்டி மெட்ராஸ் தமிழில் உபயோகப்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தையை ஆங்கிலத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
என்ன தான் ஜாம்பவான் வல்லரசாக அமெரிக்கா இருந்தாலும், தற்போது அங்கு நிலவும் ஏழ்மை நிலையினையும், ஒரு வேளை உணவிற்கு அங்கு ஏங்கும் மக்களின் துயர நிலையையும் அமெரிக்க பத்திரிகைகளே தோலுரித்து காட்டியுள்ளன என்பதே நிதர்சனம்!

Leave a comment
Upload