தொடர்கள்
Daily Articles
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 10 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

ஏலாப் பொய்கள் உரைப்பான்

கண்ணபிரான் வெண்ணெயில் கொண்டுள்ள ஆசையானது உலகமெல்லாம் அறியும். “கடை வெண்ணெய் உண்டாயை அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” (முதல் திருவந்தாதி 22) என்கிறார் பொய்கை ஆழ்வார். இப்படி அடியவர்கள் கைப்பட்ட பொருளை அடைவதற்காக அவன் எளியனானான் என்பது கண்டு ஆழ்வார்கள் மோகிக்க அவனுடைய விரோதிகளோ இதையே சுட்டிக் காட்டி அவனை ஏசுகின்றனர். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
நெய் தொடுவுண்டு ஏசும்படியன்ன செய்யும் எம்மீசர்” (திருவிருத்தம் 54) என்றருளிச் செய்கிறார் நம்மாழ்வார். இங்கே பெரியவாச்சான்பிள்ளை உரை:

அயர்வறுமமரர்களதிபதியாய் இருந்து வைத்து பூமியிலே வந்தவதரித்துத் தன்பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சமுள்ள த்ரவ்யத்தாலல்லது தரியாதானாய் அதுதான் நேர்கொடு நேர் கிடையாமையாலே களவுகண்டமுதுசெய்து தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படி யிருக்கிறவர்.

சிசுபாலன் மட்டுமா ஏசினான். ஜராசந்தனும் கூட ‘நீ இடையன்; ஆகையாலே என்னோடு போர் புரிவதற்கு உனக்குத் தகுதி கிடையாது’ என்று ஏசினான். இப்படி உலகோர்கள் எல்லோரும் ஏசும்படியாக ஏன் பிறந்தான்? திருமங்கையாழ்வார் ‘மானமருமென்னோக்கி’ என்கிற பதிகத்திலே ஒருத்தி எம்பெருமான் செய்த செயல்களைக் கூறி அவனை ஏசுவதாகவும் மற்றொருத்தி அச் செயல்களே அவனுக்குப் பெருமை விளைப்பதாகக் கூறுவதாகவும் அருளிச் செய்கிறார். அதிலே ஒரு பாசுரம்:

ஆழ்கடல்சூழ் வையகத்தார் ஏசப்போய் ஆடிப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு
இவ்வேழுலகுண்டும் இடமுடைத்தால் சாழலே
.
(பெரியதிருமொழி 11-5-3)

“தோழீ! நீ உகக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் கண்ணனாகப் பிறந்து கள்ளவழியால் தயிர் வெண்ணெய் பால் முதலியவற்றை வாரியுண்டான். இதனால் சிசுபாலன், ஜராசந்தன் போன்றோர்கள் அவனை ஏசும்படியாகவன்றோ நடந்து கொண்டான்” என்கிறாள் ஒருத்தி. அதற்கு மறுமொழி கூறுகிறாள் மற்றொருத்தி: “தோழி! திருவாய்ப் பாடியில் இடைச்சிகள் சேமித்து வைத்தவற்றை அமுது செய்தானென்பது உண்மைதான். ஆனால் நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு நிறைந்துவிடுகிற திருவயிறோ அவனுடையது? இவ்வேழு உலகங்களையும் உண்ட போதும் இன்னும் விசாலமாக இடமுடைத்தாகவே யன்றோ இருந்தது. நம்மைப்போலே வயிற்றை நிறைப்பதற்காக அவன் உண்டாலன்றோ அவனுக்குக் குறை சொல்லலாம்! அடியவர்கள் கைப்பட்ட பொருளை உண்ணாவிட்டால் தரிக்கமாட்டாத மஹா குணத்தை வெளியிடவன்றோ இப்படித் தாழ்குழலார் வைத்த தயிரை உண்டான்! இப்படிப்பட்ட இவனுடைய எளிமையைக் கொண்டாட வேண்டாமா?” என்றாள்.

இப்படி வெண்ணெயுண்பதற்காக அவதரித்த கண்ணன், அவர்கள் கொடுத்த வெண்ணெயை உண்டு திருப்தி பெறாமல் களவு செய்து உண்டானாம். இது எதற்காக வென்னில், அப்போதுதானே இவன் அடியார்களிடம் கட்டுண்டு, அடியுண்டு கிடந்து தன் எளிமையை வெளிப்படுத்த முடியும்! ஆய்ச்சியரழைப்ப வெண்ணெய் உண்டு (பெரியதிருமொழி4-10-1) என்கிறவிடத்து உரையில்,

பஞ்சலக்ஷம் குடியில் இடக்கை வலக்கை வாசியறியாத இடைச்சிகள் கையெடுத்துக் கூப்பிடும்படி வெண்ணெய் அமுது செய்து
என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ளபடியே ஐந்து லக்ஷம் குடிகள் நிறைந்த திருவாய்ப்பாடியில் ஒருவர் தப்பாமல் “என் வீட்டில் வெண்ணெய் களவு போயிற்று, என் வீட்டில் நெய் களவு போயிற்று” என்று கையெடுத்துக் கதறும்படி அமுது செய்துவிட்டான் கண்ணன்.


இப்படிக் களவு செய்தபோது இவன் செய்த திருவிளையாடல்கள் தான் எத்தனையெத்தனை! ஒன்றுமே அறியாத சிறுபிள்ளை போல் இவன் பேசிய பேச்சுக்கள்தான் எத்தனையெத்தனை! பலராமனோ மிகவும் சாது. அவனுடைய தம்பியாகப் பிறந்திருந்தும் இவன் இப்படித் தீம்புகள் செய்கின்றானே என்று திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ப் பெண்கள் எல்லோரும் யசோதையிடம் முறையிடுகின்றனர்:

மைந்நம்பு வேற்கண்நல்லாள் முன்னம் பெற்ற வளைவண்ணநன்மாமேனி
தன்நம்பி நம்பியுமிங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்குய்வில்லை என்செய்கேனென்செய்கேனோ

(பெரிய திருமொழி 10-7-4)

வெள்ளிப் பெருமலைக் குட்டனான பலராமனும் இத்திருவாய்ப்பாடியில் வளர்கிறான். ஆனால் அவன் இப்படிப்பட்ட தீம்புகளைச் செய்ததேயில்லை. ஆனால் கண்ணனோ பொய்ந்நம்பி-பொய்யே வடிவெடுத்தவன். மெய்கலவாத பொய்யுரைகள் உரைப்பதில் வல்லவன். புள்ளுவன்-மிகவும் வஞ்சகன். தயிர் கடைகிறபோதே தொடங்கி, இவர்கள் எங்கே கொண்டு போய் வைக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அடியொற்றித் திரிபவன். கள்வம் பொதியறை - கள்ளத் தனத்தையெல்லாம் இட்டு வைக்கைக்கு ஒரு கொள்கலம் போன்றவன். போகின்றவா தவழ்ந்திட்டு - களவுகளை வேண்டினபடி செய்துவிட்டு ‘இக்குழந்தையும் இவ்வளவு செயல் செய்யுமோ?’ என்று ஒருவரும் நம்ப முடியாதபடி தவழ்ந்து செல்லுகிறபடியை என்னவென்று சொல்வது?
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒருபுள்ளுவன் பொய்யே தவழும்

(பெரியாழ்வார் திருமொழி 3-1-1)
என்கிறார் பெரியாழ்வாரும். இங்கே மணவாளமாமுனிகள் வ்யாக்யானம்.

(ஒருபுள்ளுவன் பொய்யே தவழும்) புள்ளுவ மாவது மெய்போலேயிருக்கும் பொய். உண்டிருக்கச் செய்தே உண்டிலேன் என்கையாலே அஸத்யவாதி யென்று தோற்றுமிறே. “ஒரு புள்ளுவன்” என்றது-களவுக்கு அத்விதீயனென்றபடி. (பொய்யே தவழும்) தளர்நடையிட்டுத் திரிகிறவனுக்கு க்ஷமரல்லாதாரைப் போரைப் போலே தவழுகிறதும் க்ருத்ரிமமென்று தோற்றுமிறே.

இப்படி எல்லாவற்றையும் உண்டு விட்டு ஒன்றுமே தெரியாதவன்போல் தவழ்வதும், அகப்பட்டுக் கொண்டானாகில் மெய்யே கலவாத பொய் சொல்லுவதுமாக இவன் திரிவது போல் பலராமன் ஒரு நாளும் செய்ததில்லை. இப்படி இவன் சூதும் வஞ்சகமும் கள்வமும் மிக்கவனாக இவ்வூரில் இருந்தால் இடைச்சிகளுக்கு வாழ வழியில்லை: இவன் கீழே எங்ஙனே குடியிருப்பேனென்று யசோதையிடம் முறையிடுகிறாள் ஒருத்தி.

கண்ணபிரான் வெண்ணெய் திருடுவதற்காக ஆயர் மனைகளிலே புகுவன்; சத்தம் கேட்டு யாராவது வந்து ‘பயலே நீ யார்?’ என்று கேட்டால் “நான் பலராமனுடைய தம்பி” என்று சொல்லி விடுவானாம்! பலராமன் மிகவும் நல்லவன்; வம்பு தும்பு செய்வதில்லை என்ற பெயர் அவனுக்கு உள்ளதால் அவனுடைய தம்பியான இவனும் யோக்யனாகவே இருப்பான் என்றெண்ணி விட்டு விடுவார்களென்று நினைத்தான் போலும்!

அதற்கும் மேலே அவர்கள் கேள்வி கேட்டால் மெய்யே சிறிதும் கலவாத பொய்யும் சொல்லித் தப்பிக்க முயல்வான் என்கிறார் லீலாசுகர்:
கஸ்த்வம் பால! பலாநுஜ: கிமிஹதே, மந்மந்திராசங்கயா
யுக்தம் தத் நவநீதபாண்டகுஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா:ஞு
மாத: கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும் மாகாவிஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்லவீப்ரதிவச: க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாதுந:ஞுஞு

(க்ருஷ்ணகர்ணாம்ருதம் 2-81)

வெளியிலிருந்து தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிய கோபிகை ஒருத்தி, கண்ணன் உறியிலிருந்த வெண்ணெய்ப் பானைக்குள் கையை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு விட்டாள். அவனை நோக்கி கோபிகை கேட்கிறாள்:

கோபி : (கஸ்த்தவம் பால!) யாராடாநீ?

கண்ணன் : (பலாநுஜ:) நான் பலராமனுடைய தம்பி.

கோபி : (கிமிஹதே) எதற்காக இங்கே வந்தாய்?

கண்ணன் : (மந்மந்திரா சங்கயா) இவ்வாய்ப் பாடியில் எல்லா வீடுகளும் ஒன்று போலவே இருப்பதால் என் வீடு தான் என்று எண்ணி வந்துவிட்டேன்.

கோபி : (யுக்தம் தத்! நவநீத பாண்டகுஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா:?) அது சரி. உள்ளே வந்த பின் இது உன் வீடல்ல என்று தெரிந்திருக்குமே! அப்படியிருக்க ஏன் வெண்ணெய்த் தாழியில் கை வைத்திருக்கிறாய்?

கண்ணன் : (மாத: கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும்) தாயே! நான் மேய்க்கின்ற கன்றுகளில் ஒன்று எங்கோ தவறி விட்டது. அது இங்கே வெண்ணெய்த் தாழிக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தான் கையிட்டேன். கோபிக்காதே என்றானாம்.

ஒருவன் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் திருட முயன்றான். அப்போது அம்மரத்திற்குச் சொந்தக்காரன் அங்கு வந்துவிடவே திருடன் கீழே இறங்கி விட்டான். ஆனால் பிடிபட்டு விட்டான். “எதற்காகத் தென்னை மரத்தில் ஏறினாய்” என்று கேட்டான் சொந்தக்காரன்.

“புல் பிடுங்குவதற்காகத்தான் தென்னை மரத்தில் ஏறினேன்” என்றான் திருடன்.

“தென்னை மரத்தில் ஏது புல்?” என்று அவன் கேட்க...

“அதுதான், தென்னை மரத்தில் புல் இல்லை என்று தெரிந்ததும் கீழே இறங்கி விட்டேனே” என்றானாம்!

இது போலவன்றோ கண்ணன் சொல்வதும்! தன் வீடு தான் என்று தெரியாமல் நுழைந்து விட்டானாம்; பிறகு தொலைந்து போன கன்றுக் குட்டியை வெண்ணெய்த் தாழியில் தேடுகிறானாம்! இப்படிப் பேசுகிறவனை என்னவென்று சொல்வது? ‘பொய்ந்நம்பி’ என்கிறார் திருமங்கை ஆழ்வார். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணுமல்லவா? எனவே அவனை “மெய்போலும் பொய்வல்லன்” (திருவாய்மொழி 10-4-5) என்கிறார் நம்மாழ்வார். அவர் அவனைப்பற்றி கூறியதும் சரியன்று. ஆண்டாள் இவனை “ஏலாப் பொய்கள் உரைப்பான்” (நாச்சியார் திருமொழி 14-3) என்று அருளிச் செய்கிறாளே! அதுதான் பொருத்தமானது!