தொடர்கள்
Daily Articles
வாசி யோசி.. - 10 - வேங்கடகிருஷ்ணன்

2020908202455586.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...

2020928222001383.jpg

கலந்து பேசு, பேரம் பேசு.

உங்களுக்கு பேரம் பேச பிடிக்குமா? தெரியுமா? இந்த இரண்டு கேள்விக்கும் வித்தியாசம் உண்டு. உங்கள் வீட்டுக்கு வரும் காய்கறிகாரரிடம் ஒரு ரூபாய் விலை குறைக்கச் சொல்லி பேசுவதில் துவங்கி, இரு நாடுகளுக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை வரை எல்லாவற்றிலும் பேரம் பேசும் கலை, ஆம்! இப்போதெல்லாம் அது கலைதான். இதை பல்கலைக்கழகங்களில் தனிப்பட்ட பாடமாகவே எடுக்கத் துவங்கி விட்டார்கள். இதை சரியானபடி புரிந்துகொண்டு பயன்படுத்துபவர்கள், எந்த விவாதத்திலும் வெற்றியை மட்டுமே ருசிப்பார்கள். அவர்கள் யாரிடம், எங்கே, எப்போது பழகினாலும் அதன் மூலம் தங்களுக்கும் அல்லது தங்களின் நிறுவனத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாய் லாபம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்.

சரி பேரம் பேச தெரியவில்லை என்றால் என்ன பெரிசாக ஆகிவிடப்போகிறது? என்கிறீர்களா..? அக்கம் பக்கத்தில் இருக்கிற மற்றவர் செய்யவேண்டிய வேலைகள் கூட நம் தலையில் வந்து விழும். எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிட்டு, அதற்கான ஊதியத்தை குறைந்த அளவிலேயே பெறுவோம். தேவையே இல்லாமல் பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து இ.வா என்ற பட்டத்தை பெறுவோம். நம்முடன் பழகுபவர்கள், தங்களுடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டு நம் தலையில் நன்றாக மிளகாய் அரைப்பார்கள். இதெல்லாம் தேவையா? போட்டியும் நெருக்கடியும் அதிகமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை நிலையில், மாணவர்கள் முதல் பெரிய நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள், வியாபாரிகள் என்று எல்லோருக்கும் பேரம் பேச தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியமான ஒன்று. இதன் அடிப்படைகளை நமக்கு சொல்லித் தருவதே ‘நெகோஷியேட் டு வின்’ (Negotiate To Win) என்ற இந்த புத்தகம். இதன் ஆசிரியர் வழக்கறிஞர், எழுத்தாளர், பிரபல பேச்சாளர் ஜிம் தாமஸ்.

தினசரி வாழ்க்கையில் நாம் நிறைய பேரிடம் பேரம் பேசுகிறோம். பெற்றோர், குழந்தைகள், அதிகாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வியாபாரிகள், பொருட்களை விற்பவர்கள், கான்டிராக்டர்கள், மெக்கானிக்குகள் என்று அகில உலகமும் இந்தப் பட்டியலில் அடங்கிவிடும். இதில் யாருடன் நீங்கள் பேசினாலும் வெற்றி உங்களுக்கு வேண்டுமா? அதற்கான விதிகள் பதினைந்தினை (15) உங்களுக்காக தருகிறார் ஜிம் தாமஸ். அந்த முக்கியமான விதிகள் இதோ உங்களுக்காக ஓரிரு வரிகளில்.

விதி 1..

ஒரு விஷயத்தை பேரம் பேச துவங்குவதற்கு முன்னால், அதைப்பற்றி நன்றாக கேட்டு, படித்து, யோசித்து, புரிந்து கொள்ளுங்கள். சரியான விவரங்கள் சேகரிக்காமல் பேசப் போனால், எதிராளி உங்களை ஒரே விழுங்காக vizhungi விடுவார்.

விதி 2..

கூடியவரை எதிர்ப்பக்கம் பேசுபவரை பேச விடுங்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டீர்களானால், அதற்கு ஏற்றார்போல் உங்களின் ஆட்டத்தை முடிவுசெய்து கொள்ளலாம்.

விதி 3..

பேரம் பேசுவதற்கு முன்னால், நீங்கள் எந்த தொகைக்கு உங்கள் பொருளை விற்க விரும்புகிறீர்களோ அதற்கு மிக அதிகமாக அல்லது மிகவும் குறைவான அளவிற்கு வந்துவிடவேண்டும் உதாரணமாக நீங்கள் ஒரு பொருளை நூறு ரூபாய்க்கு விற்க நினைத்தால் நீங்கள் 300 ரூபாயில் துவங்க வேண்டும் அதே நேரம் நீங்கள் வாங்க நினைக்கும் போது பத்து ரூபாயில் ஆரம்பிக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு தேவையான 100 ரூபாயில் பேரம் முடியும்.

விதி 4..

ஒருவேளை உங்கள் எதிர் அணியில் உள்ளவர்கள் நேரத்தை துவங்கினால் அவர்கள் என்ன தொகை சொல்கிறார்களோ அதிலிருந்து சடாரென கீழே இறங்குங்கள் உதாரணமாக அவர்கள் ஒரு பொருளை 500 ரூபாய்க்கு விற்க நினைத்தால் நீங்கள் 40 ரூபாய்க்கு மேல் இது தேறாது என்று பதில் சொல்ல வேண்டும் அப்போதுதான் அவர்கள் பதட்டமாகி ஓரளவுக்கு நியாயமான தொகைக்கு இறங்கி வருவார்கள். இங்கே எனக்கு என் சிறு வயதில் நான் சந்தித்த என்னுடைய பக்கத்து வீட்டுக்கார பாட்டி நினைவுக்கு வருகிறார். வாசலில் காய்கறிகாரன் ஒரு கிலோ கத்தரிக்காய் பத்து ரூபாய் என்று சொன்னவுடன்... அவர்கள் இரண்டு ரூபாய்க்கு தருகிறாயா என்று துவங்குவார். ஆனால், கடைசியில் 8 ரூபாய்க்கு வாங்கி விடுவார். அது போலத்தான் இது.

விதி 5..

ஒருவேளை நமது எதிரணியில் இருப்பவர் சொல்லும் அந்த ஆரம்ப தொகை நியாயமாக தோன்றினால் என்ன செய்வது? அப்போதும் சட்டென்று உடனே ஒப்புக் கொண்டு விடாதீர்கள். ஏனென்றால் அங்கும் நீங்கள் சிறிது சிரமப் பட்டு பேரம் பேசினால் விலை இன்னும் கூட சாதகமாய் முடியும்.

விதி 6..

சில சமயங்களில் பல விஷயங்களைப் பற்றிய பேரத்தை ஒரே நேரத்தில் பேச வேண்டிய சிக்கலான சூழ்நிலை அமையும். அப்போது, நீங்கள் செய்ய வேண்டியது பெரிய அளவிற்கு சிக்கலில்லாத சிறிய விஷயங்களை முதலில் பேசுங்கள். அதிக சண்டையில்லாமல், அந்த பேரம் சுமூகமாக முடிந்து விடும். இந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அடுத்து வரப்போகும் சிக்கலான மிகப்பெரிய விஷயங்களையும் சுலபமாக சமாளித்து, உங்களுக்கான சாதகமான முடிவை பெற்றுக்கொள்ளலாம்.

விதி 7..

எந்த விவாதத்தின் போதும், ஆரம்பத்தில் நிறைய விஷயங்களை எதிரிக்கு விட்டுத் தருவது போல நடந்து கொண்டு, நல்ல பெயர் வாங்குங்கள். எதிர்ப்புறம் இருப்பவருக்கு உங்களை பிடித்து விடும். அதன்பிறகு நீங்கள் கடினமாக நடந்து கொண்டாலும், அவர்கள் கையை பிடித்து முறுக்கினாலும், அழாமல் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்லும் விதிகளுக்கு சம்மதிப்பார்கள்.

விதி 8..

பல விஷயங்களை மொத்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது, அதன் நடுவே சில தாற்காலிக தீர்வுகள் தென்படும். அதில் திருப்தி அடைந்துவிடக்கூடாது. முழுவதுமாக எல்லாவற்றையும் யோசித்து, தீர்வினை முழுமையான பேசி தீர்மானித்தால் தான் இருவருக்கும் அது நலமாய் அமையும்.

விதி 9..

ஒரு மிகப்பெரிய பேரம் முடிவுக்கு வரும் சூழல் என்று வைத்துக்கொள்ளுங்கள்... சட்டென்று கைகுலுக்கி சிரித்து முடித்து விடாதீர்கள். அதே நேரம் நீங்கள் அவசியம் முடிக்க வேண்டும் என்று யோசித்து இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்கக்கூடிய நேரம். அப்படி கேட்டால், அவர்கள் உடனே அதனை சிரித்துக்கொண்டே உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். வீணாக, அந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும்.

விதி 10..

எந்த ஒரு பேரம் பேசும் நிகழ்விலும் ஒன்று இது அல்லது அது என்று இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நினைக்காதீர்கள். இவை இரண்டுக்கும் நடுவிலே மூன்றாவதாக உங்களுக்கு ஏற்ற நல்ல ஒரு தீர்வு அமைதியாய் மறைந்திருக்கக் கூடும். அதுதான் நீங்கள் இருவருமே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வதாகவும் இருக்கும். ஆகவே அதனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு அதுவே இருவருக்கும் நன்று.

விதி 11..

பேரம் பேசும் போது நீங்கள் முக்கியமாக மனதில் கொண்டு செயல்பட வேண்டியது எதையும் இலவசமாக எதிராளிக்கு விட்டு தராதீர்கள். எப்போதுமே உனக்கு இது வேண்டும் என்றால், எனக்கு அதை நீ தர வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்று, இதற்கு பதில் அது என்னும் தொனியிலேயே திட்டவட்டமாய் பேசி விடுங்கள். அதுதான் நீங்கள் இலவசமாய் எதையும் செய்வதிலிருந்து உங்களை தடுக்கும்.

விதி 12..

பேரம் பேசுவது முக்கியம் தான், ஆனால் அதே நேரத்தில் எதிர் அணியில் உள்ளவர்களுடைய நட்பும் நல்லுறவும் அதைவிட இன்னும் முக்கியம். நீங்கள் போடும் சண்டையும் கருத்து வேறுபாடும் அந்த மேஜையில் முடிந்துவிட வேண்டும். அதன் பிறகும் அது தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் வியாபாரத்தை மிக மிக பயங்கரமாக பாதிக்கும்.

விதி 13..

இந்த விஷயத்தை மாற்றவே முடியாது, அதற்கெல்லாம் இதில் இடமே இல்லை என்று எதிராளி சொல்லும்போது அதை அப்படியே நம்பி விடாதீர்கள் அதைப் பற்றியும் உங்கள் பேரத்தில் பேசிக்கொள்ள தவறாதீர்கள் தயங்காதீர்கள். இந்த உலகத்தில் மாற்ற முடியாதது எதுவுமே இல்லை நம் பிறப்பினை தவிர...

விதி 14..

கரையில் யானைக்கு பலம் தண்ணீரில் முதலைக்கு பலம். அது போல உங்களுடைய செல்வாக்கும் பலமும் எங்கே அதிக அளவில் பிரயோக படுத்த முடியுமோ அங்கேயே முக்கியமான விவாதங்களை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வீடு அல்லது அலுவலகமோ அல்லது உங்கள் நண்பர் இல்லமோ, உங்களுடைய எதிராளியை அங்கு வரச் சொல்ல வேண்டும். இது என் ஏரியா என்று உங்கள் மனது எண்ணும்போது அந்த பலம் உங்களுக்கு உங்கள் விவாதத்தில் முழுவதும் துணையாய் வரும். இன்னும் துணிச்சலாகவும் தைரியமாகவும் பேரம் பேசி நிச்சயமாக ஜெயித்து விடுவீர்கள்.

விதி 15..

இறுதியான மிக முக்கியமான விஷயம்.. பேரம் பேசுவதில் பொறுமை மிகவும் பெரியது. அவசரப்பட்டால், அதிகபட்ச இழப்பு உங்களுக்குத்தான். இதை எப்போதும் மறந்துவிட வேண்டாம். இறுதியாய் கொடுத்திருந்தாலும், இதுவே நீங்கள் முதல் முதலில் செய்து மனதில் நிறுத்தவேண்டிய விதியாகும்.

இந்த பதினைந்து விதிகளும் உங்கள் மனதில் ஆழமாய் பதியட்டும் உங்கள் வியாபாரத்தில் அல்லது வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் உங்களுக்கு என்றும் வெற்றியே கிட்டும். நீங்கள் இதை படித்து முடித்து செயல்படுத்தி, வெற்றி அடைந்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் உங்களுக்கு ஒரு பரிசு அனுப்புவேன் என்ன..? பேரம் எப்படி ஓகேவா?.....