தொடர்கள்
கவர் ஸ்டோரி
அடுத்த குறி தமிழ்நாடு அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

2020923201540798.jpeg

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றன. ‘ஆட்சியதிகாரம் யாருக்கு என்பதில் எங்கள் இருவருக்கு இடையே தான் போட்டி. மூன்றாவது கட்சி என்பது இல்லை’ என்பதை வெளிப்படையாகவே இந்த இரு கட்சிகளும் சொல்லி வருகின்றன.

காங்கிரஸ் கட்சி 1967இல் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. திமுக, அதிமுக எனும் இரண்டு கட்சிகள் மீதும் ஏறி காங்கிரஸ் சவாரி செய்ததே தவிர, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி திமுக ஆட்சி செய்த போது கூட அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. இப்போதுகூட ஸ்டாலின் தான் முதல்வர் என்றே காங்கிரஸ் சொல்லி வருகிறது.

பாரதிய ஜனதாவை பொருத்தவரை தமிழ்நாட்டில் அதன் வாக்கு வங்கி நோட்டா உடன் போட்டி என்று கேலி செய்கிற அளவுக்கு தான் அந்தக் கட்சியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. பெரிய வெற்றியுடன் மீண்டும் மத்தியில் மோடி பிரதமரானார். தமிழ்நாட்டில், பாரதிய ஜனதாவால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. ‘இது பெரியார் மண், இங்கு சனாதன வாதிகளுக்கு வேலை இல்லை’ என்கிறார் தொல் திருமாவளவன்.

இன்றுவரை, கட்சியில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தான் இருக்கிறது. அவரது பார்வை இப்போது தமிழகம் பக்கம் திரும்பியிருக்கிறது. அதிமுக கிட்டத்தட்ட பாரதிய ஜனதா உட்கார் என்றால் உட்காருகிறது, எழுந்து நில் என்றால் அவர்கள் சொல்லும் வரை நிற்கிறது. அதிமுக, அமித்ஷாவின் கட்டளைக்கேற்ப தான் அதன் செயல்பாடுகள் இருக்கும் என்பதுதான் உண்மை. 7 .5% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இன்றுவரை ஆளுநர் கையெழுத்திடவில்லை. முதல்வர் நேரில் போய் கேட்டார், பார்க்கிறேன் என்றார். இரு தினங்களுக்கு முன் ஐந்து அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து, ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டபோது... நான் சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறேன், முடிவெடுக்க மூன்று அல்லது நான்கு வாரம் ஆகும் என்று சொல்லி அனுப்பி விட்டார். திமுகவை 2ஜி வழக்கு மறுவிசாரணை என்று பயமுறுத்தி வைத்திருக்கிறது, இவை எல்லாமே அமித்ஷாவின் ஏற்பாடுதான்.

2020923201629415.jpeg

தமிழக மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். கட்சியில் தற்போது அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. சென்ற முறை கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோற்றுப்போன பொன். ராதாகிருஷ்ணன் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று வெளிப்படையாகவே பேசத் துவங்கிவிட்டார். இந்தத் தலைவர்கள் மீது அமித்ஷாவுக்கு கடும் கோபம். காரணம், சென்ற ஐந்து ஆண்டுகள் தில்லியில் ஆளுங்கட்சியாக பாரதிய ஜனதா இருந்தும், தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுதான். மம்தா பானர்ஜியின் கோட்டையான மேற்கு வங்கத்தில், தற்போது பாரதிய ஜனதா தவிர்க்க முடியாத சக்தி ஆகிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் தான், இவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற கோஷத்தை துவக்கினார் என்பதற்கு பரிசாகத்தான் அவருக்கு ஆளுநர் பதவி வழங்க சிபாரிசு செய்தார் அமித்ஷா.

2020923201653225.jpeg

தற்போதைய தமிழக தலைவர் முருகன் பதவி ஏற்பதற்கு முன் ‘திராவிட கட்சிகள் போல் பாரதிய ஜனதாவை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும், அதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று அனுமதி தரப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் முருகன் சுற்றுப் பயணம் போகும் இடமெல்லாம் 500 கார் 100 மோட்டார் சைக்கிள் என்று பிரம்மாண்டமாக அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஊரடங்கு காலத்திலும் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டினார் என்று காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனாலும் அவரது கார் மோட்டார் சைக்கிள் பவனி இப்போதும் தொடர்கிறது.

பால்கனகராஜ் சர்ச்சைக்குரிய வழக்கறிஞர். இவர் செய்திகளில் அடிக்கடி பேசப்படுபவர். தமிழ் மாநில கட்சி என்று இவரும் ஒரு லெட்டர் பேட் கட்சி வைத்துக்கொண்டு அலம்பல் செய்துகொண்டிருந்தார். தற்போது அந்தக் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்துவிட்டார். அதற்குப் பரிசாக, அவருக்கு தமிழக வழக்கறிஞர் அணி தலைவர் பதவி கிடைத்தது.

இதற்கு முன் இருந்த பாரதிய ஜனதா தலைவர்கள் அறை சாதாரணமாக இருக்கும். முருகன் தலைமை ஏற்றதும், அவரது அறையை நட்சத்திர ஓட்டலின் சூட்போல் மாற்றிவிட்டார். பால்கனகராஜ் அலுவலகமும் அப்படித்தான் இருக்கிறது. கரு. நாகராஜ் இந்து நாடார், பால்கனகராஜ் கிறிஸ்துவ நாடார். எனவே பாரதிய ஜனதா இந்துத்வா கட்சியினை என்று இப்போது சொல்ல முடியாது. முருகன் போகுமிடமெல்லாம் ஆட்களை திரட்டும் பொறுப்பு பால்கனகராஜிடம் தரப்பட்டுள்ளது. அவரும் அதை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.

2020923201801961.jpeg
முருகன் தலைவர் ஆனதும், திமுகவிலிருந்து வி.பி. துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், நடிகை குஷ்பு என்று கமலாலயம் தற்போது களைகட்டுகிறது. ஏற்கனவே மாபொ சி மகள், பெரியார் பேரன், சந்தன கடத்தல் வீரப்பன் மகள், வ.வு.சி. பேத்தி, சசிகலா புஷ்பா, காயத்ரி ஜெயராம், ராதாரவி என்று பாரதிய ஜனதா எல்லாத் தரப்பையும் தன் பக்கம் இழுத்திருக்கிறது.

முக்கியப் பிரமுகர்களை பாரதிய ஜனதா பக்கம் இழுத்ததில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் பங்கு எதுவுமே இல்லை. டெல்லி தலைமை, குஷ்பு, அண்ணாமலை, செல்வம், விபிதுரைசாமி ஆகியோருடன் பேசி, இவர்களை பாரதிய ஜனதாவில் இணைத்தது. இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முருகனுக்கு உத்தரவு போடப்பட்டது. பாரதிய ஜனதாவில் ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் சேர்ந்துவிட்டார்கள் என்று தமிழக மூத்த தலைவர்கள் டெல்லியில் புகார் சொன்னார்கள். ஆனால் தலைமை, அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காரணம், உத்திரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான். எனவே தலைமை இதெல்லாம் ஒரு விஷயமா என்று தவிர்த்து விட்டது.

குஷ்பு மீது கூட, ‘அவர் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்தார், எனவே அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது’ என்று தலைமையின் கவனத்திற்கு ஒரு கூட்டம் புகாரினை கொண்டு சென்றது. அதையும் தலைமை கண்டுகொள்ளவில்லை. ‘குஷ்பு ஒரு முஸ்லிம், அவர் முத்தலாக் சட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய நமக்கு பயன்படுவார்’ என்று ஒரு கணக்கை சொல்லி குஷ்புவை சேர்த்துக்கொண்டது மத்தியியில் ஆளும் பாஜக. ஆனால் குஷ்பு தான் முஸ்லீம் என்பதையே எப்போதோ மறந்து விட்டார். எப்போதும் நெற்றியில் பொட்டு, வகிட்டில் குங்குமம் என்று இந்து பெண்ணாகத்தான் அவர் வலம் வருகிறார். ஸ்டாலினை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைப்பது என்பது பாரதிய ஜனதாவின் திட்டம்.

இதேபோல் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, உதயநிதியை எதிர்த்து போட்டியிடுவாராம். தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன் துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்தத் தொகுதியை தற்போது ஆய்வு செய்து வருகிறார். முருகன் துறைமுகம் தொகுதியை தேர்ந்தெடுத்ததன் காரணம், அந்தப் பகுதியில் இந்தி பேசும் மார்வாடி வகுப்பினர் நிறைய பேர் வசிக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது நீண்ட காலமாக திமுகவின் கோட்டை என்பதும், அங்கு வெற்றியை தீர்மானிப்பது முஸ்லிம்கள் தான் என்பதும் அவருக்கு தெரியாமல் போய்விட்டது.

2020923201922145.jpeg

முருகன் ஏற்கனவே விநாயகர் ஊர்வலத்தை நடத்த முதல்வரை சந்தித்து அனுமதி கேட்டார். ஆனால், ஊரடங்கு காரணம் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது முருகன் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருக்கிறார். கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கண்டித்து இந்த யாத்திரை. ஏற்கனவே தமிழகம் முழுவதும், வேல் பூஜை நடத்தி பரபரப்பு செய்தார் முருகன். நவம்பர் ஆறாம் தேதி, திருத்தணியில் வேல் யாத்திரை துவங்கி டிசம்பர் ஆறாம் தேதி திருச்செந்தூரில் முடியும். இந்த வேல் யாத்திரையை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது என்பது முருகனின் திட்டம். இதற்கு முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறார் முருகன்.

முருகர் தமிழ்க் கடவுள். அவர் இந்துத்துவா கணக்கில் வரமாட்டார், அவர் பிற்படுத்தப்பட்டவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் இன்ன பிற வகுப்பை சேர்ந்தவர்களின் கடவுள். எனவே இதன் மூலம் பாரதிய ஜனதா கணிசமான வாக்கு வங்கியை பெறும் என்பது முருகன் கணக்கு. இந்த வேல் யாத்திரையில் திமுகவை வம்புக்கு இழுக்கும் திட்டமும் உண்டு. இந்த யாத்திரைக்கு தமிழக காவல்துறை அனுமதி தருமா என்ற விவாதமும் சமீபத்தில் கமலாலயத்தில் நிகழ்ந்தது. அப்போது முருகன் ‘தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, எனவே அமித்ஷா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என்று அதீத நம்பிக்கையுடன் பதில் சொன்னார்.


தற்போது தமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி என்ற கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை அமித்ஷா ஆலோசனையின் பேரில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் ஜேபி நட்டா நியமித்திருக்கிறார். சிடி ரவி சமீபத்தில் பாரதிய ஜனதாவின் தேசிய பொது ச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடக அமைச்சரவையில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர். தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் என்பவரை நியமித்துள்ளது. ஆக... இரண்டு தேசிய கட்சிகளும், தமிழக பொறுப்பாளர்களாக கர்நாடகத்தைச் சேர்ந்தவரையே நியமித்திருக்கிறது.

2020923202017490.jpeg

சிடி ரவியின் முழு கவனமும் இனி தமிழகத்தில் தான் இருக்குமாம். இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, பாரதிய ஜனதாவின் தேசிய இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் இனி தமிழ்நாட்டில் கவனம் செலுத்துவாராம். இந்த இரண்டு கர்நாடக இளைஞர்களும், தமிழகத்தில் தாமரை மலரும் இது உறுதி என்கிறார்கள். இவை எல்லாமே அமித்ஷாவின் திட்டப்படி தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக-வின் எதிரி நாங்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் அமித்ஷாவின் திட்டம். அது காலப்போக்கில் ‘திமுகவுக்கு மாற்று பாரதிய ஜனதா’ என்ற லெவலுக்கு மாறிவிடும் என்பதும் அமித்ஷாவின் கணக்கு.

60 தொகுதி, ஆட்சியில் பங்கு என்றால் அதிமுகவுடன் கூட்டணி என்பது அமித்ஷாவின் திட்டம். அப்படி இல்லை என்றால், ரஜினி ஆதரவுடன் பாரதிய ஜனதா தனியாக தேர்தலை சந்திக்கும். வெற்றியோ தோல்வியோ கவலை இல்லை. தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா தவிர்க்க முடியாத சக்தி ஆகிவிடும் என்று திட்டமிட்டு கணக்குப் போடுகிறார் அமித்ஷா. அவரைப் பொருத்தவரை ரஜினியை தன் பக்கம் இழுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் இன்றுவரை கைவிடவில்லை. பீகார் தேர்தல் முடிந்தவுடன், அமித்ஷாவின் கவனம் ரஜினி பக்கம் உறுதியாகவே திரும்பும் என்கிறது கமலாலய வட்டாரம்.

வரும் சட்டமன்ற தேர்தல்... ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு தலைவர்கள் இல்லாத இந்த இரண்டு திராவிட கட்சிகள் சட்டமன்ற தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு மத்தியில் ஆளும் கட்சி என்ற அடையாளம். ஆனால், திராவிட கட்சிகள் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இன்றி பாராளுமன்றத் தேர்தலை ஏற்கனவே சந்தித்து விட்டது. 38 இடங்களில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் இரண்டாவது எதிர்க்கட்சி என்ற இடத்தில் அமர்ந்திருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கோ தமிழக பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட்டே பறிபோனது. இதேபோல் மெஜாரிட்டி இழுபறியில் இருந்த எடப்பாடி, சட்டமன்ற இடைத் தேர்தலில் மாத்திரம் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

‘கருணாநிதி இல்லை ஜெயலலிதா இல்லை உண்மைதான். ஆனால், இந்த இரண்டு தலைவர்களுக்காக உழைத்த தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்’ - இதை பாரதிய ஜனதா யோசித்ததா என்று தெரியவில்லை.

ஆளுநர், வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை என்று பலவற்றையும் தனக்கு வேண்டாத அரசியல் தலைவர்களை பழிவாங்க பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது. ஆனால், வலுவான வாக்கு வங்கி இல்லாமல், தமிழ்நாட்டில் தாமரை எப்படி மலரும் என்று விமர்சகர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு இதுவரை தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் சரியான விளக்கம் தரவில்லை.

ஆனால், அமித்ஷாவின் தேர்தல் வியூகம் என்ன என்பதை அவர் யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. தற்போது அவர் கவனம் பீகார் தேர்தலில் நிற்கிறது. அதற்குப் பிறகு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் அமித்ஷாவின் கவனம் அதிகமாக இருக்கும். 50 வருட திராவிட கட்சிகள் மீது இருக்கும் அலுப்பை, தனக்கு சாதகமாக எப்படி ஆக்கிக்கொள்வது என்று அவர் சற்று தீவிரமாகவேயோசித்து வருகிறார். கம்யூனிஸ்டுகளின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தி ஆகியிருக்கிறார். ஆனால், தற்போது அங்கும் பாரதிய ஜனதா தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் அமித்ஷா தான். தமிழ்நாட்டிலும் அதே விதமான மாயாஜால வித்தையினை அவர் நடத்திக் காட்டுவார் என தீவிரமாக நம்புகிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். அமித்ஷா நினைத்ததை முடிப்பவர் என்பதும் உண்மை.