
காக்கி சட்டையின் களங்கம்...
தமிழக காவல்துறையை ஒரு காலத்தில் ‘ஸ்காட்லாந்த் யார்ட்’ என்ற அளவுக்கு பெருமையாக பேசுவார்கள். அவ்வளவு திறமையான, நேர்மையான அதிகாரிகள் இருந்தார்கள். ஆனால், இப்போது அது அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கிறது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி அவர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரிடமும் நேரில் புகார் மனு தந்திருக்கிறார்.
இப்படி ஒரு புகார் மனுவினை ஐபிஎஸ் அதிகாரி தர இருக்கிறார் என்பது தெரிந்ததும், அவரை மனு கொடுக்க போக விடாமல், அவரது காரை வழிமறித்து தடுக்க காவல்துறை எஸ்பி., டிஎஸ்பி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரை பயன்படுத்தி தடுக்க முற்பட்டிருக்கிறார் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ். ஆனால், அந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாத அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, புகாரை நேரில் போய் தந்திருக்கிறார். இருப்பினும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அடுத்த கட்டமாக அழுத்தம் தர முயற்சித்திருக்கிறார் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ். அதற்குள் இந்த விஷயம் திமுக எம்பி கனிமொழிக்கு தெரிய... முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்று கண்டித்து அவர் அறிக்கை வெளியிட... பிறகே சுதாரித்துக் கொண்டது தமிழக அரசு! அவசர அவசரமாக விசாரணை குழு அமைப்பு, ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலில் வைப்பு என்று மளமளவென்று நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்க் கட்சி எம்பி சொல்லும்வரை பெண் உயர் அதிகாரி ஒருவர், சக அதிகாரி மீது எழுத்து பூர்வமாக தந்த பாலியல் குற்றச்சாட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது, இந்த அரசின் விசாரணை மீது சந்தேகப்படும்படி தான் இருக்கிறது. அதனால் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தங்களது அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும், விசாரணை சுதந்திரமாக, நேர்மையாக நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. விசாரணைக் குழு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இந்த களங்கம் துடைத்தெறியப்படும்.

Leave a comment
Upload