
2020ல் தமது 94ம் வயதில் மறைந்தவர் பரணீதரன்.
இறுதி வருடங்களில் தன்னந்தனியாக தான் வாழ்ந்து வந்தார் அவர்.
எந்தவித தேவைகளும் அவருக்கு இருந்ததில்லை.
முதுமைக்குள் புகுந்ததும் அவருடைய பர்சனாலிட்டியே மாறிவிட்டது மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கட்டிலோடு கட்டிலாகப் படுத்திருந்தாலும், தன்னை சந்திக்க வருபவர்களை அடையாளம் தெரிந்த மாதிரியே காண்பித்துக் கொள்ள மாட்டார்!.
"எதுக்கு இப்படி தனியா கஷ்டப்படணும்....பேசாம எங்க கூட வந்து தங்குங்களேன்" என்று நெருங்கிய உறவுகள் அவரிடம் சொல்வதுண்டு.
"எனக்கு எந்த கஷ்டமும் இல்லை யாரோட துணையும் தேவையில்லை அதோ ஃப்ரிட்ஜ் மேல போட்டோவுல இருக்குற பெரியவா துணையே எனக்கு போதும்"... என்பார்.
போட்டோவில் மகா பெரியவா சிரித்த வண்ணம் இருப்பார்.
பரணிதரன் பிறந்ததும் வீட்டினர் அவருக்கு இட்ட பெயர் 'சீலி'.
இவர் குடும்பத்தில் இப்படி வித்தியாசமாக பெயர் வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
சீலியின் அண்ணன்களில் ஒருவரின் பெயர் 'அம்மாஞ்சி' தம்பிகளில் ஒருவர் ஆச்சம் இன்னொருவர் 'டூ டூ ' இன்று வரை எனது தாய் வீட்டு உறவினர்கள் பரணிதரனை சீலி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள் எனக்கு சீலி மாமா!
சுதேசமித்திரன் நாளிதழில் வீட்டில் செல்லமாக அழைத்த 'சீலி' என்ற பெயரில் ஜோக்குகள் எழுதி வந்தார்.
ஆரம்ப காலங்களில் ஆனந்த விகடனிலும் இந்த பெயரில் தான் என்ட்ரி கொடுத்தார்.
கார்ட்டூன்கள் வரைய துவங்கியதும் 'ஸ்ரீதர்' என்கிற சொந்த பெயரில் கையெழுத்திட்டார். 'கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர்' என்று அவர் பிற்பாடு அறியப்பட்டார்.
எழுத்தாளர்களால் கார்ட்டூன் வரைய இயலாது.
ஆனால் கார்ட்டூனிஸ்டுகள் எழுதுவதிலும் வல்லமை பெற்றவர்களாய் இருந்து வருகிறார்கள்.
கண் முன்னே நிற்பவர்கள் இருவர்.
ஒருவர் பரணிதரன், மற்றொருவர் மதன்!
எங்கள் குடும்ப உறவுகளில் மூன்றாமவர் ஒருவர் உண்டு. ஆர் கே லக்ஷ்மன்!
மெரினா என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டார் ஸ்ரீதர் நாடகங்கள் எழுதுவதில் தடம் பதித்தார்.
'தனிக்குடித்தனம்' மூலம் உச்சம் தொட்டார்.
முதலில் விகடனில் இது தொடராக வெளியானது.
பின்னர் 'பூர்ணம் விஸ்வநாதன்' மூலம் இவர் படைத்த அத்திம்பேர் கதாபாத்திரம் உயிர் பெற்றது.
தொடர்ந்து ஊர் வம்பு, கால் கட்டு போன்ற நாடகங்கள் முதலில் விகடனில் வெளியாகி பின்னர் மேடை ஏறி அனைத்து தரப்பினரையும் வரவேற்க வைத்தது பிராமண பாஷையில் எழுதப்பட்டாலும் யாரும் அவற்றை ஒதுக்கவில்லை "பக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது..! என்று ஊர் மெச்சியது.
மகாத்மா காந்தியின் துணைவியார் 'கஸ்தூரிபா காந்தி' யின் பயோகிராபி(கஸ்தூரி திலகம்) கட்டுரை வடிவில் விகடனிலும் பின்னர் நாடக வடிவில் மேடையிலும் அரங்கேற்றப்பட்ட போது பெரிதும் பாராட்டப்பட்டது.
ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதியதும் வீட்டில் படித்துக் காட்டுவார். அவருக்கு குரல் கம்மும்.
கேட்பவர்களுக்கு கண்ணீர் மல்கும்!
"நான் எழுதுவதெல்லாம் அச்சில் ஏறிவிடும் என்ற நினைப்பில் இல்லாமல் எழுதியதெல்லாம் அச்சுக்கு சென்று விடுமே என்ற பயத்தில் தான் செயல்பட்டு வந்தேன்.." என்று தன்னுடைய நூல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பரணிதரன்.
சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு விட வேண்டிய பொன் எழுத்துக்கள் அவை!
பரணிதனுக்கு கோபம் வருமா ?வரும்.
தன் எழுத்து மீதி இருந்த அலாதி பற்றுதல் காரணத்தால் எழுந்த கோபம் அது.
அதன் விளைவுகளில் ஒன்று பூர்ணம் விஸ்வநாதனின் 'கலா நிலையம்' நாடக குழுவுக்காக தான் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தியதும், புதியதாக "ரசிக ரங்கா" என்ற பெயரில் புதுக்குழு துவங்கியதும்.!
ஸ்ரீதராக விகடனில் அவர் படைத்த கார்ட்டூன்களில் பல பொதுவெளியில் பரபரப்பு ஏற்படுத்திய வரலாறு உண்டு.
கழுதை மீது பல அரசியல் தலைவர்களை உட்காரவைத்து ஊர்வலம் விட்டது,
போஸ்டராகி சென்னை சுவர்களை அலங்கரித்ததை மறக்க இயலாது!
பொதுவாகவே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை அச்சு அசலாக வரைவார் இவர்.
ராஜாஜி, காமராஜ், பெரியார், பக்தவச்சலம், கருணாநிதி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.பிரபலமான திரைப்பட பாடல்களை காட்டூன்களில் பயன்படுத்தியவர் ஸ்ரீதர்.
போனால் போகட்டும் போடா உள்ளிட்ட பல பாடல்களை கார்ட்டூன்களில் அரசியல் தலைவர்கள் பாடிய படியே செல்வார்கள்!
கேலிச்சித்திரங்களில் வரையப்பட்ட தலைவர்களில் காமராஜ் இவரது அபிமானத்துக்குரியவர். அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் இவர் ஆஜராகி விடுவார்.
காஞ்சி மகா பெரியவரை காமராஜ் தரிசனம் செய்ததில் ஶ்ரீ தரின் பங்கு அதிகம்.

(அவர் 90 வயதில் வரைந்த காமராஜர் கார்ட்டூன்)
காஞ்சி மகா பெரியவரிடம் அளவு கடந்த பக்தியும், அணுக்கமும், விகடன் நிறுவனர் எஸ் எஸ் வாசனிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் பரணிதரன்.
"பெரியவா" என்று பேச்செடுத்தாலே அந்த மகானிடம் தனக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்களை கண்கள் கலங்க உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விவரிப்பார்.
காஞ்சிப்பெரியவரின் அனுமதியுடனும் ஆசியுடனும் தான் விகடனில் தன்னுடைய ஆன்மீக கட்டுரைகளை எழுதி வந்தார்.
தன் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பரணிதரன் தஞ்சமடைந்தது பரமாச்சாரியாரிடம் தான்.
அந்த துறவியின் அன்பும், அருளும் தான் அவர் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றது என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை.
அதேமாதிரி, 'Boss' என்று ஆரம்பித்தாலே பத்திரிக்கை துறையில் தனக்கு வழிகாட்டியாக திகழ்ந்த விகடன் நிறுவனரிடம் தான் கற்றதும் பெற்றதும் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.
தான் வரைந்த கார்ட்டூன் களையும் எழுதிய தலையங்க கட்டுரைகளையும் Boss செப்பனிட்டுக் கொடுத்த சம்பவங்களை விவரிக்கும் போது அந்த மாணவனின் குரல் தழுதழுக்கும்.நிறுவனரின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமணியனிடமும் பரஸ்பர அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.
இவரின் தந்தை 'கலா நிலையம்' டி என் சேஷாசலம். உடன் பிறந்தவர்கள் 12 பேர். குடும்ப சூழல் காரணமாக இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை மூத்தவர் ராதாகிருஷ்ணனின் யோசனையின்படி தம்பிகள், தங்கைகளின் திருமணத்திற்கு பேருதவிகள் செய்திருக்கிறார்.
'பரோபகாரம் ஹிதம் சரீரம்' என்ற வாக்குக்கு ஏற்ப தனக்கு மிக நெருங்கிய நண்பனாக விளங்கிய பாபுஜி என்பவருக்கும், அவரின் குடும்பத்துக்கும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
என் சகோதரியின் திருமணத்திற்கும், தன் அலுவலக சகா, எழுத்தாளர் சாவியின் மகளின் திருமணத்திற்கும் கேட்டரிங் டிபார்ட்மென்ட் சீஃப் மாதிரியாக இருந்து அனைத்து சாப்பாடு விஷயங்களுக்கும் பொறுப்பேற்று நடத்தி இருக்கிறார்.

(அவரது சகோதரர் மகன் T .S நாராயணஸ்வாமி வரைந்தது-நன்றி )
சிறுவயதில் விஷமக்கார கண்ணனாக இருந்திருக்கிறார் சீலி.
அக்கம் பக்கம் வீடுகளில் சமையலறை வரை சென்று கிடைத்ததை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு லூட்டி அடிப்பார்! பம்பரம் விடுவார், கோலி விளையாடுவார்.
போகப் போக காத்தாடி விடுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
விகடனில் பணியில் இருந்த சமயத்தில் விடுமுறை நாட்களில் கண்ணாடிகளைத் துண்டுகளாக்கி அரைத்து, நூலுக்கு 'மாஞ்சா' போட்டு, எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஜாலியாக பட்டம் விடுவார். அதுவே பரணிதரனுக்கு "Stress Buster"!!

Leave a comment
Upload