தொடர்கள்
அரசியல்
வங்கதேசம் ! பின்னணியில் பாக் ? -தில்லைக்கரசிசம்பத்

20251125135638681.jpgவங்கதேசத்தில் சில தினங்களுக்கு முன்பு மாணவர் இயக்கத்தின்தலைவர் உஸ்மான் ஹாதி, மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து போனார்.

உடனே இந்தியாதான் இதற்கு காரணம் என வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது.

கொல்லப்படுவதற்கு இருதினங்களுக்கு முன் “ இந்தியாவின் 7 சகோதரிகளையும் வங்கதேசத்துடன் இணைப்போம்” என அவர் சூலுரைத்திருந்தார்.

இந்த கும்பல்கள் ஏற்கனவே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்பவில்லை என நாடு முழுவதும் கலவரம் செய்து கொளுத்திக்கொண்டிருந்தன.

இந்தியாவுடனான பாகிஸ்தானின் அடாவடி ஒரு பக்கம் என்றால் அதன் அடிவருடியாக மாறிய வங்கதேசமும் இப்போது வெளிப்படையாகவே இந்திய விரோத போக்கை கையாள ஆரம்பித்துவிட்டது.

பழைய வரலாற்றையே செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்து பாக் உடன் கூடி குலாவுகிறது வங்கதேசம்.

அன்று உருதுவை நடுநாயகமாக வைத்த பாகிஸ்தானை எதிர்த்து “என் வங்காள தங்கமே “(Amar Sonar Bangla) என்ற தாகூரின் பாடலை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கவிட்டு விடுதலைக்கான புரட்சியை நடத்திய வங்காளிகள், விடுதலையான தங்கள் நாட்டின் பெயரை கூட பாகிஸ்தான் போல “புனித நாடு” என்றெல்லாம் வைக்காமல் தாய்மொழியும், கலாச்சாரமும் தான் எங்களுயிர் என்று பங்களாதேஷ்( வங்காள நாடு) என வைத்தவர்களின் நிலைமை இன்று என்ன.?!

சுதந்திரம் வாங்கி இந்தியா-பாகிஸ்தான் பிரிந்தவுடன் மார்ச்24,1948ல் கிழக்கு பாகிஸ்தானான வங்காளத்தில், டாக்கா பல்கலைகழகத்தில் ஜின்னா “ இனி நாட்டில் உருது மொழி மட்டுமே!” என பிரகடனம் செய்த போது அந்த அரங்கிலேயே மாணவர்கள் “ முடியாது ! முடியாது!” என ஜின்னாவின் முகத்திலேயே அறைந்தது போலே கர்ஜித்து ஆக்ரோஷமாக எதிர்ப்பு குரல்களை எழுப்ப ஜின்னாவே அதிர்ந்து போனார்.

அடுத்தடுத்து வந்த பாக் ஆட்சியாளர்கள் உருது மொழியை கொண்டுவர முயற்சித்த போதெல்லாம் வங்காளிகள் போராட்டங்களையும் உயிர்தியாகங்களையும் செய்தனர்.

வங்காளிகள் அடங்கமாட்டார்கள் என முடிவெடுத்த பாகிஸ்தான், தனது ராணுவத்தைக்கொண்டு சொந்த நாட்டுமக்கள் என்று கூட நினைக்காமல், முஸ்லீம், இந்து , பௌத்தம், கிறிஸ்துவர் என பேதம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 3லட்சத்திலிருந்து 30லட்சம் மக்கள் வரை சாகடித்தார்கள்.

உலகவரலாற்றின் கொடூர இனஅழிப்பு நடந்தது.

பாக் ராணுவமும் , அதன் Al-Badr militiaவும் இணைந்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு, மருத்துவர்கள், பேராசிரியர்கள் , எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என அறிவுசார்சமூகத்தினரையும் கொன்றனர்.

2லட்சத்திலிருந்து 4லட்சம் எண்ணிக்கையிலான பெண்களை, சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் பாக் ராணுவத்தினர் பாலியியல் வன்கொடுமை செய்தனர்.

1971 மார்ச்25ல் தொடங்கி 9 மாதங்கள் இந்த கொடூரங்கள் நிகழ்ந்தன.

கலாச்சாரம், மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த வங்காளிகளை, பாகிஸ்தான் அரசு இழிவானவர்களாகவும், தங்களைவிட தாழ்ந்த இனமாகவும் கருதி அவர்களை கொன்றனர்.

இதிலிருந்து தப்பிக்க 40லட்சம் வங்காளிகள் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தனர்.

பேரழிவின் ஆட்டத்தை கவனித்த இந்தியா, தஞ்சமடைந்தவர்களை முகாம் அமைத்து காப்பாற்றியது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இந்தியரசு இனிமேலும் சகிக்க முடியாது என பாகிஸ்தானுடன் அதிகாரப்பூர்வமாக 1971 டிசம்பர் 3ஆம் தேதி களமிறங்கி, வெறும் 13 நாட்களில் பாகிஸ்தானைத் தோற்கடித்து, உலக இராணுவ வரலாற்றிலேயே மிக வேகமானவெற்றியை பதிவு செய்தது.

இந்திய ராணுவம் டாக்காவைச் சூழ்ந்தவுடன், வேறு வழியின்றி பாகிஸ்தான்தளபதி ஏ.ஏ.கே. நியாசி, இந்தியத் தளபதி ஜெகஜித் சிங் அரோராமுன்னிலையில், சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்களுடன் சரணடைந்தார்.

வரலாறு தந்த படிப்பினையை வங்கதேசம் மறந்துவிட்டது.

“ஏன் ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்து வங்கதேசத்தை கோபமூட்ட வேண்டும்?! அவரை அனுப்பிவிடலாமே?” என்ற கேள்விக்கு இந்தியாவின் வங்கதேசத்துக்கான முன்னாள் ஆணையர் வீணா சிக்ரீ “இந்தியாவை நம்பி வந்தவரை எப்படி திருப்பி அனுப்ப முடியும்? தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்து 66 வருடங்கள் ஆகிறது! சீனா தலைக்கீழாக நின்று தண்ணீர் குடித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்துடன் இந்தியா வங்கதேசம் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம்(extradition treaty) உள்ளது. சும்மா அனுப்புங்கள் என்று கேட்டவுடன் அனுப்பிவிட முடியாது. இந்தியாவுக்கு என ஒரு நம்பகதன்மை உண்டு. அதை யாருக்காவும் இழக்க முடியாது “ என்கிறார்.

இந்தியா அண்டை நாடுகளுடனான உறவுகளை அதற்குரிய நியாய தர்மங்களை கொண்டே அது நடத்தும்.

வலிமையான இந்தியா இன்று ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் உலகின் முதல் 4 இடங்களில் உள்ளது.

நவீன ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத பலம் மட்டுமின்றிNIA, RAW, IB போன்ற அமைப்புகள் 24 மணிநேரமும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில்,எப்போதும் இந்திய எதிர்ப்பரசியல் செய்து உள்நாட்டில் அதிகாரத்தை பிடிக்கும் பாகிஸ்தானின் உத்தியை சமீபகாலமாக வங்கதேசமும் கையிலெடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

யாருக்கு என்றால் நிச்சயமாக வங்கதேசத்திற்கு தான். நமக்கில்லை.

ஹசீனா தலைமையில் அந்நாடு பொருளாதார ரீதியிலான வளர்ச்சியை பெற்று வந்தது.

கடந்த வருடம் வரை இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி வர்த்தக போட்டியில் பெரியளவில் வங்கதேசத்திடம் தான் இழந்தோம்.

ஆனால் 2025ஆம் ஆண்டிலிருந்தே அங்கே நிலவும் அரசியல் ஸ்திரமற்றதன்மையால் அந்நாட்டின் ஆடை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பிராண்டுகளின் (Zara, Gap, J.C. Penney) ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வர, இதன் விளைவாக, நவம்பர் 2025ல் இந்தியாவின்ஜவுளிஏற்றுமதி 9.4% வளர்ச்சியடைந்து$2.85 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

2024-25 நிதியாண்டில் திருப்பூர் ஆடை ஏற்றுமதி ₹40,000 கோடி என்றவரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இங்கே நிலைமை இப்படியிருக்கையில் வங்கதேசத்தில் “ நாங்கள் பணம் அனுப்பவில்லை என்றால் இந்தியர்கள் பட்டினி கிடப்பார்கள், 7 சகோதரிகளை மீட்போம்” என்று வீரவசனம் பேசும், படிப்பறிவில்லாத முட்டாள் மாணவ தலைவர்கள், கூட்டத்தை திரட்டிகொண்டு,யாரையாவது எரித்து கொல்ல மனிதர்களை துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பான ஒருங்கிணைந்த வங்காளம் எப்பேற்பட்ட அறிவுஜீவிகளையும், செழிப்பான மண்ணின் மைந்தர்களையும் கொண்டது தெரியுமா?!

ஹசீனாவை மூட்டைக்கட்டி அனுப்பிய கையோடு நாட்டின் வளர்ச்சியையும் ஏறக்கட்டிவிட்டார்கள்.

வங்கதேசத்தில் மொழி, கலாச்சாரம், வளர்ச்சியை உரக்க பேசுபவர்களும், வெறும் மதத்தை தூக்கிப்பிடிப்பவர்களும் இன்று எதிரெதிராக நிற்கிறார்கள்.

ஏற்கனவே பிழைக்க வழி இல்லாமல் கோடிக்கணக்கான வங்கதேசத்தினர் இந்தியாவில் ஊடுருவி வாழ்கிறார்கள்.

வங்கதேசத்தில் கலவர தீயை பரவவிடும் இந்திய எதிர்ப்பாளர்களே!

ட்ரம்ப்புக்காக இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து காசாவில் "அமைதி காக்கும் படை" என்ற பெயரில் காசா மக்களை ஒடுக்க தனது ராணுவப்படையை அனுப்ப உள்ள பாகிஸ்தானை “நம் சகோதரன்” என நம்பும் உங்கள் அறிவில் தீயை தான் வைக்க வேண்டும்.

இதே நிலைமை தொடரும் பட்சத்தில், வங்கதேசத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!