தொடர்கள்
கதை
விக்கிரமாதித்தன் கதைகள்...!! திருடனிடம் அகப்பட்ட தாட்சியாயிணி. -ஏ.எஸ்.கோவிந்த ராஜன்

2025112708383994.jpeg

விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது.

பர்வததேசத்தில் ஒரு பெரும் வியாபாரிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

இதனால், அவர்கள் கோவில் கோவிலாக சென்று வந்ததன் பயனாக, ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஆண் குழந்தைக்கு தருமன் என்றும், பெண் குழந்தைக்கு தாட்சியாயிணி என்றும் பெயர் சூட்டினார்கள்.

தாட்சியாயிணிக்கு, விசேயசேகரன் என்னும் ஒருவனுடன் திருமணம் பேசி முடித்தார்கள்.

தருமனுக்கு, ஆதிகேசவன் என்னும் ஒரு நண்பன் இருந்தான். ஒருமுறை தாட்சியாயிணி கோவிலுக்கு சென்று வரும் சமயத்தில், அவளை கண்ட ஆதிகேசவன், தன்னை மணந்து கொள்வாயா? எனக் கேட்டான்.

கள்ளம் கபடமில்லா தாட்சியாயிணி, விசேயசேகரன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு திருமணம் முடிந்ததும், எனது கணவரிடம் சம்மதம் கேட்டுவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று கூறினாள்.

பின்னர் சில நாட்களில் திருமணம் இனிதே முடிந்தது. அன்றிரவு அவள் தன்னுடைய அண்ணனின் நண்பருக்கு வாக்கு கொடுத்துள்ளேன் என்று நடந்ததை மறைக்காமல் கூறினாள்.

விசேயசேகரன், தன்னிடம் எதையும் மறைக்காமல் பேசிய மனைவியை எண்ணி ஆச்சரியத்தில் உறைந்து போனான். பின்னர், அவளிடம் நீ கொடுத்த வாக்கினை காப்பாற்று என வழியனுப்பி வைத்தான்.

இரவுப்பொழுதில் கல்யாண கோலத்தில் செல்லும் பொழுது, திருடன் ஒருவன் வழி மறைத்தான். திருடனைக் கண்ட தாட்சியாயிணி, சிறிதும் அச்சப்படாமல் அவனிடம் என்னுடைய நகைகள் தானே வேண்டும், இதோ தருகிறேன் என்று கழற்ற போனாள். ஆனால், திருடன் எனக்கு உன்னுடைய நகைகள் தேவையில்லை, நீ தான் வேண்டும் எனக் கூறினான்.

இதை கேட்ட தாட்சியாயிணி, தனது கணவனிடம் சம்மதம் பெற்று, நான் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற சென்று கொண்டிருக்கின்றேன். நான் அவரை பார்த்துவிட்டு வரும் வரை காத்திரு என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு, ஆதிகேசவனின் வீட்டு கதவை தட்ட, அவனும் கதவை திறந்தான்.

நள்ளிரவு நேரத்தில் தாட்சியாயிணியை கண்ட அவன் அதிர்ச்சிக்குள்ளானான். தாட்சியாயிணி, தனது கணவரிடம் அனுமதி பெற்று வந்துவிட்டேன், இனி உங்களது விருப்பத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்றாள்.

இதை கேட்ட ஆதிகேசவன் அதிர்ந்துப்போனான். பின்னர், தாட்சியாயிணியை பார்த்து, 'இன்னொருவரின் மனைவியான நீ எனக்கு தங்கையம்மா!, நீ உனது கணவரிடம் செல்லம்மா!" என கைகூப்பி வழியனுப்பி வைத்தான்.

பின்னர் தாட்சியாயிணி திரும்பி வந்து திருடனிடம் நடந்ததைக் கூறி, இனி உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றாள்.

இதை கேட்ட திருடன், தாயே! நீ பெண்ணே அல்ல, நீ தெய்வம் அம்மா, நான் புத்திக்கெட்டு அறியாமல் தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு அம்மா எனக்கூறினான். பின்னர் தான் வைத்திருந்த நகைகளை அவளிடம் கொடுத்து, வீடு வரை வந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தான்.

வீட்டிற்கு வந்த தாட்சியாயிணி கணவனின் காலில் விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறினாள்.

மனைவியின் கள்ளம் கபடமற்ற குணத்தை எண்ணி மகிழ்ச்சி கொண்டவனாய், அவளை அணைத்துக் கொண்டான். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம்.

பின்னர், விக்ரமாதித்தனை பார்த்து, மன்னா! இக்கதையில் பாராட்டிற்குரியவர் யார்? எனக்கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன், தாட்சியாயிணி குணமும், அவளது கணவனின் குணமும் பாராட்டிற்குரியது தான். ஆனால் அவர்கள் பிறந்தது முதல் அவ்வாறாகவே வளர்ந்து வந்துள்ளனர்.

ஆனால், ஒரு திருடன் அவ்வாறில்லை. அவன் செய்யும் தொழிலையும் மறந்து, ஒரு பெண்ணை தெய்வமாக கருதி, அவளை வீடு வரை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டு சென்றான். ஆகையால், அந்த திருடனே பாராட்டிற்குரியவன் என்றான்.

விக்ரமாதித்தன் கூறிய, சரியான பதிலை கேட்ட வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.