தொடர்கள்
அனுபவம்
2025 நிகழ்வுகள் பாடங்கள் -சத்திய பாமா ஒப்பிலி

20251125213739889.jpg

2025 ஆண்டு முடியப் போகிறது.

இப்பொழுதுதான் பிறந்த்து போல இருக்கிறது இவ்வாண்டு ..அதற்குள்

இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது.

.ஏதோ ஒரு வேகம் எங்கேயும். பூமி சூழலும் வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது .நாட்காட்டியைத் திருப்பிப் பார்த்தால், எத்தனை நிகழ்ந்திருக்கிறது இந்த ஆண்டில்!

பருவ நிலை மாற்றங்கள். திடீர் வெள்ளம், வழக்கத்துக்கு மாறான குளிர், கடுமையான வெயில். போன வருடத்தைக் காட்டிலும் அதிகமான வெயில், குளிர், மழை. சென்னையிலேயே மின்விசிறி கூட இல்லாமல் தூங்க முடிகிறது.புது டெல்லியைச் சேர்ந்த Centre for Science and Environment மற்றும் Down to Earth என்ற ஒரு பத்திரிகையும் சேர்ந்து நிகழ்த்திய ஆய்வில் சொன்னது:

2025 ஜனவரி முதல் நவம்பர் வரை உள்ள 334 நாட்களில் 331 நாட்களில் இந்தியா கடுமையான வானிலை நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இதுவே, 2024-இல் 295 நாட்களாகவும், 2022-இல் 292 நாட்களாகவும் இருந்திருக்கிறது.2025-இல் குறைந்தது 4,419 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; 2022-இல் 3,006. இதனுடன் பயிர் சேதங்களும் கடுமையாக அதிகரித்துள்ளன.

கால நிலை சார்ந்த கடுமையான நிகழ்வுகள் இப்போது அனைத்து பருவங்களிலும் ஏற்படுகின்றன என்றும், “சாதாரண” வானிலைக்கான கால இடைவெளி தொடர்ந்து சுருங்கி வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த கால நிலை மாற்றம். தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது., திட்வா, ஃபெங்கல் புயல்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்கள் நிறைய.

அடுத்த வருடத்திற்கு நாம் தயாரா?

ஒரு பக்கம் தொழில் நுட்பம் உலகத்தை இணைந்தாலும், மனித மனங்களின் இடையே உள்ள தூரம் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. பெகல்காம் நிகழ்வு ,டெல்லியில் குண்டுவெடிப்பு, சிட்னியில் போன்டி பீச் இன்னும் எத்தனையோ. இதில் என்ன பாடம் கற்றுக் கொள்ள முடியும் ஒரு சாமானிய மனிதனால்! அன்றைய பாடுகளைப் பற்றி கவலைப்படும் மக்கள்தான் பாதிக்கப்படும் பெரும்பான்மையான கூட்டம் .பதில் தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும், இப்படிப்பட்ட தீவிர மதவாதங்களைத் தடுக்க எதை மாற்ற வேண்டும்?

தீவிர வாதத்தை பொறுத்த வரையில் பாடங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் ஏதோ நடந்து கொண்டேதான் இருக்கிறது. தீவிரவாதம் இல்லாத நாடு என்று எதையுமே சொல்ல முடியாது என்றாலும், ஐஸ்லாண்ட், சிங்கப்பூர், நியூசிலாந்து, கத்தார், ஓமான் போன்ற நாடுகள் தீவிரவாதத்தினால் அத்தனை பாதிப்பு அடைவதில்லை. நம்மால் அதில் சேர முடியுமா?

இருநாடுகளுக்கும் உள்ள பிரச்சனை, இருமதங்களுக்குள் பிரச்சனை அதையும் மீறி ஜாதிப்பிரச்சனை. ஆணவக் கொலைகள். இந்த வருடத்திற்குண்டான தரவு இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு தனி சட்டம் கொண்டு வர இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கௌரவ கொலை, ஆணவக்கொலையாக உணர்த்தப் பெற்றாலும் பெரியதாக மாற்றம் வரவில்லை. கவின் போன்றவர்கள் இறந்து கொண்டேதான் இருக்கிறார்கள் .எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது

ஜாதி என்பது அரசியலாக இருக்கும் வரை பெரிதாக எதுவும் மாறப் போவதில்லை.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க பொருளாதாரத்தில் நான்காம் இடத்தில் இருக்கிறோம். கூடிய சீக்கிரம் ஜப்பானை மிஞ்சி விடுவோம் என்று ஒரு செய்தித்தாள் கூறுகிறது. அறிவியல், கலை, விளையாட்டு போன்றவற்றில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். வல்லரசு நாடுகளுக்கு நடுவே நிமிர்ந்து நிற்கிறோம்.அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படுவதில்லை .மகளிர் உலககோப்பை வென்றது மிக மிக முக்கியமான உலக செய்தியாகும், உலகத்திற்குச் செய்தியாகும்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டு 2026 தன்னுள் எது வேண்டுமானாலும் தேக்கி வைத்துக் கொண்டிருக்கலாம். நாம் நல்லவையே எதிர் பார்ப்போம், அல்லவையைச் சமாளிப்போம்.

2025க்கு மனமார்ந்த நன்றி என்று சொல்ல முடியவில்லை என்றாலும், தட்டுத்தடுமாறி கரை சேர்த்து விட்டதற்கு கொஞ்சம் நன்றிகள்!

காத்திருக்கிறோம்,.பாடங்கள் படித்த முதிர்ச்சியுடன்!

வருக 2026 புத்தாண்டே!