தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 05 - ஆரூர் சுந்தரசேகர்.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

சிவன் கோயில்களில் தனி நவகிரக சந்நிதிகள் இருப்பதுபோல பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் இருப்பதில்லை. ஏனெனில், வாமன அவதாரத்தில் பெருமாள் மூன்றடியில் உலகை அளந்தபோது, அனைத்து கிரகங்களும் அவர் திருவடிக்குள் அடங்கியதாகக் கருதப்படுகிறது, எனவே பெருமாளை வணங்கினால் நவகிரக வழிபாட்டின் பலன் அனைத்தும் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா !!
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம் !!

"சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களும், தேவர்கள் உட்பட அனைவரும் உன்னை வணங்கி, உன் தரிசனத்தையும் அருளையும் பெறத் தவம் கிடக்கிறார்கள், துயில் எழுவாய் எம்பெருமானே என்பதாகும். இதில் அனைத்து கிரகங்களும் பெருமாளின் கீழ் அடங்கி வழிபடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் பெருமாள் கோயில்களில் நவக்கிரக சந்நிதிக்குப் பதிலாக, சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும். திருமாலின் அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு. இராமனைச் சூரியனின் அம்சமாகவும், கிருஷ்ணரைச் சந்திரனின் அம்சமாகவும், நரசிம்மரைச் செவ்வாயின் அம்சமாகவும், கல்கியைப் புதனின் அம்சமாகவும், வாமனனை குருவின் அம்சமாகவும், பரசுராமனைச் சுக்கிரனின் அம்சமாகவும், கூர்ம அவதாரத்தைச் சனியின் அம்சமாகவும், வராக அவதாரத்தை ராகுவின் அம்சமாகவும், மச்ச அவதாரத்தைக் கேதுவின் அம்சமாகவும் பலராமன் அவதாரத்தைக் குளிகன் அம்சமாகவும் கருதப்படுகின்றது.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

பெருமாளை வழிபட்டாலே, நவக்கிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை . இருப்பினும், மதுரை கூடலழகர் கோயில் போன்ற சில பெருமாள் கோயில்களில் விதிவிலக்குகள் உண்டு. இக்கோயிலில் நவகிரக சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இங்கு நவகிரகங்களை வணங்கும் வகையில் தசாவதார சுலோகமும் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவையாகக் கூறப்பட்டுள்ளது.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவத் தலங்கள் நவகிரகங்களுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன, ஒவ்வொரு தலமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தைக் குறிக்கும், ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), வரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்), திருக்கோளூர் (செவ்வாய்), திருப்புளியங்குடி (புதன்), ஆழ்வார்திருநகரி (குரு), தென்திருப்பேரை (சுக்ரன்), பெருங்குளம் (சனி), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்) (ராகு) மற்றும் மற்றொரு இரட்டைத்திருப்பதி (அரவிந்த லோசனர்) (கேது) தலங்கள் இதில் அடங்கும். இந்த ஒன்பது ஸ்தலங்களையும் வழிபடுவது நவக்கிரக தோஷங்களை நீக்கி, வாழ்வில் நன்மை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதுபோல, பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. அவை,
திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் – சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) – சந்திரன்
நாச்சியார்கோவில் – செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி – புதன்
திருஆதனூர் – குரு
திருவெள்ளியங்குடி – சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் – சனி
கபிஸ்தலம் – ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் – கேது
இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்வியதேசங்களாகவும் விளங்குகின்றன.

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில்:

The heroes of the nine planets that bring good luck..!! - 05

திருச்சி சந்திப்பு ரயில்வே காலணியில் உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் நவக்கிரக சந்நிதி உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோயில்களில் நவகிரக சந்நிதிகள் அமைக்கப்படுவதில்லை.
ஏனெனில் ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவான் குறுக்கிடமாட்டார் என்பது நம்பிக்கையாகும். இருப்பினும், இங்குப் பிரத்தியேகமாக நவகிரக சந்நிதி அமைந்துள்ளது.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில்:

The heroes of the nine planets that bring good luck..!! - 05

திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரத்தில் அசுவமேத யாகம் செய்த போது, இந்திரன் நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப் படுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரத்தின் நுழைவாயில் சுவரில், நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பங்களாக, திருமாலை வணங்கும் நிலையில் அமைந்துள்ளன. நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலில் உள்ள நவக்கிரகங்களை வணங்கினால், நவக்கிரக தோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். இந்த நவக்கிரகத்தைச் சுற்றிலும் 12 ராசிகளும் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்குப் பெருமாளே அனைத்து நவகிரகங்களையும் கட்டுப்படுத்துபவராகக் கருதப்படுவதால் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இத்தலத்தின் மூலவர் நீலமேகப்பெருமாள் (சௌரிராஜப் பெருமாள்) மற்றும் தாயார் அழகிய மங்கை நாச்சியார் (பத்மினி) ஆகியோர் நவகிரகங்களுக்கான தெய்வங்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கே சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது. இதனால், நவகிரக தோஷங்கள் நீங்கும்.

நவக்கிரகங்கள் அனைத்தும் பெருமாளிடமே ஐக்கியமாக உள்ளன என்பதற்கு ஆதாரமாகப் பகவத்கீதையில் கிருஷ்ண பகவானே கூறியுள்ளார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ஹ"

எவர் ஒருவர் என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறார்களோ, அவர்களது கிரக தோஷங்களையும் போக்குவதாகக் கிருஷ்ணர் கூறுகிறார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 05

மீண்டும் அடுத்த வாரம் நலம் தரும் நவகிரக நாயகர்களுடன் தொடர்வோம்….