தொடர்கள்
அனுபவம்
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - ஆர். மீனலதா

20251125192320501.jpg

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!"

"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!"

"பசுமை நிறைந்த நினைவுகளே! " போன்ற பாடல்களை முணுமுணுக்கும் போதெல்லாம் நம் இளமைப் பருவ நினைவுகள் நம் கண் முன் நிழலாடுகின்றன.

விரைவில் 2025 ஆம் ஆண்டு நிறைவு பெற்று புதிய ஆண்டு 2026ல் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.கண் மூடிக் கண் திறப்பதற்குள் ஒரு வருடம் ஒடிவிட்டது என்பார்கள். காலம் ஓடுகிறது. ஆனால், நமது பால்ய நினைவுகள்...!! மனித மனதின் ஒரு மூலையில், நினைவுகள்,மகிழ்வானாலும், சோகமானாலும் என்றென்றும் பசுமையாக இருப்பது நிதர்சனம். ,

தாயாரின் புடவையிலிருந்து வந்த வாசம், பாட்டி தன்னுடைய கையால் சாத உருண்டையை உருட்டி எனது கைககளில் அளித்தவாறே, கூறிய கதைகள், விளையாடிய பரமபதம் மற்றும் தாயக்கட்டை, தந்தை பொறுமையாக சொல்லிக் கொடுத்த அல்ஜிப்ரா கணக்கு, சகோதரிகளுடன் போட்ட சிறு-சிறு சண்டைகள், பாவாடை நுனிக்குள் முறுக்கை வைத்து கடித்து பங்கிட்டு சாப்பிட்டது இத்யாதி! இத்யாதி!

பத்தாவது வயதில், தாயாரின் மரணம். சரியாக புரியவில்லை. அழுதேன். அவரின் புடவையைக் கையினால் தொட்டேன். அவர் இனிமேல் வர மாட்டார் என்பது புரிய அநேக மாதங்களாயின. அம்மாவின் அம்மா (அம்மாமை பாட்டி) எங்கள் குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்தவர். கைம்பெண்ணாகிய அவர் ஒரு கால் சற்று சரியில்லாமல் சாய்ந்து-சாய்ந்து நடந்தாலும், வீட்டு வேலைகளை திறம்பட செய்வார்.

மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில், எங்கள் தந்தையின் முன்பாக வரவே மாட்டார். ஏதாவது மளிகை சாமான்கள், காய்கறிகள் வேண்டுமென்றால் கூட, என்னிடம் சொல்லி தந்தையிடம் கூறச் சொல்வார். நேரடியாக பேச மாட்டார். அம் மூவரும் தெய்வங்களாகி விட்ட போதும், இன்றும் கண் முன்னே நிற்கின்றனர். பால்ய வயதில், அவர்களிடமிருந்து அறிந்து கொண்ட நல்ல செயல்கள், பசுமரத்தாணி போல இன்றும் மனதில் நிலைத்து நின்று செயல்பட உதவுகிறது.

பால்ய நினைவுகளில் அடுத்து வருவது பள்ளிக்கூடம் மற்றும் சிநேகிதிகள். கால்களில் செருப்பின்றி ஓடியாடி மகிழ்ச்சியுடன் விளையாடிய காலம். தமிழ் மொழியிலிருந்த ஈடுபாடு காரணம், தமிழாசிரியருக்கு நான் பெட்(Pet). மைக் இல்லாமலேயே எட்டு காத தூரம் கேட்கிற குரல் கொண்டவளாதலால், தமிழ் பேச்சுப் போட்டிகளில் எனது பங்கு நிச்சயமாக உண்டு. சிறிய சோப்பு டப்பா, பென்சில் டப்பா போன்றவற்றை, மேடையில் பரிசாக வாங்குகையில் அடைந்த ஆனந்தம் மகிழ்வான நினைவு.

வீட்டில் எப்போதாவது வருகிற விருந்தினர்கள், உறவினர்கள் கொடுக்கும் ஒரு அணா, இரண்டு அணா போன்றவைகளை குருவி மாதிரி சேர்த்து வைத்து வீட்டிற்கு சொல்லாமல் சீனி மிட்டாய், சவ்வு மிட்டாய், கடலை மிட்டாய் போன்றவைகளை வாங்கி சிநேகிதிகளுடன் சேர்ந்து சாப்பிட்ட நினைவு, பசுமையானது.

சிநேகிதியின் தந்தை சினிமா தியேட்டரில் ஆபரேட்டராக பணி புரிய, அவளுடன் சேர்ந்து காசு கொடுக்காமல் ஓசியில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களை 3-4 தடவைகள் பார்த்து, பாடல்களை மனப்பாடம் செய்து பாடி மகிழ்ந்ததை, மறக்க மனம் இன்றும் கூடுதில்லையே.

பால்ய வயதில், என்னுடைய பெற்றோர்களுடன் தெரிந்தவர் வீட்டிற்கு ஒரு தடவை சென்றிருக்கையில், அங்கே டெலிஃபோனைப் பார்த்தேன். ட்ரிங்! ட்ரிங்! என அது ஒலிக்கையில், அந்த வீட்டு மாமி ரிசீவரை எடுத்து, ஹலோ! என்று பேசியதைக் கண்ட என் மனது இதுபோல, நானும் பேச முடியுமா? என்று நினைத்தது நிஜமானது இறையருளே!.

வருடங்கள் பல சென்றபின், தொலைபேசி அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிகையில், எனது மேஜையின் மீது நான்கு வகை நிறங்களில் டெலிஃபோன் சர்வமாக ஹலோ! ஹலோ! ஹலோ! தான்.

பால்ய நினைவுகள், கடந்த காலத்தின் பிம்பங்கள் கிடையாது. வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் மகிழ்ச்சியை உணர்த்தும் தூண்கள். மனதிற்குள் இருக்கும் பொக்கிஷ அறையில் பத்திரப்படுத்தி, அவற்றை அவ்வப்போது புதுப்பிப்பது வாழ்க்கையை மேலும் வளமாக்கும்.

சோகமான தருணங்களில், பால்ய காலத்து மகிழ்வான நினைவுகள் மனதிற்கு ஆறுதல் அளித்து, புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

காலங்கள் ஓடினாலும், கடந்து வந்த பாதையை உணர்ந்து செயல்படுகையில், நிகழ்காலம் நிச்சயமாக மேம்படும்.