தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 14. தி.குலசேகர்

20251127081557815.jpg

ஸ்பிரிச்சுவலிசம். இந்த வார்த்தை ஆன்மா கோட்பாட்டை ஏற்பவர்கள் உண்டாக்கியது. அறிவியலும் புத்தரும் அதை ஏற்கவில்லை. ஆன்மா என்று தனித்தொன்று இல்லை என்பதை அநாத்மா கோட்பாட்டின் வழி புத்தர் நிரூபணமாக்கி இருக்கிறார். அதனால் அதற்கான மாற்றுச்சொல்லாக யுனிவர்சியலிசம் அல்லது பிரபஞ்சத்துவம் என்கிற வார்த்தையையும் பயன்படுத்தலாம்.

யுனிவர்ஸலிசம் என்பது வினையை எதிர்வினையால் எதிர்கொள்வதில்லை. வினையை நேர்வினையால் எதிர்கொள்வது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காண்பிப்பது தான் இதன் சூட்சுமம். மனப்பூர்வமாக மன்னிப்பது தான் இதன் அடிநாதம்.

இதன் நவீன கால பிதாமகர் தாஸ்தாயேவ்ஸ்கி. இதைத்தான் சித்தரிசம், ஜைனிசம், ஜீசஸிசம், சூஃபியிசம், ஜென்னிசம் என்கிறோம். இவை வெவ்வேறு பாதைகளின் வழி பயணித்து, பேரன்பும், பெருங்கருணையும் என்கிற புள்ளியில் வந்து சங்கமிக்க வைக்கிறது.

உதாரணமாக சமீபத்தில் வந்து வெற்றியடைந்த ‘டிராகன்’ திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் வரும் நாயகன் எந்த உழைப்பையும் செலுத்தாமல் நினைப்பதை எல்லாம் அடைய வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதனாலேயே பலவிதமான குறுக்குவழிகளை கையாளுகிறான். அதில் வெற்றிகளையும் பெறுகிறான்.

2025112708161848.jpg

ஒரு கட்டத்தில் பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்கிறான். அதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு காரியம் செய்கிறான். அதில் அவனுக்கே தெரியாமல், ஒரு அப்பாவி பலிகடாவாக்கப்படுகிறான்.

அப்படியாக, அது அவனுக்கும் ஒரு செல்வந்தனின் தோற்றப்பொலிவு கொண்ட மகளோடு விடிந்தால் திருமணம் என்கிற நிலைக்கு நகர்கையில், அவனுக்கு தெரிய வருகிறது. குற்றவுணர்ச்சி அவனை பிடுங்கித் தின்கிறது.

அதனால் கடைசி நேரத்தில் அவன் இதுவரை செய்திருந்த அத்தனை பித்தலாட்டங்களையும் ஒத்துக்கொண்டு, கிடைக்க இருந்தது அத்தனையையும் இழக்கிறவனாய், வாழ்க்கையை மறுபடி முதலில் இருந்து துவக்குகிறான். இப்போது அவனிடம் இதுநாள் வரை இருந்து வந்த எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லை. அவன் மகிழ்வோடு புதிய வாழ்க்கையை உற்சாகத்தோடு ஆரம்பிக்கிறான்.

பத்து லட்சம் மூலதனத்தில் எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருதுகளை அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து பெற்ற ஈரானிய திரைப்படங்களான தி செப்பரேஷன், தி சேல்ஸ்மேன் போன்ற படங்கள் இந்த சித்தாந்தத்தை அடியொற்றி எடுக்கப்பட்டவை தான்.

தாஸ்தாயேவ்ஸ்கி சித்தாந்தம். அவருடைய கரமசோவ் பிரதர்ஸ் நாவலில் வரும் நாயகன் திமித்ரி, தான் சுயநலம் பிடித்த தன் தந்தையை கொலை செய்ய வேண்டும் என்று சமயங்களில் நினைத்திருப்பான். இப்போது எதிர்பாராதவிதமாக அவனின் தந்தை கொலைசெய்யப்படுகிறார். குற்றம் அவன் மேல் விழுகிறது. அவன் அந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறான். மனதில் அந்த குற்றத்தை செய்ய நினைத்ததற்காகவே அந்த குற்றத்தை அவன் ஏற்றுக்கொள்கிறான். இப்படியான புதிய பிரபஞ்சத்துவ பார்வையை மனிதம் ததும்ப வெளிப்படுத்துகிற படைப்புகள் இந்த வகைமையில் இடம் பிடிக்கின்றன.