தொடர்கள்
கவிதை
அந்த இடத்தை நோக்கித் தான் - கோவை பாலா

20251127082508776.jpeg

எல்லோரும் செல்கின்றோம், அந்த இடத்தை நோக்கித் தான்...!

சொல்லிக் கொண்டிருந்தனர்...
இறந்துவிட்டார் அவர்...!
அடக்கம் செய்யனும் என்று...!

எட்டிப் பார்த்தேன் உள்ளே...
கடைசி மூச்சு போனதோ வெளியே..!
கட்டிப் போடவில்லை இன்னும்,
கால் கட்டை விரல்களை...!
இப்போதுதான் இறந்திருந்தார்...!
நம்பிக்கை வரவில்லை...!

என்றோ அவர் இறந்துவிட்டார்...
யாரும் கவனிக்கவில்லை...!

இல்லாள் இல்லை என்றாகி
இருபது வருடங்கள் ஓடியும்,
இருவேளை,ஏன்,ஒரு வேளை
உண்டாயா உணவேதும்...?
உறவுகள் கேட்காத போதே,
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌!

போனாள் மனைவி அன்று...
போக வேண்டியது தானே
கூடவே இவரும் அங்கே...
கூரிய மருமகள் வார்த்தைகள்
ஏறிய செவிகள் மடுத்து,
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌!

தாய்க்குப் பின்னர் தாரம்...
தாரத்தின் பின் வீட்டின் ஓரம்...!
என்றே வாழ வைத்தது நேரம்...!
அன்றே இறந்துவிட்டார் அவர்...
யாரும் கவனிக்க வில்லை..‌!

காசும் பணமும் காய்க்கும்,
மரமாய் தந்தை இருந்து,
பாசம் சுகமும் பெற்ற மகன்...
காசு மரத்திலா காய்க்குது...?
கேட்டானே மகன் தந்தையிடம்...!
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌!

"முதியோர் இல்லத்தை தேடுங்கள்..
தொலை தூரத்தில் பாருங்கள்..
தொலைத்து தலை முழுகலாம்.."
அம்பாய் துளைத்த வார்த்தைகள்...
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌.!

துணைவியை இழந்த நிலையில்,
தொல்லை இனி இல்லையென்று
சுற்றியிருந்த சிலர் கேலிசொல்ல..
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌.!

வயது ஆனதென காலம் காட்டும்...!
வாய் தனது வேலையை காட்டும்...!
பிடித்ததை சாப்பிட ஆசை படும்...!
கேட்டால், பேச்சால் வசைபடும்...!
கேட்க பயந்து ஆசை அடங்கும்...!
இறந்துவிட்டார் அவர் அன்றே...
யாரும் கவனிக்க வில்லை..‌.!

இப்போது தான் இறந்தாரா...?
நம்ப மனம்தான் மறுக்கிறது...!

நான் மட்டுமல்ல நீங்களும் தான்...
போகும் வழியினில் தேடுங்கள்...!
எத்தனையோ பேர் இருப்பார்கள்...
இறந்து கொண்டிருப்பார் அருகினில்,
நின்று கொடுங்கள் சில வினாடிகள்...!
விட்டுச் சொல்லுங்கள் ஆறுதலாய்,
அவர்களுக்கு சில வார்த்தைகள்...!

வாழ்வது மட்டுமல்ல வாழ்க்கை...!
வாழ வைப்பதும் வாழ்க்கைதான்...!
உணர்ந்து கொள்ள வேண்டும் மனதில் நாம்...
எல்லோரும் செல்கின்றோம் அந்த இடத்தை நோக்கித் தான்...!

பாலா கோவை