
2025 ஆம் ஆண்டின் மாபெரும் தகவல் தொழில் நுட்ப புரட்சியாக உருவெடுத்திருக்கும் சொல், செயற்கை நுண்ணறிவு(AI). எங்கெங்கு காணினும் ஏஐயடா என்று கூறுமளவிற்கு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை, பள்ளி கல்லூரி முதல் அலுவலங்கள் வரை, இந்த செயற்கை நுண்ணறிவின் தாக்கம் எல்லோரிடத்திலும்,எங்கும் வியாபித்திருக்கிறது. அர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்பது, மென்பொருள் மூலம் மனிதனின் அறிவு, கற்றல், தீர்மானம் எடுக்கும் திறன் போன்றவற்றை உருவாக்குவது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் AI என்பது மனிதனின் அறிவை நகலெடுக்க முயலும் ஒரு தொழில்நுட்பம். அறிவுப் பெட்டகமாக விளங்கும் இந்த தொழில் நுட்பத்திடம் நீங்கள் கேள்வியை தெளிவாகக் கேட்டால், அடுத்த வினாடி அதற்கான பதில் உங்கள் கையில். கேள்வி கேட்கும் திறனை "Prompt Engineering" என்று அழைக்கிறார்கள். LLM (Large Language Model) என்பது நீங்கள் கேட்கும் கேள்வி, சூழ்நிலை மற்றும் உங்கள் மொழியை புரிந்து, அதற்கேற்ற பதிலை உருவாக்கும் AI மாடல். ChatGPT, Google Gemini போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். AI, LLM மற்றும் Prompt Engineering - இந்த மூன்று வார்த்தைகளே இன்று உலகின் தாரக மந்திரங்களாக உள்ளன. மனித இனத்தின் இந்த படைப்பை கண்டு பிரமிக்காதவர்கள் இல்லை, AI பற்றி பேசாத நிறுவங்களும் இல்லை. 2010 முதல் இது பேசப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டில் தான் இதன் முழு தாக்கத்தையும் நாம் உணரத் துவங்கியுள்ளோம்.
உணர்ச்சியற்ற மனித நகலாக உருவாகி இருக்கும் AI தொழில்நுட்பம், மனிதன் செய்யும் பல அறிவார்ந்த வேலைகளை வேகமாகவும், துல்லியமாகவும், சோர்வில்லாமலும் செய்யும் திறன் வாய்ந்தது. "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற வாக்கிற்கிணங்க, எந்த ஒரு கேள்விக்கும் பதில் அடுத்த வினாடி உங்கள் கையில். பல வேலைகளை தானியங்கியாக (automated) செய்யும் திறன் கொண்டதால், மீண்டும் மீண்டும் செய்யும் ஒரே மாதிரியான வேலைகள், நீண்ட நேரம் எடுக்கும் வேலைகள் இன்று இலகுவாக குறைந்த நேரத்தில் முடிகின்றன.
இந்த தொழில்நுட்ப புரட்சியை ஒரு சாரார் வரவேற்றாலும், இது மனித இனத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக மற்றுமொரு சாரார் கருதுகின்றனர்.
மனிதனின் சிந்தனை திறன், படைப்பாற்றல், ஞாபக சக்திக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து தகவல் தொழில் நுட்பத்தில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் நாம் கண்டிருக்கின்றோம் .
மின்னஞ்சல் முதல் வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் முதலிய சமூக ஊடகங்கள் வரை படிப்படியாக பல மாற்றங்கள் நிகழ்திருக்கின்றன. கடிதங்கள் மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்த காலம் மாறி இன்று சமூக ஊடகங்கள் மூலமாகவும், புலனம் மூலமாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.
வங்கி வேலைக்கு நேரில் சென்று, சக மனிதர்களிடம் பேசி சேவை பெற்ற நாம், இன்று பெரும்பாலும் வங்கியின் தானியங்கி செய்தியின் மூலம் நமது வேலைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இன்னும் ஒரு படி மேலே சென்று, இப்பொழுது அரட்டை இயலி / சாட்பாட் ( ChatBot ) என்னும் மென்பொருள், மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று, கணினிக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதரணமான உரையாடலை நிகழ்த்துகிறது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மனிதத் தொடர்புகளை குறைத்து கொண்டே வருவது, இன்று நம் கண் முன் இருக்கும் நிதர்சனம். அது அச்சமளிப்பதாகவே உள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் இணையதளம் மூலமும், இப்பொழுது AI மூலம் கிடைப்பதும் கூட இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத்தை தேவைக்கேற்ப பயன்படுத்துவது என்பது, அடுத்த தலையினருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால். இதை வலியுறுத்தும் வகையில் இனி வரும் காலங்களில், பாடத்திட்டத்தில் இச்சிந்தனையை சேர்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கத்திய நாடுகளில், இணையதள பயன்பாடு பற்றி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியா ஒரு படி மேலே சென்று, பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கு இணைய பயன்பாடுகளில் கட்டுப்பாடு விதித்துள்ளது. மனித வாழ்க்கையை எளிதாக்கி, மனிதனுடன் இணைந்து செயல்படும் ஒரு சக்தியாக உருவெடுத்திருக்கும் இதை கவனமாகக் கையாளும் கடமை நமக்கு இருக்கிறது.
"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதை நினைவில் கொண்டு, தொழில் நுட்ப மாற்றங்களோடு கைகோர்த்து, தேவைக்கேற்ப, அளவோடு, சிந்தித்து 2026 க்குள் நுழைவோம்......

Leave a comment
Upload