
கதைகள் எல்லாமே வாசகர்கள் படித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. முற்றிலும் கற்பனை அல்லாத எதார்த்தக் கதைகள், யாரையாவது விமர்சிப்பதாக இருக்கலாம். அது கட்டுரை, கதையாக அவதாரம் எடுக்கும் ஜாலம். அப்படி சில கதைகளை அவன் எழுதினான்.
ஒரு கதையில் மூன்று கதாபாத்திரங்கள். வாசகர்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒருவர் பிரதமர் நரசிம்மராவ், மற்றவர் சட்ட மந்திரியாக இருந்த டாக்டர் சுப்பிரமண்யஸ்வாமி, மூன்றாமவர் முதல்வர் ஜெயலலிதா. எந்த வாசகரும் இவர் இன்னார் என்பதை எளிதில் ஊகித்துவிட முடியும். கதை திகிலுடனும், சஸ்பென்சுடனும் எழுதப்பட்டிருந்தது. அதில் நையாண்டிக்கும் குறைவில்லை.
அரசியல்வாதி சுப்பிரமண்யஸ்வாமி அவனது நண்பர், யாரோ ஒருவர் அவரிடம் சொல்லியிருக்கிறார். அவரை ஒரு பாத்திரமாக்கி அவன் ஒரு கதை எழுதியிருக்கிறான்’ என்று. அவர் அவனை தொலைபேசியில் அழைத்து அப்படியா சமாச்சாரம் என்று கேட்டார். ஆம் என்றதும், அந்தக் கதையை தனக்கு அனுப்பச் சொன்னார். அவன் அனுப்பினான். கதை கையில் கிடைத்ததும், அவர் மறுபடியும் தொடர்பு கொண்டார். தனக்கு தமிழ் பேச மட்டும்தான் தெரியும், படிக்கத் தெரியாது. அதனால் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரச் சொன்னார். அவன் தன் கதையை அவருக்காகவே பிரத்தியேகமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு அவர் சொன்னார், ‘எனக்கும் பிரதமருக்கும் இடையிலான உரையாடலை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். பிரதமர் பாத்திரப் படைப்பும் அபாரம், அதேபோல அந்தப் பெண்மணி. அதெல்லாம் இருக்கட்டும், என்னை அரசியலை துறந்துவிட்டு, மறுபடியும் பொருளாதாரப் பேராசிரியராக போய்விடுவேன் என்று எழுதியிருக்கிறீர்கள். அது நடக்காது. நான் அரசியலிலேயே தொடர்வேன்’ என்றார். அப்படியேதான் தொடர்கிறார்.
அந்தக் கதையை அவன் தமிழ்நாட்டின் முக்கிய வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பினான். யாரும் பிரசுரிக்கவில்லை. கதையின் போக்கு, சதி, விதி, மதி என்பது போல அரசியல் வில்லங்கங்களை வர்ணித்திருந்தது-. அந்தக் கதையையும் சேர்த்து 12 கதைகள் கொண்ட ‘பணநாயகம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு 1998 இல் வெளிவந்தது. அதற்கு அட்டைப் படத்தை, ஓவியர் தாமரை கார்ட்டூனாக வரைந்து கொடுத்திருந்தார்.
அடுத்தடுத்த வருடங்களில், அந்தச் சிறுகதை தொகுதி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தெலுங்கு மொழிபெயர்ப்பு வந்த அதே தினத்தில் அவன் லண்டனுக்குப் புறப்பட இருந்தான். அந்த நேரத்தில்தான், அவனுக்கு தெலுங்கு மொழிபெயர்ப்பு கையில் கிடைத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு பிரதிகளை எடுத்துக் கொண்டான்.
லண்டனில் அவன் ஒரு தொழிலதிபர் நண்பருடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே உள்ள கிரௌவுன் பிளாஸா என்ற நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தான். அங்கே கொய்லான் என்ற இந்திய உணவு விடுதி இருந்தது. அங்கே மதிய உணவுச் சாப்பிடச் சென்றபோது, பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர் வேறு யாரும் இல்லை, ஓய்வு பெற்ற பிரதமர் நரசிம்மராவ்தான். அவனுடன் சென்றிருந்த தொழிலதிபர் நரசிம்மராவுடன் தெலுங்கில் பேசி அவனை இன்னாரென்று அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர்களது உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது. நரசிம்மராவ் அவர்களுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். உணவுக் கூடத்திலிருந்து வெளியே சென்றபோது அவன் சொன்னான், ‘சார் நான் தமிழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அது உங்களைப் பற்றியது. அதன் தெலுங்கு மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது. அந்தக் கதையில் உள்ள மூன்று கதாபாத்திரங்களில் நீங்கள் ஒருவர். தெலுங்கு மொழிபெயர்ப்பில் உள்ள அந்தக் கதையைப் படித்துவிட்டு எனக்கு அபிப்ராயம் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். சரி என்று ஒப்புக்கொண்ட அவர், ‘உடனே என் அறைக்கு அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வா’ என்றார்.
அதன்படியே அவன் புத்தகத்துடன் அவரைச் சந்தித்தான். அவனுக்குத் தெலுங்கு தெரியாது. எந்தப் பக்கத்தில் அந்தக் கதை வந்திருக்கிறது என்பதை ஊகித்தான். காரணம் அந்தக் கதையே புத்தகத்தின் நீளமான கதை.
பக்கங்களை எண்ணிப் பார்த்த பிறகு அந்தக் கதையைச் சுட்டிக்காட்டி, ‘முதல் பத்தியிலோ, இரண்டாம் பத்தியிலோ பிரதமர் என்கிற வார்த்தை இருக்கிறதா’ பாருங்கள் என்றான். அவர் சில வரிகளைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘இருக்கிறது’ என்றார். ‘அப்படியானால் இது உங்களைப் பற்றிய கதைதான்’ என்று சொல்லி புத்தகத்தைக் கொடுத்தான். அப்போது மதியம் 2 மணி.
‘4.00 மணிக்கு வா, படித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்றார் நரசிம்மராவ். 4.00 மணிக்கு மறுபடியும் அவரை பார்க்கச் சென்றான். அந்தக் கதையில் பிரதமரை கொலை செய்துவிட்டு, அந்தப் பதவியை பிடிக்க முயலும் முதல்வர், ஒரு சதித்திட்டம் தீட்டி, அவர் போன்ற டூப்பை அவர் அறையில் அமரச் செய்து, அவரைக் கடத்திவிடுவதாகவும், கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அவர் உயிருடன் வருவதாகவும் கதை. அதைப் படித்துப் பார்த்த நரசிம்மராவ் சொன்னார், ‘நம் நாட்டில் இப்படி நடக்காது என்று சொல்ல முடியாது’.
உன் கற்பனை கொஞ்சம் அதீதம் என்றாலும் காலத்தின் போக்கு அப்படித்தான் இருக்கிறது. ‘கதையில் மூன்று பாத்திரங்கள். ‘‘ஒரு பாத்திரமான எனக்கு தெலுங்கில் கொடுத்துவிட்டாய். இன்னொரு பாத்திரமான சுப்பிரமண்யஸ்வாமிக்கு ஆங்கிலத்தில் கதையைக் கொடுத்துவிட்டாய். தமிழில் தானே எழுதினாய்? மூன்றாவது கதாபாத்திரமான ஜெயலலிதாவிடம் தமிழ்க் கதையைக் கொடுத்தாயா?’’ என்று கேட்டார்.
அவன் இல்லை என்றான். நரசிம்மராவ் பட்டென்று சொன்னார், ‘அப்படி நீ கொடுத்திருந்தால், இன்று என்னிடம் தெலுங்கு மொழிபெயர்ப்பைக் கொடுக்க உயிரோடு இருந்திருக்க மாட்டாய்.’ ஜெயலலிதாவைப் பற்றி நரசிம்மராவின் மதிப்பீடு அது.
கதை பற்றி பேசிய பிறகு அவன் நரசிம்மராவிடம் சில பொது விஷயங்களையும் பேசினான். ‘சார், உங்கள் காலத்தில் நீங்கள் நதிநீர் திட்டத்தைத் தொடங்கியிருக்கக் கூடாதா?’ நதிநீர் இணைப்பை பிரம்மபுத்திராவில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கான திட்டம் என் மேஜையில் இடது மூலையில் இருந்தது. அந்தக் கோப்பை நான் கையில் எடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தது. அது ஒரு பிரச்சனைக்குறிய பைல் என்றார். அவன் விடைபெற இருந்த சமயம் அவனது டைரியில் நரசிம்மராவ் தன் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்து, டெல்லி வந்தால் சொல்லு, என் வீட்டிற்கு வா, லன்ச் சாப்பிடுவோம்’ என்றார். அந்த அழைப்பை அவன் ஏற்கும் சந்தர்ப்பம் வந்ததில்லை.
நரசிம்மராவ்தான் இந்தியாவுக்கான அசல் சுதந்திரத்தை, அதாவது பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர். தான் எழுதிய கதையின் மூன்று வி.வி.ஐ.பி. கதாபாத்திரங்களில் இரண்டு பேரை சந்தித்து உங்களைப் பற்றிய கதை இது என்று சொல்லும் வாய்ப்பும் துணிவும் எல்லோருக்கும் வாய்க்குமா என்பது ஒரு வினோதம், படித்த இரண்டு முக்கியஸ்தர்களும், தங்களைக் கிண்டல் செய்ததற்காக அவனிடம் கோபித்துக் கொள்ளாமல், கதையை கதையாகவும் ஓரளவுக்கு நிஜமாகவும் ரசித்து, பாராட்டியது அந்த இரு விவிஐபிக்களின் பெருந்தன்மை. எந்த எழுத்தாளருக்கும் இது ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். அதுதான் எழுத்தின் மகிமை.

Leave a comment
Upload