பாராட்டுங்கள் - நல்லதே நடக்கும்...
தினந்தோறும் எங்கள் தெரு வாசலில் நாலைந்து எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு பைக்கில் போன் பேசியபடியே ஒரு இளைஞர் போவார். எங்கள் வீட்டை தாண்டி ஒரு ரயில்வே ட்ராக், அதை கடந்தால் ஒரு சிறிய ஏரி... அதை சுற்றி பசுமையான புல்வெளி.. தினந்தோறும் அந்த மாடுகளை மேய்க்க அவர் அழைத்துச் செல்கிறார் என்று நினைக்கிறேன். அவரை தினந்தோறும் நான் கவனிப்பேன், செல்பேசியில் பேசியபடியே பைக் ஒட்டிக்கொண்டு மாடுகளையும் அழைத்துச் செல்வார்.
இப்போதெல்லாம் பேப்பர் போடுபவர் முதல், பால் கொண்டுவருபவர் வரை எல்லோரும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். ஒரு முறை பால் பாக்கெட் விநியோகிக்கும் இளைஞரை வழிமறித்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்... அவர் எம்பிஏ படிப்பதாக சொன்னார். இப்படி வீடு வீடாக பால் கொண்டு போடுவது தனது படிப்புக்கு இழுக்கு, அசிங்கம் என்றெல்லாம் பார்க்காமல், அவர் இதை செய்வதை பார்த்ததும் எனக்கு சந்தோஷத்தை தந்தது.
இதேபோல் ஒரு இளம்பெண், சைக்கிளில் வந்து நாளிதழ் கொண்டு வந்து தருவார். அந்த இளம்பெண் காலை 8 மணிக்கு ஒரு சொகுசு காரில் அலுவலகம் போவதைப் பார்த்திருக்கிறேன், அவர் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார், நிறைவான ஊதியம். ஆனால், தன் தந்தை இந்த நாளிதழ் வினியோகிக்கும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்... சொல்லப்போனால் அந்த வருமானத்தில் தான் நான் கல்லூரியில் படித்தேன். என் அப்பாவிற்கு உதவுவதற்காக நான் இதை விரும்பி செய்கிறேன் என்றார் அந்த இளம்பெண்.
நாளிதழ், பால் இரண்டுமே நமக்கு அத்தியாவசியம். நாளிதழ் விநியோகிப்பாளர், பால் வினியோகம் செய்பவர் இருவருமே அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும், அப்போதுதான் ஆறு மணிக்குள் நாளிதழ், பால் இரண்டையும் தங்களது வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். குளிர், மழை இதையெல்லாம் பொருட் படுத்த முடியாது. செய்தித்தாள் வரவில்லை என்றால் அல்லது தாமதம் என்றால் வாடிக்கையாளர் சிடு சிடு என தன் கோபத்தை அந்த இளைஞரிடம் காண்பிப்பார்... அதுமட்டுமல்ல... சும்மாவா போடுகிறீர்கள், காசு வாங்குகிறீர்கள் இல்லையா என்றும் சுட்டிக்காட்டுவார். பால் வினியோகம் செய்பவருக்கும் இது பொருந்தும். நம்மில் பலர் காலையில் எழுந்ததும், செய்தித்தாள், காப்பி இரண்டும் இருந்தால்தான் முழிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவர்கள் கோபம் கூட நமக்கு நியாயமாகத் தான் படும். ஏனென்றால், அவர்களை அப்படி பழக்கப் படுத்தியது நாளிதழ், பால் விநியோகஸ்தர்கள் தான். எனவே இந்த இருவரும் அவர்களிடம் வீண் விவாதம் செய்யாமல், பணிவாக பேசுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியது.. என் அப்பாவின் வருமானத்தில் நாங்கள் ஏழு குழந்தைகள், எங்களை வளர்க்க வேண்டிய குடும்ப சுமை என் அம்மாவின் தலையில் தான். எங்கள் பாட்டியின் சகோதரி இளம் வயதில் விதவையானவள், நன்கு சமைப்பாள், நிறைய புத்தகங்கள் படிப்பார், ஆச்சாரமானவர். நாங்களெல்லாம் அக்கா என்று அழைப்போம். உண்மையில் அவர் எங்களுக்கு பாட்டி. எங்கள் பாட்டிக்கு அக்கா, எங்களுக்கும் அக்கா வாங்கிவிட்டார். இதேபோல் எங்கள் அப்பாவின் அம்மாவை, நாங்கள் அம்மா என்றுதான் கூப்பிடுவோம். எங்க அப்பா, அம்மா என்று அழைத்தார்... நாங்களும் அப்படியே பழகி விட்டோம். எங்கள் அம்மாவை ‘ஜா’ என்று கூப்பிடுவோம். அதாவது ஜனக்க வல்லி என்கின்ற சரோஜா தான் எங்கள் அம்மா. முதல் பெயரில் முதல் எழுத்து ஜா, இரண்டாவதில் கடைசி எழுத்து. எனவே எங்கள் அம்மா எங்களால் ‘ஜா’ என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் எல்லோருமே அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்... எங்க அக்கா பாட்டி, எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ எண்ணி, எங்களுக்கு ஒரு பசு மாடு வாங்கி தந்தார். அதுவும் எங்கள் குடும்ப உறுப்பினராக குடும்ப அட்டையில் சேர்ந்தது. கூடவே எனது குடும்ப பொருளாதார சுமையையும் அது குறைத்தது. அது தினமும் காலையில் 3 லிட்டரும், மாலையில் இரண்டரை லிட்டர் பால் தரும். எங்கள் வீட்டில் காலையில் மட்டும் தான் காபி, மாலையில் எங்க அப்பாவிற்கு மட்டும்தான் காப்பி. அதுகூட அவர் ஆபீஸில் இருப்பார்... நாங்கள் யாராவது எடுத்து கொண்டு போய் தருவோம். எங்கள் அப்பா சாப்பிடும்போது, காபி டபராவில் கொஞ்சம் தருவார்.
வீட்டுக்குப் போக மிச்சமிருக்கும் பாலுக்கு, மூன்று வாடிக்கையாளரை எங்கள் அம்மா கேன்வாஸ் செய்து பிடித்துவிட்டார். காலையில் நான்தான் அந்த மூன்று வீட்டுக்கும் பால் கொண்டு போய் தருவேன். இப்போது பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்து தருகிறார்கள் அல்லது பாக்கெட் பால் என்று ஆகிவிட்டது. ஆனால், அந்தக் காலத்தில் எவர்சில்வர் சொம்பில், மூன்று வீட்டுக்கும் ஒரு ஒயர் கூடையில் எடுத்துச்சென்று தருவேன். மழை என்றால் நெல் கோணியை தலையில் கவிழ்த்துக் கொண்டு எடுத்துச் செல்வேன். அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் அதுதான் குடை. குளிர் காலத்தில் இன்னொரு பழைய சட்டையை மேலே போட்டுக் கொண்டு போய் தருவேன். மாலை பள்ளி முடிந்ததும்ம் முதல் வேலை பால் கொண்டு போய் தருவதுதான். அதன் பிறகுதான் விளையாடுவதை பற்றியெல்லாம் யோசிக்க முடியும். உண்மையில் அது எங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சி அது என்பதுதான் உண்மை. முதல் தேதி சம்பளம் வந்திருக்கும், இரண்டாம் தேதி பால் பணம் தருவார்கள்... அன்று வெள்ளிக்கிழமை என்றால் பணம் தர மாட்டார்கள், மூன்றாம் தேதிதான் பால் பணம் கிடைக்கும். சில சமயம் என்னம்மா அவர்களிடம் முன்பணமாக பால் பணத்தை வாங்கி விடுவதும் உண்டு.
மாட்டு சாணி கூட எங்களுக்கு உதவி செய்தது. மாட்டு சாணியை ஒன்றாகக் குவித்து வைத்து, வாரம்தோறும் வரட்டி தட்டும் வேலை நடக்கும். வரட்டி தட்டுவது என்பது ஒரு கலை... சாணியில் வைக்கோல் கூளத்தை கலந்து உருண்டையாக்கி, சுவரில் வட்டமாக தட்ட வேண்டும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அது உடையாமல் சுவற்றில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அதன் பிறகு, அதை இரண்டு நாள் தரையில் காயவைக்கவேண்டும். பிறகு உடையாமல், வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். இரண்டரை கை வரட்டி பத்து பைசா. ஒரு கை என்பது 4 வரட்டி. இந்த வரட்டி விற்பனை என் அம்மாவின் அன்றாட செலவை சமாளிக்க உதவும். இது தவிர பசுவும், கன்றும் போடும் சாணக் கழிவுகள் மற்றும் வீணாகும் வைக்கோல் இவற்றையெல்லாம் ஒரு குழியில் போட்டு பாதுகாப்போம். அதுவும் எருவாக விற்கப்படும். இப்படி பசுமாடு எங்களுக்கு பணம் காய்ச்சி மரமாக இருந்தது. உண்மை ஒரு மாடு, இரண்டு மாடாக எண்ணிக்கை உயர்ந்தது. அதன் பிறகு ஒரு மாட்டு பால், வாடிக்கையாளர் சப்ளைக்கும், இன்னொரு மாட்டு பால் கூட்டுறவு சொசைட்டிக்கும் என்று பிரித்துக் கொண்டோம். கூட்டுறவு சொசைட்டிக்கு, எங்கள் அண்ணன் மாட்டை ஓட்டிக் கொண்டு செல்வான். பால் வருமானம், ஒரு கட்டத்தில் எங்கள் அப்பாவின் சம்பளத்தைவிட அதிகமாகிவிட்டது. குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவது, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பால் கறப்பதற்கு என்று ஒருத்தர் வருவார், அவர் பெயர் பச்சையப்பன். ஆனால், நாங்கள் அவரை பச்சை என்றுதான் கூப்பிடுவோம். பொங்களுக்கு புது வேட்டியுடன், 50 ரூபாய் என் அம்மா தருவாள். சில நாள் பால்காரர் வராமல் ஜூட் விட்டு விடுவார். அப்போது எங்க அம்மா படும் அவஸ்தை சொல்லிமாளாது. எங்கள் மாமா நன்றாக பால் கரப்பார். அவரைப் போய் அழைத்து வருவேன். அவர் தூங்கிக் கொண்டிருப்பார்... எழுந்ததும்... “உங்களுக்கு வேற வேலையே கிடையாது” என்று திட்டிக் கொண்டே வந்து, பால் கறந்து தருவார். சில சமயம், பால் கறந்து முடித்து பால் தவலையுடன் அவர் வரும்போது பச்சை ஓடி வருவார். அப்போது அவர் வாங்கும் டோஸ் நாகரிகமான வார்த்தையாக இருக்காது. எங்களைப் பொருத்தவரை கோமாதா எங்கள் குலமாதா. எங்களை பசி இல்லாமல் வைத்தது, படிக்க வைத்ததில் கோமாதாவின் பங்கும் இருந்தது. எல்லாம் எங்கள் அக்கா பாட்டியின் கை ராசிதான் காரணம். அவர்தான் முதலில் மாடு வாங்கித் தந்து பிள்ளையார் சுழி போட்டார் என்பதும் முக்கிய காரணம்.
இன்றைய தலைமுறை குறிப்பாக நடுத்தர வர்கம், அப்பா அம்மாவின் கஷ்ட நஷ்டங்களை பார்த்து, குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். அப்பாவின் சுமையில் நாமும் பங்கு போட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. நாம் அவர்களிடம், அவர்களின் குறையை சுட்டிக் காட்டாமல்... அவர்களின் நிறையை தேடி பாராட்டினால், காலப்போக்கில் அவர்களின் குறை காணாமல் போகும். இதுதான் நிஜம் நம்புங்கள்.
Leave a comment
Upload