தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி ! பயணிகளை சங்கடப்படுத்தும் புதிய கோவிட் டெஸ்ட் - ராம்.

ஆசியா

சீனா

20210204091841724.jpg

சீனாவுக்கு போகும் எண்ணம் இருந்தால் இந்த செய்தி உங்களை தற்போது யோசிக்க வைக்கும்

ஷாங்காய்க்கு வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு தற்போது புதிய கோவிட் சோதனை செய்கிறதாம் சீனா.

இது வரை தொண்டை, மூக்கு போன்ற இடங்களிலிருந்து சுவாப் எடுத்து கோவிட் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.

சமீபத்தில் ஆசனவாயிலிருந்தும் ஸ்வாப் டெஸ்ட். எடுத்துப் பார்க்கிறார்களாம்.

இதனால் சீனா வந்த ஜப்பானிய பயணிகள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அதிலும் காது குடையும் குச்சி போல ஒரு கருவியில் மூன்று நான்கு செண்டிமீட்டர் வரை நுழைத்து… போதும். மேல் விவரம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தென்கொரியாவிலிருந்து வருபவர்கள் இனி இது போல இல்லாமல் மோஷன் டெஸ்ட் கொடுக்கலாம் என்று தெரிய வருகிறது.

சீனா இது பற்றி சொல்லும் போது இது வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமல்ல உள்ளூர் ஆட்களுக்கும் தான் செய்திருக்கிறோம் பல ஊர்களில் என்று சொல்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை வைரஸ் ஸ்டிரெயின் என்று சொல்லப்படும் கோவிட் கிருமிகள் கழிவுப் பாதையில் இருக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தான் இந்த சோதனை என்று சொல்கிறார்கள்.

சாதாரணமாக இது போன்ற பின்புற சோதனைகள் மனநிலம் சரியில்லாதவர்களுக்கே செய்வார்களாம். ஏனெனில் அவர்களால் வழக்கமான சோதனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்பதால்.

இப்போதைக்கு அதீத சங்கடத்திற்குள்ளாக வேண்டாமெனில் அடுத்த ஆறு மாதத்திற்காவது ஷாங்காய்க்கு பறப்பதை தவிர்ப்பது நலம்.

ஆப்கானிஸ்தான்.

20210204092142341.jpg

ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத்தில் பெண் பத்திரிகையாளர்களை சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

உள்ளூர் தீவிரவாத குழு ஒன்று இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறது.

எனிக்காஸ் டிவி என்ற உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர்கள் 18 வயதிலிருந்து 20 வரையானவர்கள் வேலை முடிந்து திரும்ப வந்து கொண்டிருக்கும் போது செவ்வாய்கிழமை மாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆப்கான் அரசுக்கும் தாலிபானுக்குமான போராட்டத்தில் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலைக்குரியதாக இருக்கிறது. தாலிபானைப் பொறுத்தவரை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு புறம்பானது என்று இந்த படுகொலைகளை செய்ததாக சொல்கிறது.

ஆனால் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி இந்த படுகொலைகளை வன்மையாக கண்டித்திருக்கிறார்.

அவர் சொல்கையில் அப்பாவி மக்களை இது போல தாக்குவது அதிலும் பெண்களை தாக்குவது நமது மதத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆப்கான் கலாச்சாரத்திலேயே இது கிடையாது. அமைதிக்கு பங்கும் விளைவிக்கும், தற்போதைய சூழ்நிலையை மோசமாக்கும் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு என்று வரும் நிஜ சுதந்திரம் ???

தென் அமெரிக்கா

பொலிவியா

20210204092258623.jpg

லா பாஸ் என்ற ஊரில் ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தில் நடந்த கோர விபத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் இறந்து போனார்கள்.

கல்லூரியில் அசெம்ப்ளிக்காக கூடிய போது இந்த விபத்து நடந்தது.

நான்காவது மாடியில் பால்கனியில் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பி எத்தனை பேரை தாங்கும்.

படித்தால் மட்டும் போதுமா. அடிப்படை அறிவு வேண்டாமா ?? அந்த கூட்டத்தில் அந்த பால்கனி கம்பியை ஒரு பெருங்கூட்டம் நெட்டித் தள்ளினால் அது தாங்குமா ??

இது போன்ற விபத்து வீடியோக்கள் பார்ப்பதை நான் தவிர்த்து விடுவேன். இருந்தாலும் மனோ தைரியம் உள்ளவர்கள் இதை பார்த்து விடுங்கள். பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் அப்போது தான் இது போன்ற பால்கனிப் பகுதியில் கம்பியை ரொம்பவும் நம்பி சாய்வது எவ்வளவு மடத்தனம் என்பது புரியும்.

அதிலும் ஏறக்குறைய தலைகீழாக விழப்போன ஒரு பெண் தெய்வாதீனமாக தப்பித்ததும் ஆச்சரியம் தான். மரணத்தை தொட்டு விட்டு மீண்ட அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் அந்தக் காட்சி மறக்காது.

நியூசிலாந்து

20210204092413578.jpg

பெயரில் என்ன இருக்கிறது ??

அதில் தான் எல்லாம் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். நாராயண மூர்த்தி என்ற பெயரை. murthy என்று எழுதினால் அநியாயத்திற்கு கோவம் வந்து விடும். moorthy என்று எழுதினால் தான் ஒய்வார். அது அவருக்கு சம்பந்தமேயில்லாத ஒரு இடத்தில் எழுதினாலும் அவர் பெயரை எப்படி எழுத வேண்டும் என்பதில் பிடிவாதம்.

நியூசிலாந்தில் மஹிநாரங்கி டவுட்டு. என்ற பெண்ணின் பள்ளியில் அவரது பெயரை ரங்கி என்று சுருக்கி விட்டார்களாம் ஆசிரியர்கள்.

இதை கண்டு பொறுக்காமல் அந்த மாணவியின் அம்மா அதை முகநூலில் பதிந்து என் பெண்ணின் பெயரை சொல்லத் தெரியவில்லையென்றால் அதெப்படி சுருக்க போச்சு என்று ஒரே அங்கலாய்ப்பு.

அவர் நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் என்னுடைய மூதாதையர்கள் பெயரை பெரேப்பே பெரேனா என்பதை காலணி ஆதிக்கத்தால் பிலிப்ஸ் என்று மாற்றிக் கொள்ளும் படி ஆகி விட்டது.

என் மகளுக்கு அந்த நிலை ஏற்பட விடமாட்டேன் என்று பொங்கியிருக்கிறார்.

நியூசிலாந்து பள்ளியில் நம்ம ஊரிலிருந்து ஒரு மாணவர் எடப்பாடி பழனிச்சாமி என்று இருந்தால் எப்படி சுருக்குவார்கள் என்று யோசிக்கிறேன்.

ஆப்பிரிக்கா

20210204092531620.jpg

மொரோக்கா பற்றிய விஷயம் என்பதால் இது ஆப்பிரிக்காவைச் சேர்கிறது.

அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த ஓவியம் ஒன்றை ஏஞ்சனினா ஜோலி 9.7 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் விட்டிருக்கிறார். (பாவம் இத வித்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை போல)

எனக்கு ஓவியங்கள் பிடிக்கும் என்றாலும் என்னிடம் நூறு கோடி ரூபாய் இருந்தாலும் பத்து லட்சம் ரூபாய்க்கு ஓவியம் வாங்கி வைத்துக் கொள்வதன் லாஜிக் புரியவே புரியாது.

இதில் 10 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கி என்ன செய்வார்கள் ??

இருக்கட்டும். இந்த ஓவியம் டவர் ஆஃப் தி கெளடும்பியா மாஸ்க் என்ற தலைப்பில் இரண்டாம் உலகப் போரின் போது சர்ச்சில் வரைந்ததாம். இதை அந்நாளைய அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்டுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் சர்ச்சில்.

20210204092554501.jpg

மலைகளின் பின்னணியில் சர்ச்சில் வரைந்த இந்த ஓவியம் ரூஸ்வெட்டுக்கு பரிசாக போய் அவருக்குப் பின் அவர் குடும்பம் இதை ஏலத்தில் விட்டு பல கைகள் மாறி 2011ல் ஏஞ்சலினா ஜோலியின் கைகளுக்கு போய் தற்போது 10 மில்லியன் டாலருக்கு விற்றிருக்கிறது.

ஓவியத்தை விடவும் அதை வரைந்த சர்ச்சில் மற்றும் அதோடு இருக்கும் சரித்திரத்திற்குத் தான் இந்த விலை.

2021020409283468.jpg

சர்ச்சில் ஓவியத்தை போட்ட, சரி இந்த செய்தியில் எதுக்கு ஏஞ்சலினா ஜோலி படம் என்று கேட்பவர்களுக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு படம் போடும் வாய்ப்பு கிடைக்கும் போது போடுவது தவறா யுவர் ஆனர் ????

அமெரிக்கா

20210204093001888.jpg

ஃபிளோரிடாவிலிருந்து நியூ ஜெர்சி விமானம் புறப்படத் தயாராக இருக்கும் போது அவசர அவசரமாக மீண்டும் கேட்டுக்கே கொண்டு வரப்பட்டது.

காரணம் பெப்பர் ஸ்ப்ரே. மிளகு சாறல் ???

பெப்பர் ஸ்பிரே எனும் விஷயம் நம்மூரில் அனைத்து பெண்களும் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதாவது யாரேனும் முரண்டு பண்ணினால் வம்பு செய்தால் இந்த பெப்பர் ஸ்பிரேயை முகத்தில் அடித்தால் போதும். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிராளிக்கு கண்களிலும் தொண்டையிலும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டு தப்பித்து விடலாம்.

அப்படியாப்பட்ட பெப்பர் ஸ்பிரேயை ஒரு பயணி தன்னுடைய கீசெயினில் இணைத்திருக்கு விமானம் புறப்படும் முன்பு ஏதோ அழுத்தி அந்த பெப்பர் ஸ்பிரே ரிலீசாகி விட்டது.

விமான பயணிகளுக்கு கண்களிலும் தொண்டையிலும் எரிச்சல். இருமல்.

கோவிட் சமயத்தில் யோசித்துப் பாருங்கள் இருவது முப்பது பேர் தொடர்ந்து இருமினால் யாருக்கு என்ன என்று அனைவரும் கலவரமாகிப் போனார்கள்

மீண்டும் விமானம் புறப்பட்ட இடத்திற்கே வந்து அனைவரும் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு புறப்பட்டது விமானம்.

தற்சமயம் ஃபோர்ட் மேயர்ஸ் என்ற விமான நிலயத்தில் விமானத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் பெப்பர் ஸ்பிரே எப்படி பாதுகாப்பு சோதனையில் மாட்டாமல் தப்பித்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பா

லண்டன் பிர்மிங்ஹாம்

20210204093118682.jpg

லண்டன் பிர்மிங்ஹாமில். தேசிய வனவிலங்கு குற்றவியல் துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வலர்கள் இணைந்து ஒரு தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு வீட்டில் இருந்து எண்பது முதலை தலைகள் கண்டுபிடிக்கப்படிருக்கின்றன.

பெர்ரி பார் என்ற இடத்தில் இந்த வீட்டில் இருக்கும் ஆசாமி சட்டத்திற்கு புறம்பாக முதலை தலைகளை இறக்குமதி செய்து உலகம் முழுவதும் விற்றுக் கொண்டிருக்கிறானாம்.

இத்தனை முதலைகளுக்கு எங்கே போனான் எப்படி வாங்கினான் என்பது பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

20210204093142638.jpg

நம்மூரில் அரசியல், பண முதலைகளுக்குப் பஞ்சமில்லை. இது போன்ற அசல் முதலைகள் தான் அரிதாகிக் கொண்டு வருகிறது.

ராம்