வாரி வழங்கப்படும் வாக்குறுதிகள்...

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் எல்லா கட்சிகளும், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தந்துள்ள வாக்குறுதிகள், உண்மையில் மக்கள் நலனில் உள்ள அக்கறையா அல்லது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக, குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் மாதம்தோறும் தருவதாகவும்... இது தவிர, ஆண்டுக்கு ஆறு எரிவாயு சிலிண்டர், வாஷிங் மெஷின், கேபிள் டிவி இணைப்பு இலவசம் என்றும் வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கிறது.
திமுகவும் தன் பங்குக்கு இல்லத்தரசிக்கு ஆயிரம் ரூபாய், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று சொல்லியிருக்கிறது.
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் பூரண மதுவிலக்கு என்கிறது.
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம், தனது தேர்தல் அறிக்கையில் தொலைநோக்கு பத்திரம் என்ற தலைப்பில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். உடல் நலம் பாதிக்காத பானமாக ‘கள்’ அறிவிக்கப்படும். நதிநீர் இணைப்பு என்றெல்லாம் சொல்லி இருக்கிறது.
பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு... பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு. இது தவிர.. கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி நதிகள் இணைப்பு என்றும் சொல்லியிருக்கிறது. இதேபோல் அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் செயல்படும் என்று சொல்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதை பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான அதிமுக தான் விளக்க வேண்டும்.
திமுகவின் கூட்டணி கட்சியான ஆறு தொகுதிகளில் போட்டி போடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி... கல்வி, மருத்துவம், சுகாதாரம் தவிர மற்ற இலவச திட்டங்களை எதிர்ப்போம் என்கிறது. இலவசங்களை வரவேற்கும் தோழமைக் கட்சியான திமுகவின் கொள்கைக்கு முரணாக இருக்கிறது விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை. இவர்களும் பூரண மதுவிலக்கு கொள்கை கொண்டுவர மக்கள் துணையோடு தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மதுவிலக்கிற்கு போராட்டமே நடத்த தேவை இல்லை... திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால், விடுதலை சிறுத்தைகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், திமுகவை இப்படி நிர்பந்த படுத்த முடியாது என்று தெரிந்துதான், மக்கள் ஆதரவுடன் போராடுவோம் என்கிறது விடுதலை சிறுத்தை கட்சி.
இதில் வேடிக்கை என்னவென்றால்... ஆட்சி அதிகாரத்தில் அமர போட்டி போடும் இரண்டு திராவிட கட்சிகளும், பூரண மதுவிலக்கு பற்றி எதுவும் சொல்லவில்லை.
இதேபோல்... பாராளுமன்றத்தின் இரண்டு அவையிலும் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக.. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கைவிட தொடர்ந்து அழுத்தம் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது வாக்காளர்களை ஏளனம் செய்வதுபோல் இருக்கிறது.
இப்படி தேர்தல் அறிக்கையிலேயே முரண்படும் அரசியல் கட்சிகள், தேர்தல் அரசியலுக்காக, பதவி ஆசைக்காக கூட்டணி அமைக்கிறது என்பதை இவர்கள் தேர்தல் அறிக்கையே வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டது. இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியாமலா இருக்கும். மக்கள் ஏமாளிகள் என்று நினைக்கும் அரசியல் கட்சிகள் தான், வரும் தேர்தலில் ஏமாறப் போகிறார்கள். இது நிச்சயம் நடக்கும்.

Leave a comment
Upload