
இயற்கை உணவுகளில் மனிதர்கள் உண்பதற்கேற்ற, சத்துக்கள் நிறைந்த பழவகைகள் ஏராளம் இருக்கின்றன. பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
நாம் உண்ணும் பழங்களின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் உடலுக்கு வழங்குகிறது. பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
குறிப்பாக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. கொய்யாப் பழத்தின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். அனைத்து காலங்களிலும் நமது ஊர்களில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழங்களில் ஒன்று கொய்யப் பழம்.
கொய்யாப் பழம் முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்க்கு இணையாக கூறப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைக் கொண்ட பழம்.
“ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப் பழத்தினை அழைப்பார்கள். நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் ‘சி’ சத்து கொண்ட பழம் கொய்யாப் பழம்.
கொய்யாப்பழத்தை “பழங்களின் ராணி” என்கிறார்கள். இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யாப் பழம் கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உள்ள தொழில் நுட்ப முறையில், வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யாவில் பல வகைகள் இருந்தாலும், பழத்தின் உட்புற நிறத்தைக் கொண்டு, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். ஆனால், உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை இரண்டுமே ஒன்றாக உள்ளது.
கொய்யா பழத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது. இதில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.
தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால், கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து, நமது உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த மிகவும் உதவி செய்கிறது. இதை தவிர Journal of biological regulators and homeostatic agents-ல் வெளிவந்துள்ள கட்டுரையில், கொய்யாப்பழம் நுண்ணுயிர்க் கொல்லி என்றும் அது தீய பாக்டீரியாக்களை மற்றும் வைரஸ்களை அழிக்க வல்லது என்று கூறப்பட்டுள்ளது. இதில் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் நமது பசியை போக்குவதல்லாமல் வளர்சிதை மாற்றம் (metabolism) அதிகரிக்க உதவுகிறது என உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் இனி எடை கூடிவிடும் என்று பயப்பட வேண்டாம்.
100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்...
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51., கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27 மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
கொய்யாப்பழத்தின் மருத்துவக் குணங்கள்:
கொய்யாப் பழத்தை சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும். மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும்.
உணவுகளில் உள்ள வேதிப்பொருட்களால் உண்டாகும் வயிற்றுப்புண்ணை போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யாப் பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு மிகச் சிறந்த பழமாக கொய்யாப்பழம் உள்ளது. இதிலுள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B9 வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலம் நல்ல வளர்ச்சி அடையவும் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாதவாறு தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது.
கொய்யாப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம், கொய்யாப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும், பற்கள் பலமடையும், அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.
கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மது போதைக்கு மிகவும் அடிமையானவர்கள், மது பழக்கத்திலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் கொய்யப்பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், மது அருந்தும் எண்ணம் படிப்படியாக குறைந்து மதுவை விரைவில் நிறுத்தி விடலாம்.
கொய்யாப்பழம் முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
எப்போது கொய்யா பழம் சாப்பிட கூடாது..
கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கொய்யாப்பழத்தை நாம் உணவு உட்கொள்வதற்கு முன் கொய்யா பழத்தை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் உணவு உட்கொண்ட பின்போ அல்லது உணவு உட்கொள்ளுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
தீராத நோயால் அவதியுற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் மருந்தின் பலனில் முறிவு ஏற்படும்.
இருமல் இருக்கும்போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. அதேபோல், கொய்யாவை அதிகம் சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் முதலியன வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்தவாரம் உடல் சோர்வு நீங்கி அதிக புத்துணர்ச்சி தரும் திராட்சை பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!!

Leave a comment
Upload