
ஒரு வார்த்தைக்கு, கவிதையில் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த உடுமலை நாராயணகவியார், தற்போது - ஒரு பல்லவியைச் சொல்லி, அமைதியாக இருந்தார்..!
‘‘அண்ணே! நீங்களே சொல்லுங்க… அப்பத்தான் உங்க தாபம், கோபம், ஆதங்கம், அறிவுரை எல்லாமே அடுத்த தலைமுறைக்குத் தெரியும்..!’’
நாங்க சிறுபிள்ளைகள்… என்று அப்பா சொன்னார்.
உடுமலை கவியார் சொல்கிறார்...
‘‘சினிமாப் பாட்டென்றிடும் போதினிலே…
- கொள்ளித்
தேள் வந்து கொட்டுது காதினிலே…’’
என்று சொன்னவர்…
‘‘சுப்பு… சில நல்ல பாடல்கள் வரத்தான் செய்யுது..! சிலது ஏன் இப்படி எழுதறாங்க… கலைவாணர் அண்ணே இருந்தா, இப்படி நம்மளை எழுத விடுவாரா..?’’ என்று சொன்ன உடுமலை கவியார்… அழுதே விட்டார்..!
கலைவாணர் பாசறை, அப்பேர்ப்பட்ட கலை, பாரம்பரிய மிக்க பாசறை..!
கலைவாணர் காலத்துக்குப் பிறகு, அகில இந்திய வானொலியில் - அப்பா, தன் குழுவினருடன் வில்லிசை நிகழ்ச்சிகளைத் துவங்கினார்.
மேலும், அவர் - சினிமா துறையில் வசனங்கள், திரைக்கதை, மூலக்கதை, பாடல்கள், நகைச்சுவை டிராக்ஸ் (தனது நண்பர் நாகேஷுக்காக) - என பன்முகம்..! அதோடு, மேடைகளில் வில்லுப்பாட்டும் வலம் வந்தது..!
‘சின்னஞ்சிறு உலகம்’ - அப்பாவின் மூலக்கதை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம்… அதில், நண்பர் நாகேஷுக்கு வசனப் பணிகளும் அப்பாவுக்கு வந்தது..!
உலகம் இவ்வளவுதான், ஏன், வீட்டுக்கு ஒரு பிள்ளை, அன்னை அபிராமி, படித்த மனைவி, மணமகள்… எனப் பலப்பல திரைத்துறை பணிகள்..!
‘ஏன்’ திரைப்படத்தில், அப்பா வில்லுப்பாட்டு எழுதி, வெங்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அண்ணா பாடியுள்ளார்.
மேலும், ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தில், அப்பா எழுதிய வில்லிசையை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, மலேசியா வாசுதேவன் பாடினார். இப்பாடலுக்கான காட்சியில் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் நடித்துள்ளார்.
சமீப காலத்தில் ‘உத்தம வில்லன்’ படத்துக்காக - என் தந்தை எழுதிய வில்லிசையை, உலகநாயகன் கமலஹாசன் பாடி, திரையில் அப்பாவுடன், நானும் என் மகன் கலைமகனும் கலந்து கொண்டோம்..!
- இத்தனை சம்பவங்கள் நான் வரலாற்றுப் பதிவாகச் சொன்னாலும், அதற்குள் - கலையை வாழவைக்கும் ரகசியம் ஒன்று இருக்கிறது -
‘‘வில்லுப்பாட்டு என்பதே ஒரு சினிமா..!’’
இதை - எதிரொலிக்கும் வார்த்தைகளால் சொன்னவர், நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..!
சிவாஜி சாரின் மருத்துவரும், எங்கள் குடும்ப மருத்துவரும், அந்த நாளில் ஒருவரே - அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன்-ராஜலட்சுமி தம்பதியர்..!
ஒருமுறை அவர்களின் வீட்டில் ஐயப்ப பூஜை… அப்பாவுடன் - நாங்கள் - குடும்பத்துடன், குழுவினருடன்..!
சரியாக 6.30 மணிக்கு சிவாஜி வந்தார்… வரவேற்புரை முடிந்தது..!
முதல் பாடல் ஆரம்பித்தேன் நான், ‘கணேச சரணம்…’ என்று. 3 மணி நேர வில்லிசை… சிவாஜி இருந்து ரசித்துவிட்டு... என்ன சொன்னார்..?!
காத்திருப்போமே…

Leave a comment
Upload