தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 7 - வேங்கடகிருஷ்ணன்

20210114201329524.jpg

20210228185001767.jpg

உடையார்

எழுத்து சித்தர் பாலகுமாரன் எழுதிய மிகச் சிறந்த வரலாற்று புதினம் தான் “உடையார்”. ஆதித்த கரிகாலனையும், அருண் மொழி வர்மனையும் நமக்கு “பொன்னியின் செல்வன்” மூலமாக அமரர் “கல்கி’ அறிமுகப்படுத்தி சோழ சாம்ராஜ்யம் என்னும் கோவிலை காட்டினார் என்றால், அதன் உச்சியில் கும்பத்தை வைத்து கும்பாபிஷேகமே நடத்திவிட்டார் பாலகுமாரன்.

சில வரலாறுகள் கல்வெட்டின் அடிப்படியில் சொல்லப்பட்டாலும், எழுத்தாளனின் சுதந்திரம் எப்போதுமே ஒரு வீச்சு அதிகமாகவே சொல்லும். இப்படித்தான் தஞ்சை கோயில் கட்டப்பட்டிருக்கும் என்ற யூகிப்பை பெரிய அளவில் கற்பனை கலந்து சொல்லியிருக்கும் விதம் கீழே வைக்காமல் படிக்கத் தோன்றுகிறது. இது வெளிவந்த உடனே வாங்கி கிட்டத்தட்ட ஒரு பகல், ஒரு இரவு மறுநாள் நன்பகல் வரை தொடர்ந்து (சாப்பிட, மற்ற வேலைகள் தவிர) கிட்டத்தட்ட 24 மணிநேரத்தில் நானும் என் மனைவியும் படித்து முடித்தோம். ராஜ ராஜ சோழன் இறக்கும் இடத்தில், நம்மையும் அறியாமல் கண்கலங்குகிறது, அது தான் கதாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

இந்த புத்தகம் பற்றி இணையத்தில் தேடியபோது, சில விமரிசனங்களை படிக்க நேர்ந்தது. அதில் சிலர், இது பொன்னியின் செல்வனின் அருகில் கூட வரமுடியாது என்றெல்லாம் எழுதியிருந்தனர். நிச்சயமாய் அப்படி சொல்வது பெரும் தவறு. கல்கியின் காலம் வேறு, பாலாவின் காலம் வேறு. இருவரும் சோழர்களின் வரலாற்றை கையில் எடுத்துக்கொண்டு, தங்கள் கற்பனையை கலந்து இதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் இருவரின் உழைப்பையும் நாம் நிச்சயம் கணக்கில் கொள்ளவேண்டிய மகத்தான ஒன்று. இருவரும் அந்தக் கதை நடக்கும் அத்தனை இடங்களையும் சென்று நேரில் பார்த்து வந்திருக்கிறார்கள்.

பாலா, பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை இருக்கும் இடத்தை நண்பர்கள் உதவியோடு சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து கும்பிட்டிருக்கிறார். அந்த அனுபவமும் தனது எழுத்துக்கு கை கொடுத்து உள்ளது என்று கூறி இருக்கிறார். ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் இடையில் உள்ள நட்பை, மரியாதையை, பாசத்தினை பக்கம் பக்கமாய் வெளிப்படுத்தும் போது, நம் பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போல இருப்பது இதன் தனி சிறப்பு. தன் சிற்றன்னைக்கு மிகப்பெரிய, மரியாதையையும், பாசத்தையும் ராஜேந்திரன் ஏன் கொடுத்தான் என்பதை பள்ளிப்படை கல்வெட்டிலிருந்து பின்னோக்கி யோசித்து, ராஜராஜனை தக்க சமயத்தில் பேராபத்திலிருந்து தியாகம் செய்து காப்பாற்றி தன்னையே இழந்த அந்த மாதரசியை கௌரவிக்கவே நடந்தது என்று முடிக்கும் அந்த தனித்துவம் பாலாவுக்கே உரியது.

உங்கள் வீட்டில் இப்புத்தகம் இருப்பது நல்லது. உங்கள் அடுத்த தலைமுறைக்கு சோழ பேரரசின் கலை கலாச்சார வளர்ச்சியை அவர்களின் ஆட்சித்திறனை அறிமுகப்படுத்த “பொன்னியின் செல்வனையும்”, “உடையாரையும்” படிக்கவையுங்கள். தமிழ் வளர்க்க நம்மால் ஆன அணில் முயற்சி.

நேசிப்போம்.....