தொடர்கள்
தேர்தல் ஸ்பெஷல்
சீமான்... - தவிர்க்க முடியாத ஒரு சக்தி... - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

20210403094132974.jpeg

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனக்கு சரியென்று படுவதை பட்டென்று சொல்லி விடுகிறார். இவர் தப்பாக நினைப்பார், அவர் வருத்தப்படுவார் என்றெல்லாம் யோசிப்பதில்லை. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்ததும்.... முதல் நாளே, அதைக் கடுமையாக எதிர்த்தார் சீமான். தமிழ்நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் நடிப்பதை மட்டும் கவனியுங்கள் என்றார்.

பாராளுமன்றம், சட்டமன்றம் என்று எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்திய ஒரே கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி தான். திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள்... பெண்களுக்கு சம உரிமை என்று வாய்கிழிய பேசும். ஆனால், அதை பெரும்பாலும் செயல்படுத்தாது. 50% தொகுதியை பெண்களுக்கு என்று சொல்லி 117 தொகுதிகளில், ஆண்களுக்கு சமமாக பெண்களை போட்டியிட வைத்தார் சீமான். இந்த துணிச்சல் மற்ற அரசியல் கட்சிகளுக்கு வருமா என்பது தெரியவில்லை.

இன்றைக்கும் பிரபாகரனுக்கு ஆதரவு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் சீமான் தான். திராவிட அரசியல் வேண்டாம், தமிழ் தேசிய அரசியல் தான் சரி என்பது சீமானின் வாதம்.

பேசிப் பேசித் தான் திமுக வளர்ந்தது, சீமானும் நன்றாக பேசுகிறார். அவர் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது. தமிழகம் ஊழலில் இன்று மூழ்கி கிடப்பதற்கு, காரணம்... திமுக தான் என்பது அவர் குற்றச்சாட்டு.

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புக்கு பிறகு சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் 50% பெண்களுக்கு என்று நாம் தொகுதிகளை ஒதுக்கி, ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபித்து இருக்கிறோம். பெண் சபாநாயகர் நியமிக்க வேண்டும் என்பது என் கனவு, அதை நிஜமாக்க வேண்டும். பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களை மற்ற கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு என்றெல்லாம் குறிப்பிட்டு... கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வரும் கருத்து கணிப்புகளை, நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் தான், ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுவது தான் இந்த கருத்து கணிப்புகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் அதிமுக - திமுக தவிர... மூன்றாம் இடம் யாருக்கு என்று பேச்சு எழுந்துள்ளது. இந்த மூன்றாவது இடம், மூட்டுக்களின் அடிப்படியில் மட்டுமில்லாது, எதிர் காலத்தில்... தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கும் என்ற ஒரு கேள்விக்கு சீமான் தான் என்ற விடை கிடைத்துவிட்டது. கமல், கூட்டணி அரசியலில் நம்பிக்கை உள்ளவராக மாறிவிட்டார். தினகரன், அதிமுகவை கைப்பற்ற அல்லது மீண்டும் தன்னை சேர்த்துக்கொள்ள தன் செல்வாக்கை காட்ட, கட்சி தேர்தல் என்று திட்டமிட்டார். ஆனால், கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையுடன், தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் துணிச்சல் மிக்க தலைவர் சீமான். அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என்பதுதான் உண்மை. இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், கிட்டத்தட்ட எட்டு சதவீத வாக்குகளை சீமான் பெற்றிருக்கிறார்.

சீமான் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. நாம் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. காமராஜரை கூட விமர்சித்தோம். ஏன்... அவரை தோற்கடிக்கக் கூடத்தான் செய்தோம். ஆனால், சீமானுக்கு என்று ஒரு கூட்டம், குறிப்பாக இளைய தலைமுறை அவர் பின்னால் ஒளிப்பட நிற்கிறது. அவர் தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்போதுகூட ஸ்டெர்லைட் கூடாதென்று அவர் மட்டும்தான் சொல்லி வருகிறார். இந்தத் தேர்தலில் பல எளிய சமுதாயத்தினரை வேட்பாளர் ஆக்கி அழகு பார்த்தார். 2026 தேர்தலில், அவர் வெற்றியை நுகர ஆரம்பிப்பார். அது உண்மைதான்.