தேர்தல் முடிவுகள் வர துவங்கியவுடன், நீலகிரியின் மூன்று தொகுதிகளும் அஇஅதிமுக-விற்கு சாதகமாக இருந்தது...
ஊட்டி தொகுதியை பஜக - அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் போஜராஜ் கைபற்றி விட்டார் என்று நினைக்கும்படிதான் இருந்தது. முக்கியமாக கிராமப்புற வாக்குகள் அனைத்தையும் போஜராஜ் அள்ளிக்கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அஇஅதிமுக மாவட்ட செயலர் வினோத், தனக்கு ஊட்டி தொகுதி வேண்டும் என்று முதல்வரிடம் கெஞ்சியுள்ளார். முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரனுக்கு, சீட் கொடுக்கக்கூடாது என்பதில் கவனமாக செயல் பட்டார். இதற்கிடையில் பஜக ஊட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க கேட்டு கொண்டது. உடனே வேறு வழியில்லாமல், எடப்பாடியாரும் - ஓபிஎஸ்-ஸும் ஓகே சொல்ல... யார் வேட்பாளர் என்ற சிக்கல் ஏழ... கோத்தகிரியில் உள்ள தொழில் அதிபர் போஜராஜை, பஜக தலைமை ஓகே செய்தது. எப்படியாவது அவரை வெற்றி பெற செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று பஜக-வின் முக்கிய விவிஐபி-கள் ஊட்டி தொகுதிக்கு விசிட் செய்தனர். படுக இன கிராமங்களில், இந்துத்துவாவின் முக்கியத்துவத்தை முன்னணி படுத்தி பிரச்சாரம் செய்து, பாலில் சத்திய பிரமாணத்தை செய்யவைத்து வாக்கு சேகரித்தனர். அதன் விளைவு மொத்த ஊட்டி கிராமங்களின் வாக்குகள் போஜராஜுக்கு பதிவானதை வாக்கு எண்ணிக்கை நிரூபித்து வந்த நேரத்தில்.... ஊட்டி நகரின் வாக்குகள், இந்தளவுக்கு திமுக - காங்கிரஸ் வேட்பாளர் கணேஷுக்கு சாதகமாகும் என்று நினைக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பு, ஊட்டி தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்க வேண்டாம், திமுக-விற்கு கொடுங்கள் என்று நச்சரித்தனர் கழக கண்மணிகள். அதையும் மீறி தளபதி, காங்கிரஸுக்கு சீட் கொடுத்தார். இருந்தாலும் நகர செயலர் ஜார்ஜ் தலைமையில், பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வந்தனர். வெற்றி உறுதி என்ற போது, சறுக்கி விடும் என்று இருந்தது...
ஊட்டி நகர வாக்குகள் கை கொடுக்கும் என்று கூறினார் ஜார்ஜ் நம்மிடம் போனில். அதே போல கணேஷ் 61155 வாக்குகளும்... போஜராஜ் 59461 வாக்குகள் பெற்றனர். 1691 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கணேஷ் ஊட்டி தொகுதியைக் கைப்பற்றினார்.
குன்னூர் சட்டமன்ற தொகுதியிலும் முதலில் திமுக பின்னடைவை சந்தித்தது. மதியத்திற்கு மேல் அஇஅதிமுக பின்னடைவை நோக்கி சென்றது... வினோத் தன் வெற்றி உறுதி என்று இருந்த போது, ஊட்டியை போல குன்னூர் நகர வாக்குகள், திமுக வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு கை கொடுத்தது... 61820 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வினோத் 57715 வாக்குகள் பெற்று பின்னுக்கு தள்ள பட்டார்.
திமுக-வின் கோட்டை என்று அழைக்கப்படும் கூடலூர் தொகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் 57767 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் காசிலிங்கம் 55693 வாக்குகள் பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டார். 2074 வாக்குகள் வித்தியாசம் தான் என்று வறுத்த படுகிறார்கள் திமுக-வினர்.
நாம் வெற்றி பெற்ற குன்னூர் வேட்பாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம்... “நீலகிரியை பொறுத்த மட்டில் மூன்று தொகுதிகளும் திமுக-விற்கு தான் சாதகமாக இருந்தது... அஇஅதிமுக-வினர் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்துள்ளனர். அதையும் மீறி... எங்கள் தலைவரின் கடின உழைப்பால் வெற்றி பெற்றுள்ளோம். இது எங்கள் வெற்றி இல்லை, அவரின் வெற்றி. கூடலூர் தொகுதி ஒரு விபத்து... அங்கும் பணம் தான்... என்ன செய்ய... தமிழகத்தில் நல்லாட்சி உதித்துள்ளது. எல்லாம் நன்றாக நடக்கும் என்று முடித்தார்.
கூடலூர் காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் சாம் கூறும் போது... “அது என்னமோ தெரியல, கூடலூர் தலையெழுத்து.. ஆளும் கட்சி ஆட்சி செய்யும் போது, எதிர் கட்சி எம்எல்ஏ வெற்றி பெறுகிறார். கடந்த முறை அஇஅதிமுக ஆட்சி, இங்கு திமுக எம்எல்ஏ. இப்பொழுது திமுக ஆட்சி, அஇஅதிமுக எம்எல்ஏ...
எங்கத் தொகுதியில்... வன சட்டம் 17 பிரச்சனை, சரியில்லாத பஸ் நிலைய பிரச்சனை, வன விலங்குகள் பிரச்னை என்று தீராத பிரச்சனைகளை திமுக ஆட்சி முடித்து கொடுக்கவேண்டும். எங்கள் எம்எல்ஏ எதிர் கட்சியாக இருந்தாலும், தளபதி செய்வார் என்ற நம்பிக்கை உண்டு... எங்க தொகுதி மூன்று மாநில எல்லை பகுதிகளை கொண்டது. எங்களின் எதிர்பார்ப்பு நியாயம் தானே” என்று கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி கூறும் போது... இது ஒரு சறுக்கல்... எனக்கு சீட் கொடுக்காதது வருத்தம் தான். அதே சமயம், தளபதி நாமக்கல் தொகுதி பொறுப்பை கொடுத்தார். அங்கு வெற்றி கிடைத்துள்ளது. கூடலூர் பின்னடைவு பெரும் வருத்தம் தான்”....
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீலக்கரிக்கு வராதது கூட ஒரு பின்னடைவு என்று ஒரு பேச்சு உண்டு...
அமைச்சர் வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருந்தும், ஊட்டி, குன்னூர் தொகுதி ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை!......
Leave a comment
Upload