
கடந்த ஒரு வாரத்தில் சென்னை கடற்கரையோரப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இது கடல் ஆமைகள் இனப்பெருக்கக் காலமாக இருப்பதால், பாதுகாப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான ஆமைகளின் உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், கால்நடை மருத்துவர்கள் உறுதியான பிரேத பரிசோதனை (நெக்ராப்சி) மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “நாங்கள் கண்ட பெரும்பாலான ஆமைகள் மிகவும் சிதைந்துள்ளன. வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. இதனால் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால் உறுதிப்படுத்துவது பிரேத பரிசோதனையின் மூலமே சாத்தியம்,” என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

“கடல் ஆமைகள் சுமார் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒரு முறை காற்று சுவாசிக்க கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டும். அவை மேற்பரப்புக்கு வர முடியாவிட்டால், மூச்சுத்திணறி உயிரிழக்க நேரிடும்,” என்றும் அவர் கூறினார்.
சென்னை வன உயிரின காப்பாளர் மணீஷ் மீனா கூறுகையில், “கால்நடை மருத்துவர்கள் ஸ்வாப் மாதிரிகளை சேகரித்துள்ளனர். அவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் மேம்பட்ட வன உயிரின பாதுகாப்புக்கான நிறுவனம் (AIWC) ஆகியவற்றுக்கு திசு ஆய்வு (ஹிஸ்டோபத்தாலஜி) மற்றும் பிற பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்றார்.
கடந்த ஆண்டிலும், சென்னை கடற்கரையில் நூற்றுக்கணக்கான கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும், அவற்றில் பலவும் கடுமையாக சிதைந்த நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகள் கூறுகையில், இந்த உயிரிழப்புகள் சென்னை நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், கடல் நீரோட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அந்த ஆமை சடலங்கள் சென்னை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியர் கே. கதிரேசன் கூறுகையில், சமீப காலத்தில் இந்தோனேசியா அருகே கடல் நீரோட்டப் போக்குகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர் விளைவுகள் (cascading impact) வங்காள விரிகுடாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றார்.
“ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடற்கரைகளிலும் கடல் ஆமைகள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடல் நீரோட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கும். இதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கடற்கரைப் பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் கடல் ஆமைகளின் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ‘மெரைன் எலைட் ஃபோர்ஸ்’ (MEF) குழு, கரையிலிருந்து ஐந்து கடல் மைல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகளை பிடித்துள்ளது.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த கடல் ஆமை பாதுகாப்பாளர் ரவீந்திர சாஹு கூறுகையில், தனது மாநிலத்தில் சமீப ஆண்டுகளில் கடல் ஆமைகளின் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
“கஹிர்மாதா மற்றும் ரிஷிகுல்யா ஆகிய இடங்களில் உள்ள பெருமளவு இனப்பெருக்க (mass nesting) பகுதிகள் ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் தடை பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. இந்த இரு இடங்களில் தலா 20 கி.மீ நீள பகுதி நவம்பர் மாதம் முதல் மே மாத இறுதி வரை மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன,” என்று அவர் விளக்கினார்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்திய வன உயிரின நிறுவனம் (Wildlife Institute of India) சார்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறை ஒரு ‘டெலிமெட்ரி’ ஆய்வை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு, கடல் ஆமைகளின் உயிரிழப்புக்கு காரணமான துல்லியமான காரணிகளை கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment
Upload