
ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் சுராஜ், நான்கு பதின்ம வயது இளைஞர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தை கதி கலங்க வைத்துள்ளது.
திருத்தணி ரயில் நிலையம் அருகே, கத்தியால் வெட்டப்பட்ட ரத்த காயங்களுடன் கிடந்தார் சுராஜ் . தலையில் மட்டுமன்றி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் இருந்தார் . அவரை மீட்ட போலீசாரிடம் சுராஜ் தன்னை நான்கு சிறுவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டியதாவும், அதை வீடியோ எடுத்ததாகவும் கூறினார்.
அவர் சொன்ன அடையாளங்களுடன் சற்று நேரத்தில் 'இன்ஸ்டா' தளத்தில் பரவிய வீடியோவைக் கண்ட போலீசார் உடனடியாக வீடியோ வெளியிட்டவனைக் கைது செய்தனர். அவன் தந்த தகவலின் பேரில் மற்ற மூவரையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் காவலில் வைத்தனர்.
நால்வரும் 17க்கு கீழ் பட்டவர்கள். வீடியோவில் அவர்கள் தோற்றமும் , உடல்மொழியும் நம்மை பதற வைக்கிறது. "தன்னை எதுவும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சும் சுராஜின் நிலையைக் காணும் போது கண்ணீர் துளிர்க்கிறது.
முன் விரோதமோ, சண்டையோ கைகலப்போ இல்லாமல் ஒரு அப்பாவி இளைஞரை, அதுவும் தமிழகத்தில் அடைக்கலம் தேடி வந்த நபரை எவ்வித கருணையும், தாட்சண்யமும் இன்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்றால், இந்த இளைஞர்கள் எதை நோக்கிப் போகிறார்கள் என்பது புரியவில்லை. மிகுந்த பதட்டத்தை, பயத்தை, கவலையை இந்த வன்முறைச் சம்பவம் அனைவருக்குமே தந்துள்ளது.
எதனால், இது எதனால் என்று காரணங்களைக் தேடித் தேடி மனம் களைப்படைகிறது.
போதை மயக்கத்தில் இவர்கள் செய்தனர் என்றால், தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் பூஜ்ய அளவில் என்று அமைச்சர் சொன்ன புள்ளி விவரம் பொய்யாகி விட்டது.
பள்ளிகளில் , கல்லூரிகளில் போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கிறது என்பது உறுதியாகிறது.
ஆண் ,பெண் வேற்றுமை இன்றி பெரும்பாலானோர் மது, போதை பொருட்களுக்கு அடிமையானதை அறிந்துக் கொள்ள முடிகிறது .
அரசின் சட்டம் , ஒழுங்கு சார்ந்த நடவடிக்கைகள் மேல் இருக்கும் நம்பிக்கை பொய்த்து போய் விட்டது . பொது இடங்களில் தனி மனித பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்டது.
சமூக ஊடகங்களில் 'கெத்து' காட்ட நினைக்கும் வெறி மிக்க இளைஞர்களின் சுயரூபம் உரித்துக் காட்டப்பட்டு விட்டது. ரீல்ஸ் மோகம் ஆய்தங்களை ஏந்த வைத்துள்ளது.
குடும்பங்களில் குறைந்து விட்ட பெற்றோரின் கண்டிப்பும், கவனிப்பும் வெளிப்படையாக தெரிகிறது.
பிள்ளைகளின் தோற்றம், நடத்தை ,பேசும் மொழி, பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்து அவர்கள் வழி மாறும் சூழலைக் கணித்து நல்வழிப்படுத்தும் பெற்றோர் குறைந்து விட்டனர்.
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களின் கரங்கள் கட்டிப் போடப்பட்டுள்ளன.
அறிவும், அன்பும், ஒழுக்கத்தையும் கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் வன்முறை தாண்டவமாடுவதையும், சக மாணவரை, கற்பிக்கும் ஆசிரியரை வெறி கொண்டு மிரட்டும் சம்பவங்களும் அவ்வப்போது வெளி வந்துக் கொண்டு இருக்கின்றன.
இங்கு வெளி வரும் திரைப்படங்கள் எல்லாமே வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்களாகவும், முரட்டுத்தனமான கதாநாயகர்களை வழிபடும் மனநிலையை விதைப்பனவாகவும் இருக்கின்றன
இளம் இயக்குநர்கள் எழுதும் கதைகளும், வசனங்களும் காட்டும் காட்சிகளும் சமூகத்தின் எதிர்மறை பக்கங்களை மட்டும் காட்டுபவையாகவே உள்ளன .
நல்ல திரைப்படங்களுக்கு வரவேற்பு இல்லை என்ற அனுமானத்தில், கலாச்சார சீரழிவை, வன்முறையைப் போற்றும் படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள். ரத்தம் பூசிக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.
OTT தளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு என்ற பெயரில் நச்சு விதைகளை தூவி வருகின்றன.
சொல்லிக் கொண்டே போனால், இந்த சம்பவங்களுக்கு "இதுதான் காரணம்" என்று ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட இயலவில்லை.
அரசு, சமூகம், மது மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் , கல்வி நிலையங்கள், சமூக ஊடகங்கள், திரைத்துறை எல்லாமே , இம்மாதிரி சம்பவங்களுக்கு அடி உரமிட்டு, செழித்து வளர விடுகின்றன.
'சம்பவம்' 'முடிச்சு விடு'' 'வச்சு செய்' 'பொருள் ' போன்ற சொற்கள் எல்லாம் தம் உண்மையான அர்த்தங்களை இழந்து வன்முறை, பதட்டம் குறிக்கும் சொற்களாகி மாறி விட்டன. மிகப்பெரிய சமூகச் சீர்குலைவை நோக்கி நம் இளைஞர்களும், சிறுவர்களும் நகர்த்தப்படுவது கண்கூடாக தெரிகிறது
பட்டப்பகலில் பட்டாக்கத்திகளுடன் நடமாடும் துணிச்சலை போதை மயக்கம் மட்டும் தந்ததாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் மனநிலையில் வன்முறை ஊறி இருப்பதையும், பயமற்ற தன்மை இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.
திருத்தணி சம்பவம் செய்திகளில் அடிபடும் போதே திருப்பூர் கோவில் திருவிழாவில் தலைமைக் காவலரை இளைஞர் கத்தியைக் காட்டி விரட்டுவதும் , காவலர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்த செய்தியும் வெளி வந்தது. இந்த நபரும் மது போதை மயக்கத்தில் போலீசை விரட்டுவதும் நடந்துள்ளது.
ஒரு சராசரி மனநிலையை உடைய எவரும், சமூக உணர்வுள்ள யாரும் செய்ய துணியாத செயல்களை 'சிறுவர்கள்', 'போதையில் செய்கிறார்கள்' 'மனநிலை சரியில்லாதவர்கள்' என்று போர்வை போர்த்தி மூடி மறைப்பது மேலும் சீரழிவையே தரும். உள்ளுக்குள் பரவி, புரையோடிய புண்களுக்கு மேற்களிம்பு பூசுவதால் எவ்வித பயனும் இல்லை. மதுவும், போதை வஸ்துகளும் தரும் சீரழிவை எப்போது தடுக்க போகிறார்கள்?
தண்டனைகள் கடுமையாகா விட்டால் குற்றங்கள் குறையாது.
தனி மனித ஒழுங்கும் , கட்டுப்பாடும் சமூக ஒழுக்கத்தின் அடிப்படை . இந்த இலக்கை நோக்கியே அரசு முதல் ஊடகங்கள் வரை அத்தனை இயந்திரங்களும் சீரான முறையில் இயக்கப்படவேண்டும். சமூக வளர்ச்சியில் இளைஞர்கள் தம் பங்களிப்பைத் தரும் வகையில் நெறிப்படுத்த வேண்டும்.
கூர்நோக்கு இல்லங்கள், சீர்திருத்த மையங்களில் இருந்து வெளிவரும் இந்த இளம் குற்றவாளிகள் எவ்வித மனநிலையுடன் வருவார்கள். தம் அழகிய இளமைப்பருவத்தை தண்டனைகளில் தொலைத்தவர்கள் மீண்டும் இந்தச் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியுமா?
இப்படியே போனால், 'அமைதிப்பூங்கா' வாக இருக்கும் தமிழ்நாட்டின் நிலை கேலிக்குரியதாகி விடும் .
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதே அரசுக்கு ஒரே வழி .
இல்லையேல் மீட்க முடியாத பெரும் பள்ளத்தாக்கில் நமது இளைய சமுதாயம் விழுந்து கிடக்க நேரிடும் .

Leave a comment
Upload