
""எப்பா அங்க வாங்கி வெச்ச மாலை எல்லாம் எடுத்துட்டு வந்து ஓரமா அடுக்கி வைங்க, வண்டி வந்ததும் ஏத்தணும்" - வந்திருந்த சித்தாள் வேலைக்காரர்களிடம் கூறிவிட்டு ராமு, வாசலுக்கு வந்தார்.
ராமு, விநாயகத்தின் தம்பி.
நாற்பது வருடத்திற்கும் மேலாக கொத்தனாராக இருந்த விநாயகம் பாக்டீரியல் இன்பெக்ஷன்-ல் நேற்று இரவு காலமானார்.
"குமாரு, அப்பா இறந்த தகவல் பத்தி எல்லாத்துக்கும் சொல்லியாச்சு. மயான ரசீதும் வாங்கியாச்சு. இப்போவே நாம செய்ய வேண்டியதை ஆரம்பிச்சதான் நேரம் சரியா இருக்கும்" - என்று விநாயகத்தின் ஒரே மகன் குமாரிடம் தன் கை கடிகாரத்தை காட்டிவிட்டு கூறிச்சென்றார், ராமு.
"சரி சித்தப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன். நேத்துல இருந்து அவ ஒண்ணுமே சாப்பிடல . காப்பி கூட குடிக்காம கெடக்கா. இப்போ வெளில போய் சாங்கியம் பண்ணும்போது தலை சுத்திருச்சுன என்ன செய்யறது" - என்று வாசற்படியில் இருந்து எழுந்து புலம்பிக்கொண்டே, ராஜத்தை நோக்கி ஹாலுக்கு சென்றான்.
ஹாலுக்கு நடுவே குளிர் பெட்டியில் வைக்கப்பட்ட விநாயகத்தின் அருகே, தனது நீலநிற காட்டன் புடவையில் முகம் புதைத்து உட்கார்ந்திருந்தாள், ராஜம். அப்பப்போ, தனது புடவைலத்தலைப்பில் குளிர் பெட்டியின் மூடியில் படிந்துள்ள நீர் துளிகளைத் துடைத்து, துடைத்து தெளிவாக்கித் தன் ஆசை கணவரின் முகத்தை தன் மனத்தில் பதித்துக் கொண்டிருந்தாள்.
அப்பாவைக் கிடத்தி வைத்திருக்கும் காட்சியை பார்க்கப் பார்க்க குமாருக்கு அடிவயிறு கவ்விக்கொண்டு மேல் வயிறுவரை பிசைந்து எடுத்தது.
மெல்ல நடந்து சென்று தன் அம்மாவின் iதோளை இறுகப் பிடித்து தன் கண்களை உருட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டான்.
"அம்மா ... அம்மா எதையாவது குடிமா இப்பிடியே கெடக்காத. உனக்கு உடம்புக்கு ஏதாவது வரப்போகுது"
குமாரு பேசியது ஒன்றுகூட காதில் விழாதவளாக, "என்னப்பா... சொல்லுப்பா..." - என்று தன் ஒட்டிய நாக்கை பிடுங்கிக்கொண்டு கூறினாள்.
"சித்தப்பா நேரம் ஆகுதுங்கறாரு... சடங்க ஆரம்பிக்கணுமாம்" - என்று சொல்லி முடிப்பதற்குள் இருவருக்கும் உதடுகள் நடுங்கி வற்றிப்போன கண்களில் வராத கண்ணீரை கசக்கி எடுத்தனர்.
"அவர் கட்டுன வீடுப்பா... இன்னும் கொஞ்சநேரம் இருக்கட்டும்பா..."
"அதுக்கில்லமா... 5 மணிக்கு மேல மாயணத்துல ஆளுங்க இருக்க மாட்டாங்க" - என்று குமாரு சொல்லி முடிக்க, பதிலேதும் சொல்லாமல் தன் கைகளை குளிர் பெட்டியிலிருந்து எடுத்துவிட்டு அமர்ந்துகொண்டே நகர்ந்து பின்னால் இருந்த சுவற்றில் பின் தலையை இடித்துக் கொண்டு சாய்ந்து ஒதுங்கினாள்.
குமாருக்கு புரிந்தது "சித்தப்பா வாங்க. செய்ய வேண்டியதை செய்யுங்க."
ஆட்கள் உள்ளே நுழைந்து குளிர் பெட்டியை அணைத்துவிட்டு மேலேயுள்ள கண்ணாடி மூடியை திறந்து விநாயகத்தின் உடலை தூக்கி வாசலுக்குச் சென்றனர்.
சுவற்றில் தலையை சாய்த்த படி அனைத்தையும் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள், ராஜம்.
அவளின் மொத்த திருமண வாழ்வும் தன் கண்முன்னே வர, அவள் எண்ணங்கள் மழையாக வறண்ட நிலமான கண்களில் ஊற்றுபெருகி கண்ணீர் தானே கசியத் தொடங்கியது.
பதினஞ்சு வயசுல ஒன்னும் தெரியாத பிள்ளையா இந்த மனுஷன் கையைப் பிடிச்சு 38 வருஷம் ஆச்சு. கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து இப்போ வர என்ன தனியா விட்டுட்டு வேலையைத் தவிர எங்கேயுமே போனதில்லையே இப்போ எங்கய்யா போற, என்று ராஜத்தின் மனம் பலவாறாக உணர்ச்சியில் பொங்கியது.
உனக்காக ஒருத்தி நான் இருக்கேன்னு நினைக்காம கெளம்பரியே என்ன மனுஷன்யா நீ! என்று குழப்பக் கேள்விகளோடு கண்ணீர் கழுத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
"மதினி ... வாங்க. செய்ய வேண்டியதை காலகாலத்துல செய்யணும்ல... வாங்க வெளில" -என்று ராமு தன் அண்ணன் மனைவியை அழைத்துப் போக வந்தார்.
புடவைத் தலைப்பைத் தேடி எடுத்து, வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து எழுந்தாள், ராஜம்.
"அம்மா... வாம்மா... நீ அப்பா தலைமாட்டுகிட்ட உட்காரணுமாம்" - என்று குமாரு ராஜத்தை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றான்.
அப்போதுவரை குளிர் பெட்டியில் விநாயத்தை தொடக்கூட விடாமல் வைத்திருந்தனர்.
ராஜம் யாரைப்பற்றியும் கவலைப் படவில்லை, "இதோ, இங்க இருக்கிற கூட்டம் போலத்தான் கல்யாணத்துல எல்லோரும் சுத்தி இருந்தாங்க. இப்போ நீ படுத்திருக்குற, நான் உட்கார்ந்திருக்கிறேன் " - என்று எந்தத் தோள்களில் lமாலையிட்டு மணம் முடித்தாலோ, அந்தத் தோள்களில் தன் வலக்கை கொண்டு மெதுவாகப் பிடித்தாள்.
அன்பு பகிர ஆரத் தழுவிக் கொண்ட அந்த தோள்கள் uஇன்று தன் கைகளின் hஸ்பரிசத்தை உணராமல் கிடப்பதை எண்ண, எண்ண ராஜத்திற்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது.
"சரி, சம்மந்தி முறையை செய்ய வாங்க"
"பிறந்த கோடி, புகுந்த கோடி போடுங்க" - என்று எந்த இரைச்சலும் hராஜத்தின் காதுகளில் விழவில்லை.
தலையில் விழுந்த அத்தனை புடவைகளுமே அவளது பார்வையை மறைக்கவில்லை. தன் கையின் ஸ்பரிசத்தின் மூலம் தன் கடைசி நிமிடங்களை ஒரு மனைவி தன கணவனோடு வாழும் பொழுது இரும்புத்திரை கூட எதையும் தடுக்காது.
இனி எந்த ஜென்மத்தில் இவரை பார்ப்போம். தான் மட்டுமே தழுவிய தோள்களை இனி எந்தநாளும் தொட முடியாதே என்று எண்ணம் கடலலை போல அவளின் மனதில் நினைவுகள் மோதி மோதி எழுந்தது.
"எடுங்கப்பா..." - கடைசியாக கேட்ட அந்த வார்த்தை அவளை தூக்கிவாரிப்போட்டது. தன் தலையில் போட்ட சேலைகளை இடது கையில் பிடுங்கிப் போட்டுவிட்டு தன் கணவனின் கன்னத்தை இரண்டு கைகளாலும் பற்றினாள்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அத்தனையும் அந்த சேலைகளுடன் கழற்றி எழுந்தாள். கணவன் போகிறான் என்ற ஒரே எண்ணம்தான். தன் கைகள் கணவனின் கன்னங்களை பிடித்திருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர் என்ற நாணத்தை துறந்தவளாய் இருந்தாள். கணவன் போன பின்னே ஒரு பெண்ணுக்கு இந்த காதல் குணங்கள் எவ்விதம் தேவைப்படும். கணவனோடு காதலும் கரையும் தருணம் அது.
தன் கணவனின் கன்னங்களைப் பற்றி தன் வீங்கிய கண்களால் உற்று நோக்கி அவன் கன்னத்தின் அருகே தன் கன்னம் கொண்டு சென்று, அனைவரும் பார்த்தித்திருக்க, தன் கணவனின் கன்னத்தில் தந்தாள் –
"கடைசி முத்தம்".

Leave a comment
Upload