அழகு எழுத்தை விடு, ஆயுத எழுத்தை எடு

இலக்கியவாதிகளான அவனது நண்பர்கள் அவ்வப் போது சொன்னார்கள், ‘எப்போது பார்த்தாலும் அரசியல் களத்தையே விமர்சனம் செய்கிறாயே? கொஞ்சம் இலக்கியத்தின் பக்கம் வா என்றார்கள்.
சரி அவர்களும் திருப்திப்படட்டுமே என்று நினைத்து மனம் தெளிவாக இருந்த சமயங்களில் ஏலாதி, நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை போன்ற சங்க இலக்கிய நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினான். சில தமிழ்ப் பேராசிரியர்களும் நன்றாகவே எழுதப்பட்டதாகச் சொன்னார்கள். -
அவன் முன்பே அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி எழுதியிருந்த புத்தகத்தைப் படித்துப் பார்த்து, அவனை பிரிட்டிஷ் பிரதமர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். ஆனால் அதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது.
இன்னொரு நண்பர் ஜெர்மானிய தத்துவ ஞானிகள் பற்றி புத்தகம் எழுதச் சொன்னார். அவன் மேலை நாட்டு தத்துவ ஞானிகள் பற்றி கல்லூரியில் படித்திருந்ததனால் அது பற்றி தகவல்களும் இருந்தன. ஆனால் ஏனோ அதையும் எழுத முடியவில்லை. அவனுக்குப் பிடித்தமான கவிஞர் கண்ணாதாசன். பாரதியாருக்குப் பிறகு வளமான தமிழில் எழுதிய கவிஞர் அவர்.
திரைப்பட பாடல்களில் தத்துவங்கள் சொல்லப்பட்டாலும் தனி தத்துவ பாடல்களும் எழுதியிருக்கிறார். ஒரு முறை சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக நண்பர்கள் கண்ணதாசனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும் வெகு சிலரில் ஒருவர் என்று. கண்ணதாசன் தன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கேட்டுக்கொண்டார்.
அவன் ஓரிரு கவிதைகளை மொழிபெயர்த்துவிட்டு, மீதி கவிதைகளை மொழிபெயர்க்க முயன்றபோது, கண்ணதாசன் அமெரிக்காவில் காலமானார். அந்த சோகத்திலிருந்து வெகுகாலம் மீள முடியாமலிருந்த அவன், மொழிபெயர்ப்பை நிறுத்திவிட்டான், இன்னும் தொடரவில்லை.
தமிழ் பேராசிரியரான பதிப்பாளர், ச.மெய்யப்பன், அவனை அழைத்து, ‘கம்பன் ஒரு நிர்வாகி என்கிறார்களே? அதுபோல் ஷேக்ஸ்பியர் ஒரு நிர்வாகி என்று புத்தகம் எழுதித் தாருங்கள்’. ஷேக்ஸ்பியர் சொல்லும் நிர்வாகம் என்ற தலைப்பில் அவன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்த வசனங்களையும், பாத்திரப் படைப்பையும் கொண்டு ஒரு நிர்வாகவியல் புத்தகம் எழுதினான்.
முதல் பிரதியுடன் பதிப்பாளர் ராயல்டியையும் கொடுத்துவிட்டார். அதைவிட மகிழ்ச்சியான விஷயம் அவனது பெருமதிப்பிற்குரிய ஆங்கில பேராசிரியர் ஆர்.ராஜரத்தினம், ‘நீ வெவ்வேறு துறைகளில் எத்தனையோ புத்தகங்களை எழுதியிருக்கிறாய். எனக்கும் கொடுத்திருக்கிறாய்.
ஆனால் நான் ரொம்பவும் சந்தோஷப்பட்ட புத்தகம் ஷேக்ஸ்பியர் பற்றியதுதான் என்றார். ஆனாலும் இந்த இலக்கிய ஆர்வம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அரசியல் போக்குகள் அவன் மனதை நெருடின,
‘வில்லினை எடடா, வில்லினை எடடா,
அந்த ‘புல்லியர் கூட்டத்தை பூழ்தி செய்திடடா’
என்ற பாரதியின் வாசகம் அவனை அரசியல் விமர்சன பக்கமே திருப்பியது. இப்படியெல்லாம் அரசியல் கட்டுரை எழுதி என்ன பயன்? இலக்கிய படைப்புகள் காலத்தால் நிற்கும். அதையே எழுது என்று சொன்னார்கள் நண்பர்கள். அவர்களுடைய திருப்திக்காக திருக்குறளை ரத்தினச் சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான். ஆனாலும் அரசியல் கட்டுரைகள் எழுதுவதைத் தொடர்ந்தான்.
அப்போது அதே நண்பர்கள் சொன்னார்கள், ‘நீ வாரா வாரம் எழுதும் அரசியல் கட்டுரைகளை மக்கள் மறந்துவிடுவார்கள். -
இலக்கியம் காலத்தால் நிற்கும் என்றார்கள். அவன் சொன்னான், ‘நான் இன்றைய வாசகர்களுக்காக எழுதுகிறேன், நாளைய வாசகர்களுக்காகவும் எழுதுகிறேன். தம் காலத்துக்கு முந்திய காலத்தில் அரசியல் எப்படி இருந்தது என்பதை வருங்கால தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள என் கட்டுரைகள் ஆவணங்களாக அமையும்’’ என்றான்.
அவன் 2008ஆம் வருடம், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் மும்பை தாஜ்மஹால் ஓட்டலில் தங்கியிருந்தான்.
ஓட்டல் பழங்கால அமைப்பில் இருந்தது. இன்று எப்படியோ. அன்று ஒரு கைக்குட்டையை சலவை செய்துதர கட்டணம் ரூ.75. அவன் டெல்லியில் மௌர்யா ஷெராட்டனிலும் தங்கியிருக்கிறான்.
அங்குகூட கைக்குட்டை சலவை செய்ய அப்போது ரூ.75 கட்டணம் இல்லை. அந்த அளவுக்கு மும்பை தாஜ் மஹால் ஓட்டல் அதிகௌரவ அந்தஸ்து கொண்ட ஓட்டல். அதில் எப்படியோ தீவிரவாதிகள் புகுந்து சிலரைக் கொன்று, ஓட்டலையே நாசப்படுத்தினார்கள்.
அந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி இரவு முதல் 28ஆம் தேதி காலை வரை 60 மணிநேரம் மும்பையில் மட்டுமல்ல, நாடே திகிலில் உறைந்தது. அதே நேரம் பயங்கரவாதிகளிடம் அகப்பட்டிருந்த பிணைக் கைதிகள் என்ன பாடுபட்டிருப்பார்களோ?
அந்த நேரத்தில் இரண்டு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நிகழ்வுகளை தொலைக்காட்சியில் வழங்கிக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ் ஜெயின் என்ற மும்பை பத்திரிகையாளர். இந்திய பத்திரிகை உலகின் கனமான, சோகமான திகில் காலகட்டம் அது.
அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம், தொலைக் காட்சியில் பார்த்தது, பத்திரிகையில் படித்தது எல்லாம் அவன் மனதை உலுக்கியது. பத்திரிகைகளில் அன்றாடம் படிக்கும் செய்திகளை மக்கள் வெகுவிரைவில் மறந்துவிடுவார்கள்.
எனவே தொலைகாட்சியில் பார்த்த நிகழ்வுகளையும், பத்திரிகை செய்திகளையும் தொகுத்து மும்பாய் 26/11 என்ற புத்தகத்தை எழுதினான். அதை அவனது உதவியாளர் விரைவில் டைப் செட் செய்து தந்தார். அச்சகத்தாரும் இரண்டே நாட்களில் புத்தகத்தை தயாரித்துக் கொடுத்தார்கள்.
பயங்கர நிகழ்வு நடந்த தினம் நவம்பர் 26. புத்தகம் வெளிவந்த தினம் டிசம்பர் 15.
19 நாட்களில் எழுதி அச்சாகி வெளிவந்த புத்தகம் அது. அவனது புத்தகம்தான் தேசத்திலேயே 26/11 பயங்கரவாதம் பற்றி வெளிவந்த முதல் புத்தகம். அது தேச சோகத்தின் வேக வெளிப்பாடு. சில வாரங்கள் கழித்து ஒரு தமிழ்ப் புத்தகம் வெளிவந்தது.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு ஆங்கிலப் புத்தகம் வெளிவந்தது. அவனால் மட்டும் சம்பவம் நடந்த மூன்று வாரத்திற்குள் 160 பக்க புத்தகத்தை எப்படி முந்திக் கொண்டு எழுத முடிந்தது?-
ஒருமுறை ஹிண்டுவில் அவன் துணை ஆசிரியராக இருந்தபோது சக ஊழியர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டான். அப்போது அவன் மனைவியை சந்தித்த சில பெண் சப் எடிட்டர்கள் ‘சார் எங்கள் தகப்பனார் மாதிரி, பிரியமும் உண்டு, கண்டிப்பும் உண்டு. ஆனால் ஒன்றே ஒன்று, அவர் தன் வேகத்திற்கு நாங்களும் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அவர் வேகத்திற்கு நாங்கள் ஈடு கொடுக்க முடிவதில்லை’ நாங்கள் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத வேகம்’ என்று சொன்னார்கள். உண்மை தான். இன்றும் கூட அவனது சக ஊழியர்கள் அதைத் தான் சொல்கிறார்கள்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் செய்தியாளர்களுக்கு எழுத்தும் மனப்பழக்கம் என்று சொல்லலாம். பத்திரிகையாளராக இருந்த ஒருவரிடம் அவரது உயிருள்ளவரை தொடரக்கூடிய பழக்கம் இந்த வேகம் தான்.
80 வயதில் மந்தமான கண் பார்வையுடன் அவன் கட்டுரைகளை டிக்டேட் செய்கிறான்.
சார் மெதுவாகச் சொல்லுங்கள் என்று தான் அவனது உதவியாளர்கள் சொல்கிறார்கள். இன்னொரு முக்கிய பழக்கம். எத்தனை வார்த்தைகளில் கட்டுரை தேவையென்றால் மிகச்சரியாக அத்தனை வார்த்தைகளில் கட்டுரைகளை டிக்டேட் செய்கிறான். நான்கு சென்டிமீட்டருக்கு ஒரு மேட்டர் எழுதி கொடுக்க முடியுமா? என்று கேட்டால் அவன் மிகச்சரியாக எழுதிக் கொடுப்பான். எல்லாம் பத்திரிகைத் துறையில் அவன் பெற்ற பயிற்சி.

Leave a comment
Upload