தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 15-தி.குலசேகர்

20260002212544862.jpeg

அடுத்ததாக இரண்டு கண்களில் இன்னொரு கண்ணாக இருக்கிற இலக்கியம் பற்றிப் பார்க்கலாம்.

கல்லூரிப் படிப்பு முடிக்கிற வரை பாடப்புத்தகங்கள் நீங்கலாக, ஒரு இலக்கிய புத்தகம் கூட படித்ததில்லை. அதே நபர், இன்று 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்றால் நம்ப ஆச்சர்யமாக தானே இருக்கும். இயற்கை அப்படித்தான், சில விசயங்களை எதிர்பார்க்காத தருணங்களில் அறிமுகப்படுத்தி, வாழ்நாள் முழுவதும் அதனோடு பயணிக்க வைத்து விடும்.
20 வயதிற்குப் பிறகு தான் இலக்கிய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். தினம் இரண்டு புத்தகம் என அடுத்த ஏழு வருடங்களில் ஐந்தாயிரம் புத்தகங்கள் படித்து விட்டிருந்தேன். அத்தனையும் தேர்ந்தெடுத்து படித்த ஆகச்சிறந்த புத்தகங்கள்.
என் கனவு பி.ஹெச்.டி பண்ணி விட்டு ஆசிரியராக ஆக வேண்டும் என்பது தான். வங்கியிலும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையிலும் ஒரே நேரத்தில் வேலை கிடைத்ததால், ஸ்பிக் தான் அதிக சம்பளம் தருகிறார்கள் என்று சொல்லி அவர்களாகவே ஒரு தீர்மானத்திற்கு வந்து அனுப்பி வைத்தார்கள்.
இதற்கிடையே எனக்கு அப்போதெல்லாம் விலங்கியல் பாடம் தான் பிடித்த பாடமாக இருந்தது. ஆனால், அண்ணன் ரசாயனம் படி என்று விட்டார். தட்டமுடியவில்லை. அந்தக்காலம் அப்படி. வீட்டில் அதிகாரத்தை கையில் ஏந்தியிருப்பவர்கள் அல்லது ஒத்தாசையாக இருக்கிற உறவினர்களே நமதான முக்கியமான தீர்மானங்களை எடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நல்லது செய்வதாக நினைத்துத்தான் அவற்றை செய்கிறார்கள். ஆனால் அவர்களின் பார்வையில் எது நல்லது என நினைக்கிறார்களோ அதை மற்றவர்களுக்கும் அமல்படுத்துகிற நினைக்கிறார்கள்.
அதனால் பல சமயங்களில் நல்லது செய்வதாக நினைத்து அணுகூல சத்ருக்களாக மாறிவிடுகிறார்கள்.
அப்படி மூத்தோரின் விருப்பத்திற்காக விருப்பமில்லாமல் சேர்ந்தாலும், எதையுமே கட்டாயப்படுத்தாத அப்பாவின் அன்பிற்காக, ரசாயன பாடத்தின் மீது வலிந்து விருப்பத்தை வரவழைத்துக்கொண்டு படித்தேன்.
ஒரு முறை வாரத்தேர்வு எழுத கைக்கடிகாரம் இல்லாததால் தெரிந்த கேள்விக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்குள் பதில் எழுத முடியாமல் போய்விட்டது. உடனே அம்மாவிற்கு ஒரு தபால் அட்டையில் பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு கடிகாரம் வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.
மறுநாள் இரவு அப்பா கல்லூரி கதவு ஏழு மணிக்கெல்லாம் மூடப்பட்டு விட்டதால் கேட் அருகே நின்றுகொண்டிருக்கிற தகவல் வர, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மூச்சிறைக்க ஓடினேன். அவர் வேட்டியை மடித்துக்கட்டிவிட்டு, பட்டாப்பட்டி அன்டர்வியர் பையிலிருந்து ஆற்றுமணலோடு ஒரு பழைய ஃபேவர் லூபா வாட்ச் எடுத்து நீட்டுகிறார். ஆற்றில் உள்ள ஓடுகாலில் போய் குளிக்கிறபோது வந்து தானாக ஒட்டிக்கொண்ட மணல் அது. அந்த கணம் தான், எதுவுமே கேட்காத அப்பாவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவாவது நன்றாக படிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
முதல் செமஸ்டரில் 11 வது மதிப்பெண். இரண்டாவது செமஸ்டரில் ஒட்டுமொத்தமாக முதல்மதிப்பெண் என அந்த எண்ணம் தான் அப்படியொரு மேஜிக் நிகழ்த்தியது. எல்லாமே மனதின் உந்துதலில் தான் இருக்கிறது என்பதை உணர வைத்த தருணம் அது. பிடித்து, கவனக்குவிப்போடு செய்கிற எந்த விசயமும் நமக்கான அர்த்தங்களாக மாறிவிடுகின்றன.
இப்போது, இலக்கியத்தின் மீது காதல் வந்த வரலாற்றிற்கு வரலாம். ஸ்பிக் நிறுவனம் சகலவசதிகளோடே வரவேற்றது.

ஆனாலும், துவக்கத்தில் அந்த சூழல் ஒப்பவில்லை. அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயனம் படித்துக்கொண்டிருந்தவனை பாதியில் பிய்த்து எடுத்துக்கொண்டு வந்து முன்பின் தெரியாத இடத்தில் விட்டுவிட்ட உணர்வு. மூச்சுமுட்டிக்கொண்டு வருவது போல சொல்லத்தெரியாதவொரு மனப்பிசைவு. அது ஒரு உயிர்ப்போராட்டம். அந்த நேரத்தில் தான் தானாக தேடி வந்து கைகொடுத்தது புத்தகங்கள்.
ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது நியதி. தற்செயலாகவே அதனோடான பந்தம் தொடங்கியது. உயிர் காப்பான் தோழன் என்பது உண்மை. அந்த தோழன் புத்தகங்கள் என்பது அந்த நூலை படிக்கிறபோதே உணர்ந்து கொண்டுவிட்டேன்.
கு.அழகிரிசாமி எழுதிய ‘இரு சகோதரர்கள்’ என்கிற சிறுகதை தொகுப்பு தான் முதன்முதலில் படித்த புத்தகம். ஏராளமான கனவுகளோடு அண்ணன், தம்பி, அண்ணனின் மனைவி கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருகிறார்கள்.

நகரத்தில் இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் கணக்குப்பிள்ளை வேலை. அண்ணன் ரொம்பவே நேர்மையானவர். அதனால் சொற்ப வருமானத்தை தந்து கொண்டிருந்த அந்த வேலையும் அவரிடமிருந்து பறித்துக்கொள்ளப்படுகிறது. இப்போது அந்தக் குடும்பம் தம்பியின் ஒற்றை வருமானத்தை நம்பியே காலந்தள்ள வேண்டிய நெருக்கடி நிலமை.

தம்பி விரும்பியே தான் அந்த குடும்பத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறான். அதற்காக அவன் கனவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக உதறியெறிந்து விடுகிறான். வயதும் நாற்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
பட்டணத்திற்கு போனால் எல்லாமே கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த அண்ணிக்கும், அவளின் கனவுகள் எதுவுமே நிறைவேறாததில், உணர்வுகளற்ற ஜடமாய் உறைந்து தான் போனாள்.
ஒரு நாள் வேலை முடித்து வந்த கொழுந்தனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தபடி முன்னால் ஏதோ ஒரு கனவின் பிரமையில் அவளின் முந்தானை சரிந்தது கூட தெரியாமல் அமர்ந்திருக்கிறாள். அந்த பலகீனமா கணத்தில் அவனுக்குள் பற்றிக்கொண்டு விடுகிறது.

சட்டென அண்ணியை அந்த கணத்தின் எழுச்சியில் தழுவிக்கொள்கிறான். அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தோன்றவில்லை. சம்மதமோ, எதிர்ப்போ காட்டாமல் சமைந்து போய் இருக்கிறாள். அடுத்த சில நிமிடங்களில் அண்ணன் அங்கே வந்துவிட, தம்பி சட்டென சுயத்திற்கு திரும்புகிறான்.
வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் அண்ணன் முன்னே போய் நின்றபடி, மன்னிப்பு கேட்கிறான். அப்போது அண்ணன் சொல்வது தான் அந்த படைப்பை யுனிவர்சலிசம் நோக்கி நகர்த்துகிறது. ‘தம்பி, மன்னிப்பு கேட்க வேண்டியது நாந்தான்டா. அண்ணன் உனக்கு ரொம்ப பெரிய துரோகத்தை செய்துட்டன்டா.. இனியும் நீ இங்க எங்களுக்காக கெடந்து கஷ்டப்பட வேணாம். எங்கயாவது போயி தனியா வீடு பாத்து, ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நல்லாரு’ என்று சொல்கிறான்.

எந்த விசயத்தையும் ஆபாசமாக பார்க்கத்தெரியாத அந்த மனதின் பேரன்பும், பெருங்கருணையும் படித்துக்கொண்டிருந்த என்னை அந்த கணமே ஆட்கொண்டு விடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் தினமும் குறைந்தது இரண்டு புத்தகங்கள் படித்திருப்பேன்.

அப்படியொரு பிணைப்பு. வெறிபிடித்தவனாய் வாசித்தேன். எனக்குள் சொல்லப்படாமல் தேங்கியிருந்த அபிலாசைகளுக்கான வடிகாலாய் தக்க சமயத்தில் வந்து புத்தகங்கள் கைகொடுத்தன.

விரட்டிவிரட்டி படித்தேன். உண்மையான படிப்பு. வாழ்க்கையை செதுக்குவதற்கான படிப்பு அது. துவக்கமே ரஷ்ய இலக்கியங்களில் தான் ஆரம்பித்தேன். அந்த சூழல் நல்ல புத்தகங்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்தி விடுகிற அற்புதமானவொரு சூழல். அதனால் நல்ல நல்ல புத்தகங்களாய் தேர்ந்தெடுத்து தினமும் இரண்டு புத்தகங்கள் என வாசித்துக்கொண்டே இருந்தேன். கொஞ்சம் ஆங்கிலம்.

நிறைய தமிழ் மற்றும் உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு என்று தெரிந்தெடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
இருபத்தைந்து வயதில் எழுத துவங்கினேன். இதுவும் தற்செயல் தான். முதல் கதை நன்னெஞ்சே ஆனந்தவிகடனில் வெளிவந்தது. அதன் பிறகு பம்பரமாய் சுழல ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்வியக்கம் ஆனது.

வலிகள், ரணங்கள், ஏமாற்றங்கள், கொண்டாட்டங்கள், குதூகலங்கள், நட்புகள், காதல்கள் என என்னைச் சிலிர்க்க வைத்த அத்தனையையும் எழுத ஆரம்பித்தேன். காதலும், பாலின சமத்தவத்தின் பாதைகளும் என்னுடைய தேடலின் கண்டடைதலில், புதியபுதிய தரிசனங்களை விதைத்தக்கொண்டே இருந்தன.
தமிழில் வெளிவருகிற அனைத்து பிரபல பத்திரிகைகள் மற்றும் பெரும்பாலான சிறுபத்திரிகைகளில் எழுதியாகி விட்டது.
என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பு நூலான ஒரு சிநேகிதிக்காக நூலை அன்னம் பதிப்பகம் மூலம் கவிஞர் மீரா வெளியிட்ட கதையே சுவாரஸ்யமானது. அப்போதே என் சீனியர் நண்பர் நரேந்திரன் குரூப் ஃபண்டிங் மூலம் ஐநூறு பேரிடம் முன்பதிவு திட்டத்தின் மூலம் தலைக்கு பத்து ரூபாய் என வசூலித்துவிட்டார்.

அப்போது புத்தகத்தின் விலை பதினைந்து ரூபாய். அனைவருக்கும் அப்படித்தான் விழா எடுத்து புத்தகங்களை வழங்கினோம். ஆனால் அது புத்தகமாக வருகிற இடைவெளியில் ரஸமான பல சம்பவங்கள் அரங்கேறின.

மீரா சார் வேலைப்பளு காரணமாக நூலை கொண்டு வருவதில் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார். உடனே பரபரப்பான நான் குறித்த நேரத்தில் நூலை தயாரிக்க முடியாதபட்சம் ஃபைலை திருப்பி தந்துவிடும்படியும், வேறு பதிப்பகத்தில் வெளியிட்டுக்கொள்வதாகவும் ஒரு கடிதம் எழுதிவிட்டேன்.

அவரும் மதுரை அன்னம் அலுவலகத்தில் உள்ள லோகுவிற்கு ஃபைலை அனுப்பிவிட்டார். இதற்கிடையே கூடுதல் இணைப்பாக கானல் நீர் என்கிற கதையை எழுதி இதையும் சேர்த்துக்கொள்ளும்படி இந்தச்சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு அனுப்பிவைத்து இருந்தேன்.

இந்த நேரம் பார்த்து மீரா சாருக்கு அம்மை போட்டு படுத்துவிட, மூட்டாவில் செக்ரட்டரியாக இருந்த அவர் அதனால் எந்தவேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடக்கப்பட்டுவிட, அப்போது பார்த்து நான் சில நாட்கள் முன்பு அனுப்பி வைத்திருந்த கானல் நீர் கதை அவர் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதை படித்ததும் அவர் சிலிர்ப்பாகிவிட்டார்.

அந்தக்கதை அப்படி பிடித்துப்போக, மதுரையிலுள்ள லோகுவிற்கு உடனே ஃபோன் போட்டு குலசேகர் ஃபைலை கேட்டு வந்தால் இங்கே அனுப்பி வையுங்கள். ஃபைலை உடனே சிவகங்ககைக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அடுத்த வாரம் ஃபைலை வாங்க மதுரை வந்து மீரா சாரின் இருப்பிடமான சிவகங்கைக்கு திருப்பிவிடப்பட்டேன். அங்கே போனால் புத்தகம் அதற்குள் தயாராகி விருந்தோடு என்னை வரவேற்க காத்திருக்கிறது.

அன்னம் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை புத்தகங்களையும் சாந்திநிகேதனில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய முத்தையா அவர்கள் வங்கமொழியில் மொழிபெயர்த்து பிரசுரித்ததெல்லாம் அதற்கு பிறகு நடந்த கதை.
ஒரு சிநேகிதிக்காக நூலை ஸ்பிக்நகர் கலாச்சார மையம் சார்பாக ஸ்பிக்நகர் ஜிம்கானா புல்வெளி திறந்தவெளி அரங்கில் வெளியிட்டபோது தான் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பரும் எழுத்தாளருமான தனுஷ்கோடி ராமசாமி அறிமுகமானார்.

சுப.புன்னைவனராசன் மூலம் அவர் தான் அந்த விழாவிற்கு தலைமையேற்று அந்த நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர். அவரது முதல் பேச்சிலேயே விழுந்துவிட்டேன். அதற்கு பிறகு அவர் இருந்தவரை எங்கள் நட்பு சீராக பயணித்தது. இப்போதும் நினைவுகளில் பயணித்துக்கொண்டுமிருக்கிறது. அப்போது அந்த உரையை அவர் இப்படி துவங்கினார்.

இங்கே உள்ள மரங்கள் அழகு. செடிகள் அழகு. மலர்கள் அழகு. கட்டிடங்கள் அழகு. மனிதர்கள் அழகு. பெண்கள் அழகோ அழகு என்றது தான் தாமதம், ஒரு நொடி உறைந்து போன பெண்கள், அடுத்த நொடி பிரவசமாகி அரங்கம் அதிர கரவொலி எழுப்பினார்கள்.

அதற்கு பிறகு விழா நிறைவடையும் வரை கொண்டாட்ட்டங்களாலும், கரவொலிகளாலும் நிரம்பி ததும்பிக்கொண்டேதான் இருந்தது.