நீலகிரி தோடர் இன பழங்குடியினர் வருடத்தின் முதல் அல்லது கடைசி ஞாயிற்று கிழமை அன்று புத்தாண்டை வரவேற்கும் விதமாக மொற்வர்த் என்ற குல தெய்வ வழிபாட்டு விழாவை சிறப்பிக்கின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை தோடர்களின் தலைமை மந்தான முத்தநாடு மந்தில் அனைத்து தோடர் இன ஆண்கள் ஒன்றிணைந்து கூம்பு வடிவில் உள்ள கோயிலில் வருடாந்திர காணிக்கை கட்டி நடனம் ஆடி வழிபட்டு சிறப்பித்தனர் .அங்கே நாம் நேரில் சென்றோம் .
நீலகிரியில் உள்ள 67 மந்தின் ஆண்கள் இந்த ஆண்டு துவக்க விழாவில் ஆஜர் !.

தங்களின் பாரம்பரிய மேலாடையை போர்த்தி கொண்டு தடியுடன் பழம்பெரும் கூம்பு வடிவில் ஆன கோயில் முற்றத்தில் குழுமியிருந்தனர் .
இந்த விழாவில் தோடர் இன பெண்கள் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

மூத்த ஆண் முதல் சிறிய ஆண் வரை கோயிலின் முற்றத்தில் காணிக்கை கட்டி வணங்கி வழிபட்டனர் .
பின்னர் அனைவரும் ஓன்று சேர்ந்து கோயிலின் சிறிய வாயிலின் முன் குழு நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர் .
பின்னர் அங்குள்ள மற்ற கோயிலின் முன்பும் நடனம் அரங்கேறியது .
அதற்கு பின் மந்தின் ( கிராமத்தின் ) மத்தியில் உள்ள .

பழம்பெரும் கோயிலுக்கு அனைவரும் சென்று காணிக்கையை கோயில் முற்றத்தில் வைத்து வணங்கி குழு நடனம் ஆடி வழிபட்டனர் .
பின்னர் இந்த புது வருடத்தில் மற்ற மந்துகளில் நடக்க இருக்கும் கோயில் திருவிழாக்களை பற்றி ஒரு பஞ்சாயத்து கூட்டம் கூட்டி தங்களின் தோடர் மொழியில் கூவி அறிவித்தனர்

பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொரி தேநீர் வழங்கப்பட்டது .
தோடர் இன தலைவர் மாந்தேஷ் குட்டன் கூறும்போது , " எங்க தலைமை மந்தான ( கிராமமான ) முத்தநாடு மந்தில் இருந்து தான் கோயில் விழாக்கள் ஆரம்பமாகும் .
மொற்வர்த் திருவிழா எங்க தலைமை கோயிலில் முதல் ஒரு ரூபாய் காணிக்கை கட்டி வழிபட்டு துவங்கும் விழா எல்லா மந்தில் உள்ள கோயில்களிலும் விழாக்கள் தொடரும் .
எங்கள் இனத்தில் முக்கிய பங்கு வகிப்பது எருமைகள் தான் .
அதன் பால் , நெய் என்று எல்லாமே புனிதமானது .அதனால் கோயிலில் எருமை பால் மற்றும் நெய் வைத்து தான் பூசாரி பூஜை செய்வார் .
பூக்களோ , கற்பூரமோ , தீபமோ எங்கள் வழிபாட்டில் இல்லை .
எங்களின் வெள்ளை மனது போல பாலை தான் கடவுளுக்கு படைக்கிறோம் .
புது வருடத்தை அது தான் புதிய காலத்தை வரவேற்கும் விதமாக இந்த வருடம் கோயிலின் பழைய கோர புல் அகற்றப்பட்டு புதிய புல் பொருத்தப்படும் .
இந்த புல் கோரகுந்தா , அப்பர் பவானி பகுதியில் இருந்து எடுத்து வருகிறோம் .
தற்போது கோர புல் சரியாக கிடைப்பதில்லை கற்பூரம் , பைன் , சீகை மரங்கள் அதிகம் வளர்ப்பதால் கோர புல் வளர்வதில்லை இது வருத்தமான ஒன்று .
இந்த வருடம் எப்படியும் புதிய புல் பொருத்தப்படும் ." என்கிறார் .

கோயில் விழாவில் பெண்கள் கலந்து கொள்வதில்லை அதே வேளையில் வீடுகளில் விளக்கேற்றி இயற்கை தெய்வத்தை வழிபடுகிறார்கள் .
முத்தநாடு மந்தில் இருந்து திருமணமாகி சென்ற பெண்கள் இந்த விழாவிற்கு என்று தங்களின் தாய் வீட்டிட்கு வந்துள்ளனர் .
அஞ்சலி , இந்துசின் மற்றும் விகாசினி நம்மிடம் கூறும்போது ,
"மொற்வர்த் விழாவில் பெண்கள் கலந்து கொள்வதில்லை .எங்க மந்துகளில் எந்த ஆண்களும் இன்று இருக்கமாட்டார்கள் எல்லோரும் இந்த தாய் தலைமை மந்தில் இருக்கிறார்கள் .இயற்கை இறைவனை வணங்கி இந்த புது வருடத்தை துவங்குகிறோம் "நார்த்தி குட்டன் கூறுகிறார் , "எங்க தோடர் இனத்தில் வருடத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அல்லது ஜனவரி 1 ஆம் தேதி எங்க தலைமை மந்தான முத்தநாடு மந்தில் மொற்வர்த் விழா இயற்கையாக இறைவனை வணங்கும் விழா .
பெண்கள் எங்களுக்கு புனிதமானவர்கள் .
கோயில் விழாவில் அவர்களுக்கு அனுமதி இல்லை . வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு அவர்களின் தேவைகளை விளக்கிடம் கூறும்போது விளக்கு இறைவனிடம் சென்று இவர்களின் தேவைகளை இறைவனிடம் கூறும் என்பது நம்பிக்கை .
கோயிலினுள் நாங்களும் சரி பெண்களும் உள்ளே செல்ல அனுமதியில்லை .
பூசாரி மட்டும் தான் செல்வார் .இயற்கைக்கு நன்றி கூறுவோம் .
இன்று கூட கால நிலை அழகாக இருக்கிறது என்கிறார் .
உத்தரப்பிரதேஷ் பனாரஸ் பல்கலைக்கழக 30 மொழி ஆராய்ச்சி மாணவர்கள் கோவை கொங்கு நாடு கல்லுரிக்கு வந்துள்ளனர்.

சந்திர பிரகாஷ் என்ற ஆராய்ச்சி மாணவர் நம்மிடம் பேசினார் ,
" தமிழ் கற்கலாம் " என்ற ஆரய்ச்சிக்காக 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து பழங்குடியினர்களை சந்திக்கின்றனர் .

அதில் 30 பேர் இங்கு வந்து தோடர் கோயில் விழாவில் கலந்து கொண்டோம் வித்தியாசமான விழாவை பார்த்து மெய் சிலிர்த்து விட்டோம்" என்கிறார் .

இந்த விழாவை தொடர்ந்து இளவட்டங்கள் நூறு கிலோ எடையுள்ள உருண்டை கல்லை தூக்கி தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர் .

இந்த விழாவில் நீலகிரி எஸ் .பி .நிஷா தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார் .
தோடர்களின் பாரம்பரிய நடனம் அரங்கேற எல்லோரும் விடைபெற்றோம் .

Leave a comment
Upload