
கம்பனும் ஔவையாரும் முட்டிக் கொண்ட கதை தெரியுமா?
இது எளிமையான தமிழுக்கும், நம் புலவர்களின் குறும்புக்கும் ஒரு சான்று..
புலவர் கம்பருக்கும், தமிழ் மூதாட்டி ஔவைக்கும், புலவர்களுக்கேயான போட்டியும் பொறாமையும் இருந்ததாம்.
சோழ நாடு வந்த ஔவை, குலோத்துங்க சோழன் அரசவைக்கு சென்றாளாம். மன்னன் ஔவையை வரவேற்று உபசரித்து அவளின் தமிழைக் கேட்க ஆவலாய் காத்திருப்பதாய்ச் சொன்னானாம். இது கண்டு பொறுக்காத அரசவைப் புலவரான கம்பர், ஔவையை மட்டம்தட்ட உறுதி கொண்டார்.
“நான் சொல்லும் ஓரடியை பொருள் கண்டு பாட்டிலே உரைக்க இயலுமோ?”
மன்னன் தமிழ் விருந்துக்கு தயாராகி, ஔவையின் முகம் நோக்கினான்.
“அப்படியே ஆகட்டும் கம்ப நாடரே!”
ஒரு தண்டில் நான்கே இலைகளை தாங்கி நிற்கும் ஆரைக் கீரையை பொருளாய்க் கொண்டு, கம்பர் சொல்லலுற்றார்
"ஒரு காலில் நாலிலைப் பந்தலடி"
தமிழறிந்த சோழன் துணுக்குற்றான். ‘பந்தலடி’ என்ற பதத்தில் ‘அடியாக கொள்’ எனப் பொருள் பட்டாலும், “அடியே” என்று ஔவையை விளிக்கும் குதர்க்கம் அல்லவா தென்படுகிறது?! ஔவையின் மறுமொழியை கேட்க முனைந்தான்.
ஔவையோ நிமிடம் கூட தாமதித்தாளில்லை. சடசடவென வார்த்தைகள் அவளிடமிருந்து தெறித்தன.
“எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே;
மட்டிற் பெரியம்மை வாகனமே ; முட்டமேற்
கூரையில்லா வீடே ,குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது”
கர்வபங்கப்பட்ட கம்பர் ஔவையின் மேதைமைக்கு தலை வணங்கினார்.
ஔவையின் பாட்டுக்கு பொருள்...
‘அடியே’ என்று விளித்த கம்பனை எப்படியெல்லாம் ‘பாட்டு’விட்டார் பாருங்கள்!
எட்டேகால்லட்சணமே .. "அவலட்சணமே
(‘அ' என்பது எட்டைக் குறிக்கும்.
'வ' என்பது 1/4 என தமிழில்
பொருள்படும் . இரண்டையும் சேர்த்தால் 'அவ' என்றாகும்)
எமனேறும் பரியே.. "எருமையே" (எமனின் வாகனம் எருமையல்லவா!)
மட்டில் பெரியம்மை வாகனமே.. “கழுதையே”(அம்மை என்பவள் ஸ்ரீதேவி..
பெரியம்மை ஸ்ரீதேவியின் அக்காவான மூதேவி. மூதேவியின் வாகனம் கழுதை)
முட்டமேற் கூரையில்லா வீடே.. “குட்டிச்சுவரே” (மேலேகூரை இல்லாதது)
குலராமன் தூதுவனே.. "குரங்கே!” (ராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயர் குரங்குதானே?)
ஆரையடா சொன்னாயது... ‘ஆரைக்கீரை’ என்பது பதில் என்றுபொருள் படும்
‘நீ யாரையடா பார்த்து இப்படிச் சொன்னாய்?’ என்றும் அர்த்தப்படும்.

Leave a comment
Upload