தொடர்கள்
பொது
சித்திரத் திருப்பாவை - சத்யபாமா ஒப்பிலி

2026000215415989.jpg

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்பானே..

ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்…

மார்கழி மாதத்தை நிரப்புவது திருப்பாவையையும், திருவெம்பாவையும், வீதி நிறையும் கோலங்களும் தான். மார்கழி காலைகள் மிக மிக அழகு. எந்த ஊரில் இருந்தாலும், இம்மாத காலை பழகிய மனம் எப்படியாவது தான் இருக்கும் இடத்தில் அதை கொண்டுவந்து விட முயற்சி செய்யும். கோலம் மார்கழியின் ஒரு முக்கிய லக்ஷணம்.வீதிகளை அடைத்துப் போடும் கோலங்கள் இன்னும் முழுவதுமாக அழிந்து போகவில்லை. கிராமங்களுக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், நகரமும் அந்த வாசனையை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு அபார்ட்மெண்டில் ஒருவர் கோலம் போட இரு வீட்டு வாசல் வேண்டும். எத்தனை பேரோ வந்து போகும் இடத்தில், ஒரு ஐந்து மணி நேர உழைப்பை குடியிருப்பே கூடி மதித்தல் வேண்டும்.

ஒரு சாதாரண கோலம் போட ஐந்து மணிநேரம் ஆகாது தான். ஆனால் அன்றைய பாசுரத்தை ஒரு கோலமாக வரைந்தால்!

“படத்திற்கு ஏற்றதுபோல் நேரம் செலவாகும். ஆனால் குறைந்தது மூன்று மணிநேரமாவது ஆகும்” என்கிறார், திருமதி.கமலா. இவர் கடந்த நான்காண்டு காலமாக திருப்பாவையை கோலமாக வரைந்து கொண்டு வருகிறார். நங்கநல்லூரில் ஒரு குடியிருப்பில் வசிக்கும் இவர் மார்கழி மாதத்தில் அன்றைய சித்திர திருப்பாவைக்காக தினந்தோறும் காலை 3.30/4 மணிக்கு எழுந்து கொள்வாராம்.

மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள, தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கோவிலுக்கு போகும் வழியில் பார்த்த கலர் கலரான கோலமாவு தான் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி என்கிறார். ஊஞ்சலில் ஆடும் பெண் தான் முதல் கோலம். அதைப் பார்த்து அவர் மகன் குடுத்த ஊக்கத்தினால் மனிதர்களை வரைய ஆரம்பித்தார். சுதந்திர தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம் போன்றவற்றை வரைந்து கொண்டிருந்தவர் எப்படி, எப்போதிலிருந்து பாசுரம் வரைய ஆரம்பித்தார் என்று தெளிவாக தெரிய வில்லை என்கிறார். வயது அறுவதாகிறது. எப்படி முடிகிறது என்று கேட்டால்,” தெரியவில்லை. கால் வலி உடம்பு வலி எதுவும் இதனால் கிடையாது என்கிறார். பேசும் போது அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியப் பட வைத்தது . அயோத்தியில் ராமர் கோவில் திறந்த அன்று சென்னையில் ஹயக்ரீவர் கோவில் வாசலில் ஆறு மணி நேரம் ராமர் பட்டாபிஷேகம் வரைந்திருக்கிறார். அது முடிந்து அவர் அபார்ட்மெண்டில் மறுபடியும் ஒரு நான்கு மணிநேரம் கோலம் வரைந்திருக்கிறார். இது முடித்து மறுநாள் காலை அவர் வீட்டிலும். மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு 12 மணிநேரம். எப்படி முடிந்தது என்று கேட்டால், “ தெரியவில்லை. எல்லாம் பகவத் சங்கல்பம்” என்கிறார்.

கோலத்தால் சித்திரம் வரைவது மிகவும் சிரமமானது தான். லேசாக எங்கேயோ கொஞ்சம் தவறினாலும் திருத்துவது மிகவும் கடினம். அதுவும் அபார்ட்மெண்டில் போடுவதென்றால் சுத்தி வந்து போட முடியாது. சுவர் தடுக்கும். ஆனாலும் ஒரு மூன்று நான்கு மணி நேரம் வேறு சிந்தனை எதுவும் இல்லாமல் கோலம் போடுவது ஒரு தியானம் மாதிரி எனக்கு என்கிறார்.

அவரின் கோலத்தில் மிகவும் அழகானது, முகபாவங்கள். மிக சிறியதாக ஒரு முகத்தை வரைந்தாலும், அதிலும் ஒரு அழகான முகபாவத்தை கொண்டுவந்து விடுகிறார். எப்படி என்று கேட்டால், அதற்கும்கடவுளைத் தான் கை காட்டுகிறார்.

பகாசுரனை அழிக்கும் கண்ணன் அதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் கோதை; கண்ணனுடன் சேர்ந்து மாடுகளை கொஞ்சும் கோதை அவளுடன் அவளுடைய கிளி; அனந்த சயனத்தில் பள்ளி கொண்ட பிரான். அவனருகில் கோதையும், கிளியும். இப்படி ஒவ்வொரு நாளைக்கும் ஒன்று.

கோதையையும், மாதவனையும், கிளியையும் பார்க்கும் போதே மனதில் ஒரு அமைதி வருகிறது. தினம் தினம் வரைவதை ஒரு தியானம் என்று அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

தன் வயதை மதிக்காதவர்களிடம் ஒரு தெளிவும், தன்னபிக்கையும் இருக்கும். அது அவர்களிடம் பேசுபவர்களிடமும் தொற்றிக்கொள்ளும்.

மனதிற்கு பிடித்ததை செய்யச் சொல்லி தூண்டும். எனக்கும் அப்படி ஒரு அனுபவம் தான் கிடைத்தது அவருடன் பேசிய பொழுது.