‘வில்லிசைக்கும் சினிமாவுக்கும் பொருத்தம் உண்டு’ என்று நான் சொன்னது போல - ‘வில்லிசைக்கும் திரை இசையமைப்பாளருக்கும் தொடர்பு உண்டு’ என்று நிரூபித்தது போல - வில்லிசைக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. நிரூபித்தாலும், எளிதாக ஒப்புக்கொள்ள சிலருக்கு மனம் வருவதில்லை.
ஆனால், பரந்த ஞானம் கொண்ட சில ஜாம்பவான்கள் - வில்லிசைக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் உள்ள பல அழகிய அர்த்தமுள்ள பொருத்தங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்ததில்லை. காரணம், அவர்களின் பரிபூரணம்! பெரிய ஞானம்! அதைவிட பெரிய மனம்..!
அப்படிப்பட்ட பல ஜாம்பவான்களில் ஒருவர்தான் - பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அண்ணா. (திரை இசை திலகம், வயலின் உலகம், கலை-கலாசார திலகம் எனக் கூறிக்கொண்டே போகலாம்!
என் தந்தையும், குன்னக்குடி அண்ணாவும் வேலை பார்த்த ஒரு சில படங்களில் குறிப்பிடத்தக்கது - திருமதி கே.ஆர்.விஜயா நடித்த ‘அன்னை அபிராமி’. அப்படத்தில் கதை, வசனம், பாடல்கள் பணி - என் தந்தைக்கு. இசையமைப்பாளர் - வயலின் வித்வான் குன்னக்குடி அண்ணா..!
இப்படத்தில் ஒரு பிரபலமான பாடல் -
‘நாக தெய்வமே - நாங்கள்
நாடும் தெய்வமே…
நல்லவர்க்கு நல்லது செய்
குலதெய்வமே..!
அஞ்சுதலை நீக்கும் கருமாரி தாயே -
தலையில் அஞ்சு தலையெடுத்து குடையாகினாய்
குழலூதும் கண்ணன், உன் தலை மீதிலே -
நீ விளையாடும் காளிங்கன் நடமாகினாய்…’
- அற்புதமான இசை… பாடியவர் - எம்.ஆர்.விஜயா… எழுத்து - என் தந்தை..!
இப்படத்தின் தயாரிப்பாளர் - ஜி.என்.வேலுமணி ஐயா (இசையமைப்பாளர் (சங்கர்)கணேஷின் மாமனார்). அவர் எப்பவுமே மியூசிக் டிஸ்கஷனில் கலந்து கொள்வாராம். தனது படத்தின் இசையமைப்பாளரிடம் ஏதோ ஐந்தாறு கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொண்டு, படத்தயாரிப்பு வேலைகளைப் பார்க்க, வெளியே சென்றுவிடுவாராம்..!
அன்றும் அப்படித்தான்… மேற்கண்ட பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் அண்ணா இசைகோர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அருகில், இப்பாடலை எழுதிய என் தந்தை அமர்ந்து, உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
மேலும், அப்பாவோடு குன்னக்குடி அண்ணா - இருவருமே, ‘இன்று எப்படியாவது தயாரிப்பாளர் பணம் கொடுத்துவிடுவார்’ என்று நீண்ட நாளைய எதிர்பார்ப்பின் பலனை இருபெரும் கலைஞர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
வந்துவிட்டாரய்யா ஜி.என்.வேலுமணி…
ரிக்கார்டிங் ரூமுக்கு வந்ததும், ‘‘குன்னக்குடி… நீங்க டியூன் போட்ட பாடலைப் பாடிக் காண்பிங்க..!’’
குன்னக்குடி பாடுகிறார்… தந்தையின் பாடல் வரிகள்… ரசிக்கிறார் வேலுமணி..!
ஆஹா… ஆஹா..! “பிரமாதம்ண்ணே… கவிஞர் ஐயா ரொம்ப பிரமாதம்… பிரமாதம்..!’’ என ஜி.என்.வேலுமணி சொல்லி, கடைசியாக குன்னக்குடியிடம் ‘‘அண்ணே… இந்த ராகம் காம்போதிதானே..!’’ எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கு குன்னக்குடி அண்ணன் என்ன சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்..? அவரும் ‘‘ஆமாண்ணே..!’’ என சமாளிக்கிறார்.
என் தந்தைக்கு ஒரே வியப்பு… ஏனெனில், அப்போதுதான் ‘அந்த ராகம் கல்யாணி’ என இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக நினைவு… குன்னக்குடி ‘ஆமா!’ என்றதும், கிளம்பிவிட்டார் தயாரிப்பாளர் வேலுமணி..!
குன்னக்குடியிடம், ‘‘அண்ணே… நாம இப்பத்தான் இந்தப் பாடல் கல்யாணிதான் முடிவு பண்ணினோம்..! அவரு ‘காம்போதியா?’னு கேட்டதுக்கு, நீங்க ‘ஆமா’னு சொல்லிட்டீங்க… ஏண்ணே..?’’ எனக் கேட்டிருக்கிறார் என் தந்தை.
அப்போது குன்னக்குடி அண்ணா சொன்னது - ‘சுப்பண்ணா, நமக்கு ரொம்ப நாளா அவரு பணம் தரலை! இன்னிக்குத்தான் கையிலே பணப்பை வெச்சிருக்கார்… பேங்க்குக்கு போறார்… இதுக்கிடையே அவரு மனசை சங்கடப்படுத்தவோ, குழப்பவோ வேண்டாமேனுதான்… ‘கல்யாணியா இருந்தா என்ன… காம்போதியா இருந்தா அவருக்கு என்ன… அதைப் பத்தி நாம கவலைப்பட்டுப்போம்’னு, என அவரை பேங்க்குக்கு சந்தோஷமா அனுப்பி வெச்சுட்டேன்..!’’ என்று கூறிவிட்டு, கலகலவென சிரித்தாராம் குன்னக்குடி.
‘‘ஓ… அப்படியா அண்ணே..!’’ என்று என் தந்தையும் சிரித்தாராம். இவர்கள் இருவரும் இரண்டு இமயங்கள்… என்னே, வாழ்க்கை அனுபவம்..!
எப்படித்தான் இந்த ‘கிருஷ்ண சாதுர்யத்தை’… அடுத்த தலைமுறைகளான நாம படிக்கப் போகிறோமோ..?
அடுத்து என்ன நடந்தது என்பதை அறியும் ஆவலை தூண்டிவிட்டேனா..?!
- காத்திருப்போம்
Leave a comment
Upload