தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்

வித்யாசமான ஊழியர்...

20210405071039998.gif

பெரும்பாலும் அரசு ஊழியர்கள் ஆட்டை மோய்த்தோம், கோலைப் போட்டோம் என்று ஒரு கிராமத்தில் ஒரு பேச்சு உண்டு. அப்படித்தான் அரசு ஊழியர்கள் வாழ விரும்புவார்கள். அவர்களுக்குக் கொடுத்த வேலையை மட்டும் செய்வார்கள். அதிகாரிகள் சொல்வது தவறு என்றால் கூட, எதிர்த்துப் பேசமாட்டார்கள், நமக்கென்ன என்று இருப்பார்கள். இலாகாவில் பதவி உயர்வு தேர்வு எழுதி, பாஸ் செய்து பதவி உயர்வு பெறுவது, இப்படித் தான் அவர்கள் சிந்தனை இருக்கும். இன்றைய அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இதை இப்போதும் நானே பல அரசு அலுவலகங்களில் பார்க்கிறேன்.

நான் தூர்தர்ஷனில் வேலைக்கு சேர்ந்த புதிதில் கேஷியர் தியாகேஷ்வரனை பார்க்கப் போனேன். நான் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்லாமல் அவர் செக்கை எடுத்து நீட்டினார். அப்போது, ஆள் ரொம்பவும் ரஃப் டைப் ஆசாமி போலிருக்கு என்று நினைத்தேன். ஆனால், அது பொய். ரொம்பவும் நல்லவர், சேவை மனப்பான்மை உடையவர் என்பதை சில நாளில் தெரிந்து கொண்டேன். அலுவலக ஊழியர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமாய் விழுந்துவிட்டார். இந்தச் செய்தி கேள்விப்பட்டதும், அவர் அறையை அவசரமாக பூட்டிவிட்டு, ஊழியரை அழைத்துக்கொண்டு ஆபீஸ் காரை உடனே எடுத்து வரச்சொல்லி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு, அவரைக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வந்தார். வந்த உடனே, உயர் அதிகாரிகளிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்தார். அறைக்குத் திரும்பியதும், பணம் வாங்க காத்திருந்தவர்களிடம் “மன்னித்துக் கொள்ளுங்கள். அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டதால், உங்களை காக்க வைத்து விட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டார். கூடவே டிரான்ஸ்போர்ட் பிரிவுக்கு போன் செய்து, அவசரத்தில் கார் ஆர்டர் இல்லாமல், காரை எடுத்துப் போய் விட்டேன் என்று சொல்லி கார் ஆர்டரில் அதிகாரியின் அனுமதி கையெழுத்தை வாங்கி தந்தார். இதையெல்லாம் நான் நேரில் பார்த்தேன். அப்போது அவர் நல்லவர் தானோ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போதெல்லாம் சம்பள தினத்தன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காசாளர் தான் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அவர் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருவரை வைத்து, ஒவ்வொரு அறையிலும் யாரையும் வரிசையில் நின்று காக்க விடாமல், உடனே பணப்பட்டுவாடா வழங்க ஏற்பாடு செய்திருந்தார். தனக்கு உதவி செய்யும் சக ஊழியர்களுக்கு, தனது சொந்த செலவில் அலுவலகத்திலிருந்து டீ பிஸ்கட் வடை என்று வாங்கித் தருவார். அது மட்டும் இல்ல... பல அலுவலக பியூன்கள், அலுவலகத்தை சுத்தம் செய்பவர்கள், மாதக்கடைசியில் இருபது ரூபாய் முப்பது ரூபாய் என்று வாங்கிச் செல்வார்கள். சம்பளம் வாங்கியதும் தருகிறேன் என்று சொல்வார்கள். அவர் யாரிடமும் திரும்பக் கேட்கமாட்டார், அவர்களாக தந்தால் வாங்கிக் கொள்வார். நான் கூட சில சமயம் அவரிடம் பணம் வாங்கியிருக்கிறேன்.

காலப்போக்கில், நானும் அவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அதற்குக் காரணம் நான் பத்திரிக்கையில் எழுதுகிறேன் என்பதுதான். இது தவிர, நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன், அதன் வாசகர்களில் அவரும் ஒருவர். நான் அரசியல் தலைவர்களை பார்க்க போகும் போதெல்லாம் அவரிடம் சொல்வேன். அவர் பைக்கில் என்னை அழைத்துச் செல்வார், எனக்கு ஆட்டோ செலவு மிச்சமாகும். சரி, விஷயத்துக்கு வருவோம்.

அவரை எந்த இடத்தில், எந்தப் பொறுப்பில் நியமித்தாலும் பளிச்சென்று அவரது டச் அந்தப் பிரிவில் பளிச்சென்று தெரியும்.

அவருக்கு ஏனோதானோ என்று வேலை செய்ய தெரியாது. அவரை காசாளர் பொறுப்பிலிருந்து, கேர் டேக்கர் பதவிக்கு மாற்றினார்கள். அதாவது அலுவலகத்தில் நான்காம் பிரிவு ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் ஆகியோரை வேலை வாங்குவது. இது ரொம்பவும் கடினமான பணி. டாய்லெட் சுத்தம், அலுவலக சுத்தம், அதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நான்காம் பிரிவு ஊழியர்கள், சரிவர வேலை செய்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். எது சரியில்லை என்றாலும், உடனே இவரிடம்தான் புகார் வரும், இவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால், அதையும் அவர் இதெல்லாம் ஒரு வேலையா என்று அந்த வேலையையே ரசித்து செய்ததை நான் நேரில் பார்த்தேன். முதலில் நான்காம் பிரிவு ஊழியர்கள் எல்லோரையும் அழைத்து, அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் தேவையை கேட்டறிந்தார். அவர்கள் கேட்டதெல்லாம் கிடைத்தது. அதே சமயத்தில், அவர்கள் வேலை செய்யவில்லை என்றால்... அவர் காட்டும் கடுமை ரொம்பவும் உக்கிரமாக இருக்கும். அதேசமயம், சிறிது நேரம் கழித்து அவர் தானா இவர் என்ற மாதிரி, அவருடன் தோழமையாக பழகி, அவரை மாற்றி விடுவார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம். அலுவலகத்தை சுற்றி சுற்றி வருவார். ஆள் இல்லாத அறையில் தேவையில்லாமல் எரியும் விளக்குகள், மின்விசிறி இவற்றையெல்லாம் நிறுத்திவிடுவார்.

தற்காலிக ஊழியர்களுக்கு, அப்போது தினக்கூலி 18 ரூபாய். உண்மையில், மத்திய - மாநில அரசு, அந்தக் கூலியை எப்போதோ உயர்த்தி, 45 ரூபாய்க்கு அரசு ஆணை பிறப்பித்து விட்டது. அந்த நாற்பத்தி ஐந்து ரூபாய் இவர்களுக்கும் கிடைக்க என்ன வழி என்று அவர் யோசித்தார். ஒரு நாள், இந்த விவரங்களை அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். அப்போது, அவர் சொன்னது இன்றும் என் காதில் ஒலிக்கிறது. நாம் நிரந்தர ஊழியர்களிடம் என்ன வேலை வாங்குகிறோமோ, அதே வேலையை தற்காலிக ஊழியகளிடமும் வாங்குகிறோம். ஆனால், அவர்களுக்கு நியாயமான கூலி நம்மால் தர முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். நான் அப்போது அவரிடம் இதுபற்றி கேட்டபோது தான், அந்த அரசு ஆணைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார்.

நான் உடனே தமிழக தொழிலாளர் இலாகா அமைச்சரின் பிஏ-விடம் இந்த அரசனைப் பற்றி சொன்னேன். உடனே அவர், நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து, தொழிலாளர் துறை இயக்குனர் அலுவலகம் சேப்பாக்கத்தில் இருக்கிறது. அங்கு இயக்குனரின் உதவியாளரை பாருங்கள், அவர் உங்களுக்குத் தேவையானதை செய்து தருவார் என்றார். சொன்னபடி அரை மணி நேரம் கழித்து அந்த அலுவலகம் போய் அலுவலக இயக்குனரின் உதவியாளரை பார்த்தோம். நாங்கள் இன்னாரென்று சொன்னதும், ஒரு கவரை எடுத்து கொடுத்தார். அங்கேயே அந்தக் கவரை, தியாகேஷ்வரன் பிரித்துப் பார்த்து மகிழ்ச்சியாக, இனிமேல் அவர்களுக்கு நாம் 45 ரூபாய் தரலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்.

அலுவலகம் வந்ததும்... அலுவலக குறிப்பை, அவரே டைப் செய்து அந்த அரசு ஆணையை இணைத்து, உயர் அதிகாரியிடம் எடுத்துச் சென்று, கையோடு அதற்கு முறையான ஆணையை வாங்கினார். இன்னும் சொல்லப்போனால்... அந்த ஆணையைக் கூட அவர் டைப் செய்து ரெடியாக வைத்து இருந்தார். தற்காலிக ஊழியர்களுக்கு, இந்தச் செய்தியை அவர் அழைத்து சொல்லும்போது... அவர் கண்ணில் தெரிந்த மகிழ்ச்சி, இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்கள் அந்த புதிய கூலி உயர்வை பெற்ற அதே மாதத்தில், அந்த அரசு ஆணை எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வந்ததோ, அந்த தேதியிலிருந்து, அவர்களுக்கு அந்தப் பணம் கிடைக்கவும் அதிகாரியிடம் சற்றுப் போராடி அனுமதி வாங்கி, அதையும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அப்போதே அவர் என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தார்.

அதைவிட முக்கியம்... அந்தத் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கு சட்டபூர்வமாக என்ன செய்யலாம் என்று அவர் வழக்கறிஞர்களை போய் ஆலோசித்தார். அவர்கள் என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று கேட்டார்களோ, அதையெல்லாம் அவரே சேகரித்து, தற்காலிக ஊழியர்கள் சார்பாக அரசாங்கத்தின் மீது வழக்கு போட வைத்து.... நீண்ட போராட்டம், வாய்தா... வாய்தா... வாய்தா என்று வாங்கி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊழியர்கள் நிரந்தரம் ஆக்கப்பட்டார்கள். பின் தேதியிட்டு, அவர்களுக்கு அரசு ஊதியமும் கிடைக்க அவர் ஏற்பாடு செய்தார். இந்தச் செய்தி எல்லாம் அவருக்கு தெரியவரும்போது, அவர் ஓய்வு பெற்று விட்டார். தற்காலிக ஊழியர் ஒருவர், அந்த சந்தோஷ செய்தியை அவரிடம் சொன்னபோது... அவர் சொன்னது, எனக்கு நன்றி சொல்லாதீர்கள், உங்களை முதல் முதலில் தற்காலிக ஊழியராக நியமித்தாரே, அவரால்தான் இன்று நீங்கள் நிரந்தரமாக்க பட்டிருக்கிறார்கள். அவருக்கு நன்றி சொல்லுங்கள், என்று நன்றியைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காத மாமனிதர் அவர்.

பொதுவாக அரசு ஊழியர்கள், மேலதிகாரியிடம் தங்களுக்கு எதற்கு வம்பு என்று கண்ணுக்குத் தெரிந்தே, ஒரு தவறு நடந்தால் கூட கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், தியாகேஷ்வரன் அப்படியல்ல... தப்பு யார் செய்தாலும், தப்பு.. தப்பு தான் என்று துணிச்சலாக தட்டிக்கேட்ட அரசு அதிகாரி. இதனால் அவரை வேறு இடத்துக்கு மாற்றிக் கூடப் பார்த்தார்கள். ஆனால், அந்த அலுவலகத்திலும் அவர் அப்படித்தான் இருந்தார். அதுதான் அவர்.