தொடர்கள்
தேர்தல் ஸ்பெஷல்
வேலூர்... இருவர் போட்ட தப்பு கணக்கு... ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

20210403080055360.jpeg

வேலூரில் துரை முருகனும், அமைச்சர் கேசி வீரமணியும் கிட்டத்தட்ட ஒன்றுக்குள் ஒன்று. வீரமணி ஆளும் கட்சி என்பதால் துரைமுருகன் சொல்வதையெல்லாம் செய்து தருவார். இந்த விஷயம் எடப்பாடிக்கும் தெரியும், ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால், கண்டுகொள்ள மாட்டார்கள். வீரமணி கேட்டுக்கொண்டதற்கிணங்க, எடப்பாடி துரைமுருகன் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு கூட வரவில்லை. இதேபோல் மருத்துவர் ராமதாசும் ஜாதிப் பற்று காரணமாக, காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரவில்லை. இவை எல்லாமே அங்கு வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இருந்தது.

20210403080135993.jpeg

துரைமுருகன் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அமைச்சர் வீரமணி, அவரை எதிர்த்து பலவீனமான வேட்பாளர் என்று நினைத்து கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை இருந்த ராமு என்பவரை வேட்பாளராக சிபாரிசு செய்து, எடப்பாடியிடமும் அழுத்தம் தந்து, அவரை வேட்பாளராக அறிவிக்க வைத்தார். இவை எல்லாமே துரைமுருகனின் ஒப்புதலுடன் தான் நடந்தது. இதேபோல் வீரமணியை எதிர்த்து வேட்பாளராக துரைமுருகன் சிபாரிசு செய்த வரும் டம்மி வேட்பாளர் என்று மாவட்டச் செயலாளர் தேவராஜ்ஜை, வீரமணி சம்மதத்துடன் வேட்பாளராக அறிவாலயத்தை அறிவிக்க வைத்தார் துரைமுருகன். இந்த தேவராஜ் ஜோலார்பேட்டையில் சென்ற தேர்தலின்போது வீரமணியை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஜெயிக்க வைப்பதற்கு பதில், வீரமணியை ஜெயிக்க வைப்பதற்கான வேலையை கடுமையாக மேற்கொண்டார். அப்படிப்பட்ட விசுவாசியை இந்த முறை நமக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள் என்று வீரமணி சந்தோஷப்பட்டார்.

கவிதா தண்டபாணி தோற்றுப்போனதும், ஸ்டாலினிடம் சென்று.. நான் தோற்றுப் போனதற்கு காரணம் மாவட்ட செயலாளர் தேவராஜ் தான். அவர் வீரமணிக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்த்தார் என்று புகார் சொல்லி, அதைத் தொடர்ந்து தேவராஜ் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, துரைமுருகன் சிபாரிசில் மீண்டும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் தேவராஜ்.

சட்டமன்றத் தேர்தலில் 12வது முறையும், காட்பாடி தொகுதியில் 10வது முறையாக போட்டியிடும் துரைமுருகன், முதலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தார். இந்த நம்பிக்கை எல்லாம் ஓட்டுப் பெட்டியை திறந்ததும், தூள் தூளாக உடைந்துவிட்டது. தொடர்ந்து பின்னடைவு பின்னடைவு என்றுதான் செய்திகள் வந்தது. வன்னியர் பகுதியில் கூட அவருக்கு எதிர்பார்த்த ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. டம்மி வேட்பாளர் என்று நினைத்த ராமுவுக்கு ஓட்டுக்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. பட்டியலின மக்கள் பெரும்பாலும் வசிக்கும் விருதம்பட்டு பகுதியில் கூட, துரைமுருகனுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகள் பதிவாகவில்லை. இதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சி, ஜெயித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு ஒருவழியாக 796 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், ராமு அவரைப் பாடாய்ப் படுத்தி விட்டார், பாவம்...

இதேபோல் ஜோலார்பேட்டையில் பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார் வீரமணி. நம்மை எதிர்த்து டம்மி வேட்பாளர் தானே இருக்கிறார் என்றும் நிச்சயம் வெற்றி என்ற நம்பிக்கையுடன் இருந்தார். கடைசியில் அவரது விருப்ப திமுக வேட்பாளரே, அவருக்கு வில்லன் ஆகிவிட்டார். தொடர்ந்து தேவராஜ் முன்னிலையில் இருந்து அவரது விருப்ப வேட்பாளரிடமே, வீரமணி தோற்றுப் போனார். வேலூரில் இந்த இரண்டு விவிஐபி வேட்பாளர்களின் தேர்தல் சாதுரிய அலப்பறை இப்போது பரபரப்பான பேச்சாக இருக்கிறது.