காரைக்குடி மாவட்டம், கோட்டையூர் கிராமம். புகழ்பெற்ற கல்வியாளர்
பத்மபூசன் ராம. அழகப்ப செட்டியார் அவர்கள் பிறந்த ஊர்.
அதே வகையறாவைச்சேர்ந்த அழ.ராமநாத செட்டியார். சிறிய அளவில்
வட்டிக்கடை ஒன்று நடத்தி வரும் அவர், ஆன்மீக திருப்பணிகளில்
அதீத ஆர்வம் உடைய ஊரில் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர்.
குறை என்றால் என்ன என தெரியாத இவருக்கு ஒரே குறை தனக்கு வாரிசு இல்லை என்ற ஒன்றுதான்.
அவரது மனைவி செங்கமலம் கண்டாங்கி சேலைக்கட்டி பாரம்பரியமான குடும்பத்தையும், செட்டியாரையும் கண்ணும் கருத்துமாக கவனித்து, வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஊழியம் செய்ய ஆட்கள் இருந்தும், செட்டியாருக்கு தன் கையால் சமைத்துப் போடுவதும், பணிவிடை செய்வதும்தான் இந்த ஜென்மத்தில் செய்கிற புண்ணியம் என்று கருதிச்செய்பவர்.
செட்டியார் வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பும் தோரணையே பார்க்க
ஆயிரம் கண்கள் வேண்டும். மொடமொடவென வெள்ளை வேட்டி,
சட்டை தோளில் சரிகைத்துண்டு, வலது கையில் ஆறு விரல்கள் இருக்கும். அதில் அனைத்திலும் மோதிரம் அணிந்திருப்பார். தங்கப்ரேம் போட்ட கண்ணாடி, பார்த்தாலே கையெடுத்து கும்பிட வைக்கும்
கம்பீரம், பழைய மாடல் அம்பாசிடரில் அவர் ஏறிச்செல்லும்
அழகைப் பார்த்து விட்டுதான், பிற வீட்டுப் பணிகளை கவனிப்பார் அனைவராலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படும் செங்கமலத்தம்மாள்.
அன்றும், காரில் ஏறப்போனவர் திரும்பி கதவோரம் நின்று ரசித்துக்
கொண்டிருந்த ஆச்சியைக் கூப்பிட்டார்,
இந்தா! இங்கே வா. நாளை நாம கும்பகோணம் போகணும், சோதிடம்
பார்த்தோமில்லே பரிகாரமாக செய்யச்சொன்னது பாக்கி இருக்கு, அதை
நாளை செய்ய ஏற்பாடு பண்ணியிருக்கேன், போய் வந்திடுவோம்.
நீ துணிமணிகளை எடுத்து வை. மாலை கிளம்பிப் போவோம் என
சொல்லி கிளம்பினார்.
ஆகட்டும் சரிங்க. என்றாள் ஆச்சி.
தன் பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஒன்று ஏற்பட, அதை விலக்க
அவளிவநல்லூர் சாட்சிநாதருக்கு அபிஷேக ஆரதானை
செய்யும்படி சோதிடர் சொன்னதைத்தான் நினைவு கூர்ந்தார் ராமநாதன்.
அந்தப் பரிகாரம் செய்த பின்னே வாழ்வில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்
அத்தனைக்கும் உங்கள் மகன் காரணமாகவும், உறுதுணையாகவும்
இருப்பான் என்று ஜோசியர் சொன்னதை சந்தோஷமாக ஏற்பதா? இல்லை, நமக்குத்தான் வாரிசு இல்லையென கவலைப்படுவதா?
எனத் தெரியாமல் ஊருக்கு திரும்பி வந்தவர்தான், பரிகாரத்திற்கு நாளைச் செல்லவேண்டும் என்று ஆச்சியை அழைக்கிறார்.
விதி வலியது. எங்கோ நடக்கும் ஒரு நிகழ்விற்கான தொடர்ச்சியான சமகால நிகழ்வு இது, என்பதுதான் வாழ்வில் புரிந்துக் கொள்ள முடியாத புதிர்.
Leave a comment
Upload