வீட்டின் முன் வாடகை டாக்ஸி சறுக்கி நின்றது. ஓட்டுநர் இருக்கைக்கு பக்கவாட்டில் இருக்கும் இருக்கையிலிருந்து வெளிப்பட்டான் மகிழ்நன். வயது 28. உயரம் 170 செமீ. இளவயது பிரபு சாயல், கட்டம் போட்ட வெள்ளை நிற முழுக்கை சட்டை உடுத்தி, கையை மேல் மணிக்கட்டு வரை மடித்து விட்டிருந்தான். இடது மணிக்கட்டில் பாஸ்ட் ட்ராக் வாட்ச் கட்டியிருந்தான். கறுப்புநிற ஜீன்ஸ் அணிந்திருந்தான். இடது கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்தான். கால்களில் ஷு.
மகிழ்நனை தொடர்ந்து காரின் பின் இருக்கையிலிருந்து அவனது பெற்றோரும் தரகரும் இறங்கினர்.
வீட்டின் ஜன்னலுக்கு பின் சுகிர்தா மறைவாய் நின்றிருந்தாள். அவள் அருகே அவளது தோழி காவ்யா நின்றிருந்தாள்.
“சுகி! மாப்பிள்ளையோட பர்ஸ்ட் லுக் எப்படி?”
“மாப்பிள்ளை ஓகே பர்சனாலிட்டி. அவன் ஸ்மார்ட்போன் வச்சிருக்கிறது அவனுக்கு கூடுதல் தகுதி.”
சுகிர்தாவின் பெற்றோர் வாசலுக்கு ஓடி வந்து மாப்பிள்ளை வீட்டாரையும், தரகரையும் வரவேற்றனர்.
“வாங்க வாங்க… உள்ளே வாங்க!”
வரவேற்பறையில் வந்த நால்வரும் அமர்ந்தனர். மகிழ்நன் வரவேற்பறையை நோட்டமிட்டான். சுவர்களில் சுகிர்தா பல்வேறு போஸ்களில் லேமினேட் செய்யப்பட்ட புகைப்படங்களாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சுகிர்தாவின் தந்தை மகிழ்நனை தலையிலிருந்து கால்வரை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“என்ன படிச்சிருக்கீங்க தம்பீ?”
“இளங்கலை கணினி பொறியியலும், அதன்பின் முதுகலை மேலாண்மை நிர்வாகமும் படித்திருக்கிறேன்.”
“எங்க வேலை பாக்றீங்க தம்பீ?”
“இன்போசிஸ்ல!”
“என்னவாக வேலை பாக்றீங்க?”
“அணி தலைவனாக இருக்கிறேன்!”
“உங்க மாத சம்பளம்?”
“எழுபத்தியைந்தாயிரம் ரூபாய்!”
“எங்கு தங்கியிருக்கிறீர்கள்?”
“மடிப்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருக்கிறேன். என்னுடன் அறை தோழர் இருவர் இருக்கின்றனர்!”
“பணிக்கு எந்த வாகனத்தில் செல்கிறீர்கள்?”
“பைக்கில்தான் சென்று வருகிறேன்!”
“உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?”
“ஒரு அக்கா, ஒரு அண்ணன். அக்கா, கணவர் இரு குழந்தைகளுடன் கனடாவில் வசிக்கிறாள். அண்ணன் இந்திய இராணுவத்தில மருத்துவராக பணிபுரிகிறார்!”
சுகிர்தா சிரித்துக் கொண்டாள். “நாத்தனார், உடனிருந்து அல்லது பக்கத்தில் இருந்து தேள்மாதிரி கொட்டப் போவதில்லை. அண்ணனும் இராணுவ சேவையில். இதுவும் மாப்பிள்ளைக்கான ப்ளஸ் பாயின்ட்கள்!”
“கிரிடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா?”
“ஆமாம்!”
“அடிக்கடி கடனுக்கு பொருட்கள் வாங்குவீர்களா?”
“மாட்டேன்!”
“பேஸ்புக், ட்விட்டர்ல இருக்கீங்களா?”
“இருக்கேன்… ஆனா ரொம்ப ஆக்டிவ்வா இல்ல… அடுத்தவர்கள் போடும் பதிவுகளை வாசிப்பேன். நான் போடும் பதிவுகள் மிகக்குறைவு!”
“நல்லவேளை மாப்பிள்ளை முகநூல் பைத்தியம் இல்லை. கடவுளுக்கு நன்றி!” வானத்துக்கு உயர்த்தி கும்பிட்டாள் சுகிர்தா.
“ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழி சாலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதாவது ஒரு அமைப்பில் இருக்கிறீர்களா?”
“இல்லை!”
“உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் போது உடன் பயணிக்கும் தேசிய தலைவர் பார்த்து ஒழிக கோஷம் போடுவீர்களா?”
“வாயை திறக்க மாட்டேன்!”
“உங்க நிறுவனம் நடத்தும் வாராந்திர கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்களா?”
“குடிபழக்கம் உண்டா என நேரடியா கேளுங்கள். போதை பானம் அருந்துவதோ, புகைபிடிப்பதோ எனக்கு அறவே பிடிக்காது. இந்த இரண்டு பழக்கங்களும் இல்லாதவர்களைதான் என் நண்பர்களாய் அனுமதிப்பேன்!”
“மாப்பிள்ளைக்கு அரசியலும், குடிப்பழக்கமும் பிடிக்காது… சபாஷ்!” அகமகிழ்ந்தாள் சுகிர்தா.
“திருமணத்திற்கு பின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பம் அல்லது தனிக்குடித்தனம்?”
“தனிக்குடித்தனம்தான்!”
“நீங்க கஞ்சனா ஓட்டைக்கையா?”
“இரண்டுக்கும் நடுவே மத்திமம் சார்!”
“சேமிக்கும் பழக்கம் உண்டா?”
“தினசரி வரவுசெலவு கணக்குகளை மடிகணினியில் பதிந்து வைப்பேன். ஓரளவு சேமித்து வைத்திருக்கிறேன்!”
“நீங்கள் பழைமைவாதியா புதுமைவாதியா?”
“நான் மரபு சார்ந்தவன். தேவைக்கு மட்டுமே புதுமைகளை ஸ்வீகரிப்பேன்!”
“நீங்க செல்பி பைத்தியமா?”
“பாதுகாப்பான இடங்களில் மறக்க முடியாத தருணங்களை செல்பி எடுப்பேன்!”
“மாப்பிள்ளை நூத்துக்கு இதுவரை 548 மார்க் எடுத்திருக்காரு!” அதிசயித்தாள் சுகிர்தா.
“நகைச்சுவை உணர்வு உண்டா?”
“இளிச்சவாயன் என்று சொல்லாத அளவுக்கு!”
“கடவுள் நம்பிக்கை உண்டா?”
“செய்யும் தொழிலே தெய்வம். அபூர்வமா கோயிலுக்கு போவேன்!”
“சுற்றுலா செல்லும் பழக்கம் உண்டா?”
“மாதம் ஒரு முறை ஒரு நாள் சுற்றுலா சென்று வருவேன்!”
“கடன் வாங்கும் கொடுக்கும் பழக்கம் உண்டா?”
“கடன் வாங்கமாட்டேன். நெருங்கிய நண்பர்கள் கடன் கேட்டால் திருப்பி தரவேண்டாம் எனக்கூறி பணம் தருவேன்”
சுகிர்தாவின் தாயார் குறுக்கிட்டாள். “என்னங்க… ஏதோ வேலைக்கு ஆள் எடுக்ற மாதிரி மாப்பிள்ளையை இன்டர்வியூ பண்றீங்க? கொஞ்சம் மூச்சு விடட்டும்!”
எழுந்து போய் சமோசா, மைசூர்பா, மிக்சர் எடுத்து வந்தாள். சுகிர்தா பட்டுப்புடவை கட்டி முழு அலங்காரத்தில் காபி எடுத்து வந்து நீட்டினாள்.
காபி வாங்கினவன் சுகிர்தாவை ஆழமாக உறுத்தான்.
“சுகிர்தா! என்னம்மா படிச்சிருக்க?” மாப்பிள்ளையின் அம்மா.
“இளங்கலை பல்மருத்துவம் படித்திருக்கிறேன். வடபழனில இருக்கிற ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்ல வேலை பாக்றேன். மாதம் இருபதாயிரம் சம்பளம்.”
“நீ வீட்டுக்கு ஒரே பொண்ணா?”
“ஆமாம்!”
“பாட்டு பாடுவியா?”
“பாடத் தெரியாது!”
சுகிர்தாவின் தந்தை குறுக்கிட்டார். “தம்பீ! கல்யாணத்துக்கு பின் மனைவியை வேலைக்கு அனுப்புவீங்களா?”
“அனுப்புவேன்!”
“வரதட்சணை எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க?” மகிழ்நனின் தந்தையிடம் கேட்டார் சுகிர்தாவின் தந்தை.
“எதுவும் வேண்டாம்… நீங்க விரும்பி செய்றதை தடுக்க மாட்டோம்!”
“பொண்ணுக்கு மாப்பிள்ளையையும் மாப்பிள்ளைக்கு பொன்னையும் பிடிச்சு போச்சுன்னா மீதிய பேசி முடிச்சிரலாம்!”
அப்போதுதான் மகிழ்நன் வாயை திறந்தான். “சமோசால மொறுமொறுப்பு குறைவு. மைசூர்பா தித்திப்பு மிக அதிகம். மிக்ஸர்ல உலர் திராட்டையும் முந்திரிபருப்பும் நெய்ல வறுத்து போட்டிருந்தா சூப்பரா இருக்கும். காப்பி மணம் கம்மி!”
தரகர் வெகு உற்சாகமாய் நீட்டி முழக்கினார். “நான் மொதல்லயே ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்… மாப்பிள்ளை செமையா சமைப்பார். சைவம் என்றாலும் அசைவம் என்றாலும் தூள் பரத்திடுவார். வெவ்வேறு நாட்டு சமையல்களை ஒண்ணு இணைச்சு புதுவகை டிஷ்கள் தயாரிப்பார். ‘ஒரு பிரம்மசாரியின் சமையல் குறிப்பு’-ன்னு ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கார் மாப்பிள்ளை. இதுவரைக்கும் அந்தப் புத்தகம் பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல வித்திருக்கு!”
தரகர் சொல்ல சொல்ல சுகிர்தாவின் முகம் இருண்டது.
அதிருப்தியாய் தனது அறைக்கு திரும்பினாள் சுகிர்தா. “என்னடி சுகி என்னாச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“திடீர்னு மாப்பிள்ளையோட மார்க் மைனஸ்ல போய்ருச்சுடி!”
“எப்படி?”
“புதுசா கல்யாணம் ஆகிற மாப்பிள்ளை தன் புதுபொண்டாட்டிகிட்ட ரெண்டே ரெண்டு விஷயம்தான் எதிர்பார்ப்பான். ஒண்ணு-திகட்ட திகட்ட தாம்பத்யம். இரண்டு- வயிறு நிறைய சாப்பாடு. சமையலை பத்தி அரிச்சுவடி கூட தெரியாதவனுக்கு மண்ணை அவிச்சு போட்டாலும் குறை சொல்லாம தின்னுட்டு போய்டுவான். சமையல் தெரிந்தவன் மனைவி சமையலை தன் சமையலோடு ஒப்பிட்டு பார்ப்பான். சமையல்ல அது சரியில்லை இது சரியில்லைன்னு குறை பாடுவான். தினம்தினம் புதுபுது சமையல் பண்ண சொல்லி சமையல்பாடம் எடுப்பான். பணருசி புகழ்ச்சிருசி அதிகார ருசி கண்டவனை விட நாக்குருசி கண்டவன் ஆபத்தானவன்! எனக்கு இவன் வேண்டாம்!”
பெற்றோரை அழைத்தாள் சுகிர்தா. “நான் இவனை கல்யாணம் செஞ்சிக்க விரும்பல… எதாவது சாக்குபோக்கு சொல்லி அவங்களை தட்டி கழிச்சிருங்க!”
காவ்யா மெதுவாக சுகிர்தாவிடம் வந்தாள். “ஐ... இப் யூ டோண்ட் மைன்ட்… இந்த வரனை எனக்கு பாக்க என் பெற்றோரிடம் சொல்லவா?”
“ஏன்?”
“எனக்கு சமையல் தெரியாது. கல்யாணத்திற்கு பின் சமையல் கத்துக்க விருப்பமும் இல்லை. கணவன் விரும்பிய தாம்பத்யதை கொடுத்து தலையணை மந்திரம் ஓதி அவன்கிட்ட சமையல் டிபார்ட்மென்ட்டை ஒப்படைச்சிடுவேன். நான் விரும்பின அயிட்டங்களை எல்லாம் சமைச்சு போட சொல்லி கணவனின் சமையலை ஒரு கை பார்ப்பேன். சமையல் தெரிந்த ஆண்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள், லட்சிய கணவராக திகழ தகுதியானவர்கள் என நம்புகிறேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து எங்கள் கல்யாணம் நடந்தால், திருமண விருந்தில் மெனுவை என் சமையல்கார கணவனே தீர்மானிப்பார். விட்டுக்கொடுத்ததற்கு நன்றி சுகி!” கண் சிமிட்டினாள் காவ்யா. விக்கித்து நின்றாள் சுகிர்தா.
Leave a comment
Upload