
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தை, பத்து மாதமே நிறைந்த சிறு பெண் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இந்தியாவின் மிகவும் இளைய கொடையாளி ஆகி இருக்கிறார்.
இந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று கேரளாவில் ஒரு கார் விபத்தில் சிக்கிய இச்சிறுமலர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதன் வழியாக ஐந்து பேர்களுக்கு மறு வாழ்வு தந்துள்ளார். இதனால் மிக இளைய உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளி என்ற புகழைப் பெற்றுள்ளார்.
பத்தினம் திட்டாவைச் சேர்ந்த அருண் ஆபிரகாம், ஷெரின் ஆன் இவர்களின் மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் சாலை விபத்தில் சிக்கியது படுகாயம் அடைந்த இக்குழந்தை சங்கனாச்சேரி மற்றும் திருவல்லா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு ஆலின் மூளைச்சாவு அடைந்ததை அறிந்த அவளது பெற்றோர் இருவரும் ஆலினின் உடல் உறுப்புகளை தானம் தர முடிவு செய்தனர்.
கேரளாவின் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் ( K-SOTTO ) ஒருங்கிணைப்பில், குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
அவளது இதய வால்வுகள் , திருவனந்தபுரத்தின் ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் தொழிற்நுட்ப நிறுவனத்துக்கும், கல்லீரல் அங்குள்ள KIMS மருத்துவமனைக்கும் , சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டன . அவளது கண்களும் அமிர்தா மருத்துவமனையின் கண் வங்கியில் ஒப்படைக்கப்பட்டன.
ஆலினின் கல்லீரல் 6 மாத குழந்தை ஒன்றுக்கு பொருத்தப்பட்டது .பத்து வயது சிறுவன் ஒருவனுக்கு இரு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டன. அவளது இதய வால்வுகளும் கண்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன .

ஆலினின் இக்கொடை நம் அனைவரையும் அசைக்க வைத்துள்ளது. மரணத்தை எதிர் நோக்கி உள்ள தன பிஞ்சுக் குழந்தையின் உறுப்புகளைத் தானம் தரும் துணிவான முடிவை எடுத்த ஆலினின் பெற்றோர் போற்றப்பட வேண்டியவர்கள். தங்கள் துயர நேரத்திலும் பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்று நினைத்த அந்த நல்ல உள்ளங்களை அனைவரும் வாழ்த்துகின்றனர். தலைவர்களும், பொது மக்களும் அவர் தம் நற்செயலைப் புகழ்கின்றனர்.
அந்த இளம் கொடையாளி அரசு மரியாதையுடன் பத்தனந்திட்டாவின் மலப்பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டாள். கேரள அரசு தான் ஏற்படுத்த இருக்கும் உடல் உறுப்பு தான மையத்திற்கு ஆலின் பெயரைச் சூட்ட இருக்கிறது.
.ஒரு நெருக்கடியான சூழலில் பிறரது கண்ணீரைத் துடைக்க நீளும் கரங்கள், ஒரு புதிய செய்தியை உலகுக்குச் சொல்கின்றன கருணையும், அன்பும் என்றும் இம்மண்ணில் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகின்றன.

Leave a comment
Upload