திரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர் : ஜா. தீபா
என்னுடைய பள்ளி காலங்களில் விடுமுறை நாட்களை பெரும்பாலும் களவாடிக் கொண்டவை திரைப்படங்கள் தான். திருநெல்வேலி டவுன் ரதவீதியில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்றால் சுத்தி இருக்கும் ரத்னா, சென்ட்ரல், ராயல், பார்வதி, அருணகிரி என்று ஐந்து தியேட்டர்களிலும் மாறி மாறி படம் பார்க்கலாம். இதற்காகவே விடுமுறைக்கு சித்தி வீட்டிற்கு போவோம். ஒரே நாளில் அடுத்தடுத்த ஷோக்களில் படம் பார்த்த அனுபவங்கள் நிறைய உண்டு. அப்படி பார்த்த படங்களை குறித்த பேசிக் கொள்வது ஒரு தனி உற்சாகத்தை தரும். படம் பார்க்க போகும் முன் அந்த படத்தில் உள்ள பாடல்களை கேட்டு இப்படித் தான் அந்த பாடலின் காட்சிகள் இருக்கக் கூடும் என்று கற்பனை செய்வது மேலும் அலாதியான ஒரு அனுபவத்தை தரும். அப்படி சிலோன் ரேடியோவில் பாடல்களை கேட்டு யோசித்து வைத்திருந்த காட்சிகளுக்கு மாறாக வேறு மாதிரி படமாக்கப்பட்டிருந்த பாடல்களை கண்டு ஏமாந்த நாட்கள் பலவுண்டு, நாம் கற்பனை செய்திருந்ததை விடவும் அற்புதமாக காட்சியமைக்கப்பட்ட பாடல்களும் உண்டு. தொண்ணூறுகளில் பெரும்பாலான பெண்கள் சினிமாவிற்கு போவது என்பது அவர்களின் சுதந்திரத்திற்கான ஒரு வெளி இதை வெகு அற்புதமாக தன்னுடைய நூலில் எழுதி இருக்கிறார் ஜா. தீபா அவர்கள்.
விகடனில் தொடராக வந்த போதே பலரும் தொடரை சிலாகித்து எழுதி இருந்த போதும் நூலாக வந்த பிறகு வாசித்துக் கொள்ளலாம் என்று வாசிக்காமல் விட்டுருந்தேன். இந்த வருட புத்தக கண்காட்சியில் வெகு ஆசையாக வாங்கிய நூலிது. வாசிக்கத் தொடங்கியதும் கீழே வைக்க முடியாமல் என்னை ஆட்கொண்டுவிட்டது என்று தான் கூறவேண்டும். இரண்டு விஷயங்கள் என்னை இந்த நூலுடன் நெருக்கமாக உணர வைத்தது, ஒன்று ஜா. தீபாவின் எழுத்தில் சலசலக்கும் தாமிரபரணி மற்றொன்று சினிமாவை ரசிக்கும் பெண்கள். பொதுவாக சினிமாவை ரசிக்கும் ஆண்களை குறித்து நிறைய பேர் எழுதபட்டுவிட்டது, ஒரு பெண் ஒரு திரைப்படத்தை எப்படி உணர்கிறாள் ரசிக்கிறாள் என்பதை அவளே எழுதும் போது அடடா இது நாம் நினைத்தது அல்லாவா என்கிற ஒரு ஆனந்தம் வருமல்லாவா, இதனாலேயே இந்த நூல் மனதிற்கு நெருக்கமானதாக ஆகிவிடுகிறது.
ஒரு சினிமாவிற்கு கூட கூட்டி போகாமல் பெண்களை பூட்டியே வைத்திருப்பது அந்த நாட்களிலெல்லாம் வெகு இயல்பு எப்போதடா கல்யாணம் ஆகும், கணவனுடன் முதல் திரைப்படத்திற்கு போகலாம் என்று அந்த பெண்கள் காத்திருப்பார்கள் அப்படி காத்திருந்த இசக்கி அக்கா, அம்புஜம் அக்கா என்று நிறைய பேரை நானும் அறிந்திருக்கிறேன். அவர்கள் கணவனுடன் சினிமாவுக்கு கிளம்புகிற போது ஏற்படுகிற மகிழ்ச்சி இருக்கிறதே, அவ்வளவு அற்புதமானது அதை பாக்கியராஜின் ஊர்வசியும் பாலுமகேந்திராவின் அஸ்வினியும் எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள் என்பதை தீபா எழுதுகிறார், கூடவே செய்துங்கநல்லூரில் ஒரு முஸ்லீம் பாட்டி தன் வாழ்நாளில் மெக்கா மதினா பற்றிப் பார்த்த ஒற்றை படத்தை கண்கள் மின்ன விவரித்த விதத்தையும் எழுதுகிறார். அவர் ஊர்வசியை பற்றி எழுதினால் அன்றைக்கு ஊர்வசி வந்த படங்களின் காட்சிகளை தேடிப் பார்க்க தோன்றுகிறது, மனோரமா பற்றி எழுதினால் அன்றைக்கு நாளே மனோரமாவுக்கு ஒதுக்க வேண்டி இருந்தது, சினிமா எப்படி நம் ஆதமாவுடன் கலந்திருக்கிறது என்பதை உணர்ந்த தருணமது.
பருவ வயதில் பாட்டுப் புத்தகங்களை பாடப் புத்தகங்களுக்குள் வைத்து பாடல்களை பாடிப் பார்த்தவர்கள் தானே நாமும் அந்த பாடல் வரிகளில் உள்ள காதல் நமக்குள்ளும் ஒரு குறுகுறுப்பையும் ஒரு ஆசையையும் ஏற்படுத்தி இருக்கும் தானே, அப்படி மூடி மறைத்து வெட்கப்பட்டதை எல்லாம் அதே பூரிப்புடன் எழுதியிருக்கிறார் தீபா. இப்படி சேகரித்து வைத்த பாட்டுப்புத்தகங்களில் அடிக்கோடிட்ட வரிகளே அந்த பெண்களின் மனதை சொல்வதாய் இருக்கும் என்கிறார். நடுநடுவே திருநெல்வேலியின் வட்டார வழக்கு மேலும் என்னை நெருக்கமாக உணர வைத்தது. நறுமுகையே பாடலை

எம் ஜி யாரின் வெற்றி பார்முலாவான அம்மா செண்டிமெண்ட் எப்படி இன்றைக்கு வரை சினிமாவில் அசைக்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது, அது பெண்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கை பெற்றிருந்தது என்பது குறித்தெல்லாம் அலசுகிறார். தோழிகளுடன் இணைந்து பேசும் போது,
"அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா" என்ற வரிகளுக்கு, "அவம் அவளுக்கு ஆளுன்னதும் எப்படிக் கொஞ்சுதா, இல்லைன்னா நான் குளிக்கத பாக்கியே நீ வெளங்குவியான்னுல்லா கேக்கணும்" என்று தோழியின் வெள்ளிந்தி பேச்சு நமக்குள்ளும் புன்னகையை தோற்றுவிக்கிறது. கண்ணதாசன், வாலி, வைரமுத்துவில் தொடங்கி தாமரையின் வரிகள் வரை சிலாக்கிறார்.
ஆண்கள் சமைப்பது போன்ற காட்சிகள் இந்த காலத்தில் வெகு சகஜம் ஆனால் அந்த நாட்களில் எல்லாம் அப்படி காட்சிகள் வெகு அபூர்வம், சத்திரியன் திரைப்படத்தில் விஜயகாந்த் சமைப்பதை போன்ற காட்சி தான் முதல் காட்சி என்பதையெல்லாம் நான் கவனித்ததில்லை, தீபாவின் கட்டுரை தான் அதை கவனப்படுத்தியது. அந்த கட்டுரையில் விஜயகாந்த் சமைப்பது போன்ற ஒரு ஓவியம் வெகு அழகாக வரையப்பட்டிருந்தது. நூல் முழுவதிலும் ஓவியங்கள் வெகு நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் வரையப்பட்டிருக்கிறது அதற்காக ஓவியர் பிரேம் டாவின்ஸி அவர்களுக்கு ஒரு பெரிய சபாஷ் ! குறிப்பாக ஆற்றங்ககரையில் பெண்கள் குளிப்பதான ஓவியங்கள் மற்றும் கையில் ஒரு போல பச்சைக் குத்திக் கொண்ட பாட்டிகளின் ஓவியங்களை நான் வெகுவாக ரசித்தேன்.
குஞ்சரவேலாயுதம் தாத்தா வீட்டுக்கு போனாலே சென்ட்ரல் தியேட்டருக்கு அழைத்துப் போவார் என்ற நிச்சயம் இருக்கும். என்னுடைய சின்ன வயதில் அங்கு போய் படம் பார்ப்பது மிகப் பிடித்தமான விஷயமாக இருக்கும் ஏனெனில் அந்த திரையரங்கே கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும். படம் போடுவதற்கு முன்பு திரையை உயர்த்த ஒரு இசை, அந்த பெரிய தூண்கள் அதில் ஒய்யாரமா சாய்ந்திருக்கும் தேவதைகளின் சிலைகள், உள் நுழைந்தவுடன் அங்கு மாட்டப்பட்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்கள் என்று எல்லாமே அந்த நாட்களில் பிரமிப்பை ஏற்படுத்தியவை அந்த திரையரங்கை சிதிலமைடைந்த நிலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு அழுத்தம் வரும். அந்த திரையரங்கை பற்றிய பிரமிப்பை தீபா எழுதும் போது அப்படியே அவரின் கைப்பற்றி குலுக்கத் தோன்றியது.
பெண்கள் நேசிக்கும் சினிமாவை பற்றி எழுதியது போல, பெண்களை சுரண்டிய சினிமாவை பற்றியும் எழுதி இருக்கிறார் ஆசிரியர், எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பின் அவரது புறத் தோற்றத்தையே பார்க்கிறது இந்த உலகம் என்பது கசப்பான உண்மை தான். தைரியமான பெண்கள், குடும்பப் பாங்கான பெண்கள், சிறுமைக் கண்டு பொங்கியெழும் பெண்கள், சாமியாடும் பெண்கள், நடனமாடும் பெண்கள் என்று சினிமாவில் காட்டப்பட்ட அத்தனை விதமான பெண்களையும் இந்த நூல் பேசுகிறது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக நடிக்கும் பானுமதி, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக செய்யும் சாவித்திரி, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் லட்சுமி, ஊர்வசி, மனோரமா என்று இவரின் பட்டியல் மிகப் பெரியதாகி இருக்கிறது. எத்தனை காட்சியை தான் நாமும் தேடித் தேடி பார்ப்பதாம் என்று ஒரு செல்லக் கோபம் வருகிறது. ஆனாலும் சினிமாத் துறையில் இருப்பதாலேயே ஆசிரியரால் இவ்வ்ளவு நுணுக்கமாக ஒரு காட்சியை உணர்ந்து எழுதமுடிகிறது என்றுத் தோன்றுகிறது.
மொத்தத்தில் முப்பத்தி ஐந்து அத்தியாயத்தையும் ரசித்து ரசித்து வாசித்தேன், தீபா அவர்களின் படைப்புக்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றார் ஆவல் எழுந்தது. நோஸ்டால்ஜிக் நினைவுகளை தட்டி எழுப்பும் அற்புதமான ஒரு நூல், நாம் ஏற்கனவே கண்ட திரைப்படங்களை இந்த கட்டுரைகளை வாசித்தது விட்டு ஒரு பெண்ணிய பார்வையோடு திரும்ப காணலாம், சிறப்பான வாசிப்பனுபவம்.
பதிப்பகம் : விகடன்
பக்கங்கள் : 288

Leave a comment
Upload