
இருகரம் கூப்பி,கண்களை மூடி, வானுயர்ந்த அந்த கோபுரத்தின் முன், தியானத்தில் நிற்கின்றாளா? இல்லை பக்தியில் திளைத்திருந்தாளா? யாருக்கும் தெரியவில்லை.
சித்தாளு செங்கமலம் எத்தனையோ கட்டிடத்துக்கு செங்கல் சுமந்து, உழைச்சு, ஓடா தேஞ்சிருக்கா.
அவள் உழைப்பைத் தேடி வளர்ந்த எந்த கட்டிடத்தின் முழு அழகையும், எட்டிப் பார்க்கும் பாக்கியம், அவளுக்கு இது வரை எட்டியதே இல்லை.
“நாளைக்கு நீ இங்க வரவேணாம். சோளிங்க நல்லூர் ஸைட்டுக்கு போ. அங்க அந்த வேலை அவசரமாக முடியணும்”.
இந்தக் கட்டுமானம் முடிவதற்குள், அடுத்த கட்டிட வேலைக்கு மேஸ்த்திரி அவளை அவசரமாக அனுப்பி விடுவார்..
தான் வேலை செஞ்சு, முடிஞ்ச ஒரு கட்டிடத்தின் முழு அழகையும் பார்க்கும் பாக்கியம் அவளுக்கு கனவாய்ப் போகும்..
அவள் தூக்கி சுமந்த கற்களால் உயர்ந்து நிற்கும், அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் , பள பள கார்கள் பல உள்ளே நுழைந்து, வெளியே வந்து கொண்டிருக்க, கலவென கலவென பேசி்த் திரியும் கனவான்கள் முன், அழு்க்கு உடையோடு ஒரு கப் டீ அருந்தக் கூட உள்ளே போக முடியாத தன் ஏழ்மையின் வருத்தம் அவளை வாட்டும்.
தன் குழந்தைகளின் பசி தாகத்தை கூட மறந்து,, இரவு பகல் பாராமல், தன் சிரம் தாங்கிய சிமெண்டாலும், செங்கல்லாலும் எழும்பி நிற்கும் இந்தப் பள்ளிக்கூடத்தில், சீறுடையும், சிரிப்பொலியும் பொங்க வந்து, செல்லும் சிறார்கள் மத்தியில், தன் குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைக்க பணமில்லையே என்ற தன், இயலாமைையை எண்ணி அவள் மனம் ஏங்கும்.
அடுக்கடுக்காய் உயர்ந்து நிற்கும் பல மாடி கட்டிடம் எழுந்து நிற்க, தன் இடுப்பொடிய சுமந்த செங்கற்கள்,அவளுக்கென அதில் ஒரு இடத்தை பெற வழியின்றி, வெள்ளம் வந்தால் வாரி எடுத்துச் செல்லும் குடிசையில், அந்த ஆற்றுப் படுகையின் ஓரத்தில் வாழும் அவள் அவலம் கண்டு சிரிக்கும்,
நெடு நேரம், இவள் இங்கே நின்று என்னத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஏதாவது திருட வந்திருக்கிறாளா?
இல்லை… யாருக்காவது ஒற்றர் வேலை
பண்ண வந்திருக்காளா?
இல்லை பயித்தியமா?
தன் பங்களிப்பால் வானுர எழுந்த பங்களாவின் அழகை பார்க்க வந்தவள் மீது, சந்தேகச் சேற்றை வாரி இறைக்கும் பங்களாவாசிகளின் ஈனத்தனம்,
அத்தனைஇடர்களையும்,அவமானங்களையும் தாங்கிக் கொண்டு,
கடைசியாய் தான் உழைத்து, இன்று எல்லோரும் போற்றி வணங்கும், அந்தக் கோவில் ராஜகோபுரத்தின் முன் நின்று, தன் கரங்களைக் கூப்பி, கண்களை மூடி அந்த இறைவனை வேண்டி நிற்கின்றாளே!.
"அப்பா, இறைவா !! எனக்கு என்ன பாக்கியம் தந்தாய்" !!.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பார்கள்.
ஏழை, பணக்காரன் என்ற வித்யாசமின்றி எல்லோரும் அந்த கோபுரத்தின் முன் நின்று தரிசனம் செய்து மகிழும், இச் சீரிய பணியில் எனக்குமொரு பங்கு தந்தாயே.
இங்கே நான் சுமந்த செங்கலும், சிமெண்டும்,என்னை பூரிப்போடு வாழ்த்தி வரவேற்கிறதே !!
கண்களை மூடி, அவ்விறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள், செங்கமலம்.

Leave a comment
Upload