சுக்கிரன் ஸ்தலம் - கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்

பிரசித்தி பெற்ற குரு ஸ்தலம் - ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் ஆறாவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவர் ஸ்ரீ கற்பகாம்பிகை சமேத ஶ்ரீஅக்கினீஸ்வரர். இக்கோயில் நவக்கிரகத் ஸ்தலங்களில் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. இது சுக்கிர பரிகார ஸ்தலமாக இருந்தாலும்
இங்கு நவக்கிரகமான சுக்கிரனுக்குத் தனி சந்நிதி இல்லை. சிவபெருமானே (அக்னீஸ்வரர்) இக்கோயிலில் சுக்கிர பகவானின் அம்சமாகக் காட்சி அளிக்கிறார்.

சுக்கிர பகவான் பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு வெள்ளி, அசுரகுரு, பார்க்கவன் போன்ற பல பெயர்களும் உண்டு. இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும், சுகபோகத்தையும் அருள்பவர். சுக்கிரன் கலையுணர்வுகள், செல்வ வளம், மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அதிபதியாகக் கருதப்படுவதால், இந்த ஸ்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36 வது ஸ்தலம். இக்கோயில் மத்திய காலச் சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் விஜயநகர பேரரசின் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இங்குள்ள கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்றுக் காலங்களில் இப்பகுதியின் கலாச்சார மற்றும் மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
ஸ்தல புராணம்:

இத்திருத்தலம் கஞ்சனூர் என்றும் கஞ்சனூர் சதுர்வேதி மங்கலம், நல்லாற்றுக் கஞ்சனூர், நாட்டுக் கஞ்சனூர் என்று புராணமும் சரித்திரமும் போற்றுகின்றன.மேலும், பலாச வனம், பராசரபுரம், கம்ஸபுரம், அக்னிபுரம், மோட்சபுரம் என்றும் இந்த ஸ்தலத்தை விவரித்துள்ளது. கம்சன் வழிபட்ட திருத்தலம் கம்சனூர், கஞ்சனூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள், தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து, பூலோகம் சென்று துன்புறச் சாபம் தந்தார். சாபம் பெற்ற தேவர்கள், வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என்ற வடகாவிரியில் நீராடி, ஸ்ரீ கற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட, சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார். தேவர்களும் அவ்வாறே வழிபட்டு, சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர். சுக்கிரன் அளித்த சாபத்தில் இருந்து தேவர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஸ்தலம் என்பதால் சுக்கிரனால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்குரிய ஸ்தலமாக இத்தலம் விளங்குகிறது.
மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்குத் தனது பாவம் நீங்க வழிபட்டார்.

அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால், ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னி பகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்த்தார். இதனால் இத்தல இறைவனுக்கு, அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
அக்னி தேவனின் நோய் காரணமாகத் தான் துவங்கிய யாகத்தை நிறைவு செய்ய முடியாததால் பிரம்ம தேவனின் படைப்பு தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் பிரம்ம தேவரும் இத்தலத்திற்கு வந்து சிவ பெருமானை நோக்கி தவமிருந்து, அருள் பெற்றார். இதனால் இந்த தலத்தில் ஓடும் காவிரி ஆற்றிற்குப் பிரம்ம தீர்த்தம் என்றும் பெயர்.
ஸ்தல அமைப்பு:

இக்கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிராகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி அக்னீஸ்வரர் சந்நிதிக்குச் செல்லும்போது, இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார்.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனி பகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத்தக்கது. நடராஜர் மூலத்திருமேனியில், சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசர முனிவருக்கு இங்குத் தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி" என அழைக்கப்படுகிறார். இம்மண்டபத்துக்கும் முக்தி மண்டபம் என்று பெயர்.
இக்கோயில் கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். அன்னை கற்பகாம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகின்றனர். இருவருக்கும் இடையில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் எனப்படும்.

இங்குச் சுக்கிர பகவானுக்கு எனத் தனிச் சந்நிதியோ அல்லது தனி உருவச் சிலையோ கிடையாது. அக்னீஸ்வரர் லிங்கத் திருமேனியாகவே சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் சிவபெருமானின் வயிற்றுக்குள் (ஜாடரக்னி) இருப்பதாக ஐதீகம், அதனால் சிவனை வணங்குவதே சுக்கிரனை வணங்குவதற்குச் சமம். சுக்கிர தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள், இங்குள்ள ஐம்பொன்னால் (பஞ்சலோகம்) ஆன சிவபெருமானின் உற்சவ மூர்த்தியைச் சுக்கிரனாகப் பாவித்து வழிபடுகின்றனர்.
ஸ்தல விருட்சம்: புரசு (பலாசு)
ஸ்தல தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (காவிரி ஆறு),
ஸ்தல பெருமை:

பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும், பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்ததும், அக்கினிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்ததும், சந்திரனின் சாபம் நீங்கியதும், கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியதும், மாண்டவ்ய புத்திரர்களுக்கு மாத்ருகத்தி தோஷம் நீங்கியதும், பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாசாரியார், மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்டதும், கலிக்காமருக்குத் திருமணம் நடந்ததும், அப்பர், சுந்தரர், சேக்கிழார், விருத்த காளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்காய் பக்தர் ஆகியோர் அருள் பெற்றது போன்ற பல்வகைப் பெருமைகளையும் உடையது இந்த ஸ்தலம். இத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டலக் காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கையாகும்.
இங்குள்ள மூலவர் அக்னீஸ்வரருக்கு அபிஷேகத்தின் போது ஊற்றப்படும் எண்ணெய் முழுவதையும் லிங்கம் உறிஞ்சிக் கொள்வது ஒரு பெரிய அதிசயம். அது மட்டுமின்றி இங்குள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய ஸ்தலம்
கல் நந்தி புல் உண்ட அதிசயம்:

இத்தலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாறு நிகழ்ந்த இடம் ஆகும். கஞ்சனூரில் வாழ்ந்த தேவசம்பு என்ற முதியவர் தவறுதலாக தன் பசுவின் கன்றின் மீது கனமான புல்லுக்கட்டை போட்டு விடக் கன்று உயிரிழந்தது. இதனால் ஏற்பட்ட பசு தோஷம் நீங்கக் காசிக்குச் சென்று நீராட வேண்டும் என்று சிலர் கூறினர். அப்போது சிவனடியார் ஹரதத்த சிவாச்சாரியார் என்பவரிடம் முதியவர் ஆலோசனை கேட்க, அவர் நீங்கள் சிவனின் மீது பக்தி கொண்டவர், நடந்த பிழை பாவத்தில் சேராது என்று கூறி அதை நிரூபிக்க அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள கல் நந்திக்குப் புல் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அவரும் புல்லைத் கல் நந்திக்கு தர, அந்த கல் நந்தி தலையைத் திருப்பி புல்லை ஏற்றுக்கொண்டு தின்றது. இதனால் பசு தோஷம் நீங்கியது நிரூபணம் ஆனது.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா மிக முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், தை மாதத்தில் ஹரதத்தர் விழா, ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்குரிய அனைத்து முக்கிய விழாக்களும், வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன

பிரார்த்தனை:
இந்த கோயிலில் உடல் பிணி, சோகை நோய், சித்தப்பிரமை நீங்கப் பிரார்த்தனை செய்கின்றனர். மற்றும் சுக்கிர தோஷம் நிவர்த்திக்கும், திருமணத் தடைகள் நீங்கி நல்ல துணை அமையவும், செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, வாகனம் போன்ற சுகபோக வாழ்வு கிட்டுவதற்கும் பிரார்த்தனை செய்கின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்
திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில்: பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மதிய தரிசன நேரம் மதியம் 1:30 மணி வரை நீட்டிக்கப்படலாம்.
எப்படிச் செல்வது:
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று, கோட்டூர் - கஞ்சனூர் என்று வழிகாட்டிப் பலகை உள்ள சாலையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.
சுக்கிரன் தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload