தொடர்கள்
தொடர்கள்
காதல் பொது மறை - 53 - காவிரிமைந்தன்

20210719220347750.jpg

20210719220421741.jpg

காவிரிமைந்தன்

உன்னதமான காதலின் உச்சம்!

20210807205102873.jpg

அன்பிற்கினியவளே..

உன் நினைவுகள் பொங்குவதால் நான் அங்கு வழிகிறேன்!

எழுத்துவடிவில் அவற்றைப் பொறித்துவைப்பதால் எப்போதும் இதயம் இளஞ்சூடாகவே இருக்கிறது!!

எப்படி அந்த முதல் பார்வை என்கிற ஒரு நினைப்பு போதாதா?

உள்ளம் கோலாட்டம் போட!!

உறவின் வாசல் அங்கே திறந்து வைக்க உன் கண்கள் அல்லவா வரவேற்பு வாசகம் எழுதியது!

எனக்குள்ளே நான் கரைந்துபோனது உன்னழகைப் பார்த்தபோதுதான் என்று உன்னிடம் சொன்னேன்!

ஆசைமழையடிக்க.. அங்கே நான் துடிதுடிக்க.. காலங்கள் மாறிடினும் நானதை மறப்பதுண்டோ?

ஆனந்த பைரவியின் ஆலாபனைகள் அடியே அந்த நொடிமுதல் தொடங்கியதுதானே!!

கர்நாடக கச்சேரிகளில் ஏதோ ஒரு கருவி.. ஸ்ருதியாக மீட்டிக் கொண்டேயிருக்குமாமே.. அப்படித்தான் காதலில் ஒரு தேவஸ்வரம் கேட்டுக்கொண்டே இருக்கும்!

அந்தப் பின்னணியில்தான் ஏழுஸ்வரங்களும் ராக ஆராதனைகள் நடத்தும்!

அன்பின் பாலபாடம்.. ஒருவருக்காக ஒருவர் என்கிற உள்ளப் பரிமாற்றத்தில் நிகழ்வது!

எந்தவித ஒளிவுமறைவின்றி உயிர்கள் இரண்டு பேசிக்கொள்வது உன்னதமான காதலின் உச்சம்!

இதைப் பற்றிக் கொண்டுவிட்டால் அணையாத நெருப்பாக அது கனன்று கொண்டேயிருக்கும்!

ஆயிரமாயிரம் எண்ண அலைகள் வந்து வந்துபோகும் இதயத்தில் இன்று நேற்று என்கிற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதும்!

நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் இணைகின்ற கடற்கரை.. அங்கே நீலவானம்.. தொடுவானம் வரை கண்ணில் தெரிய.. வெள்ளை அலைகள் துள்ளியெழும் கடல்.. சொல்லிக் கொடுப்பது என்ன.. கேட்டுக் கொள்ளவே காதலர்கள் கடற்கரையோரம் வந்து குவிகிறார்கள்!

நிலத்தை முத்தமிடவே அலைகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடிவருகின்றன பார் கண்ணே.. என்று காதலன் காதலியிடம் சொல்ல..

இப்படி கற்பனைகள் பிறப்பதெல்லாம் கடற்காற்று பட்டதாலே என்று வழிமொழிய.. எல்லைகள் இங்கே ஏதடி என்று என் கண்ணே உன் மடி சாய்ந்தேன்!

அப்படி இப்படி என்று நீங்கள் வந்து சேருமிடம் இதுவென்று எனக்குத் தெரியாதா என்றாய்!

பரிசுத்தமாக இதயம் பரிமாறப்பட இதைவிட வேறெந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்று உன்னை நான் கேட்டேன்!

சரி.. சரி.. என்று கொஞ்சம் சரிந்தாய்!!

விழியோடு விழிகள் பேசும் காலமல்லவா?

அங்கே மொழியேதும் இல்லையெனிலும் மெளனம் வெல்லுமல்லவா?

இடையிடையே உன் புன்னகை புதிய வசந்தத்தை நம் இதயங்களில் பொழிந்ததை மறக்க முடியுமா?

என்ன அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டாய்!

இல்லை.. இந்தக் கண்கள்தானே என்னைக் கைது செய்தவை என்று எண்ணிப்பார்த்தேன் என்றேன்!

இங்கு மட்டும் என்னவாம்?

நானும் உங்கள் கண்களில்தானே விழுந்தேன் என்றாய்!

இதயம் வரவேற்க.. கண்கள் இமைக்கரங்களால் வாவென்றழைக்க.. முதன் முதலாய் உன்னிடம் வந்த கணங்கள் உள்ளத்தில் பசுமையான பதிவுகளாக!!

அன்பின் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் மட்டுமல்ல.. ஒட்டுமொத்தமாய் உனக்குள்ளும் எனக்குள்ளும் செய்த மாயங்கள்.. காதலாய் கனிந்ததன் காரணம் என்றால் நீயென்ன மறுக்கவா போகிறாய்?

ம்.. இன்னும் என்னென்ன சொல்வீர்களோ என்று காத்திருந்தாய்!

நீண்டநெடிய பாதையில் நானும் நீயும் பயணம் என்கிற சந்தோஷம் ஒன்றுதான் இந்த வாழ்க்கையின் அச்சாணியாகத் தெரிகிறது!

ஒவ்வொரு நிமிடமும் உயிர்த்துடிப்பாய் நீயங்கே என்னை நினைத்திருக்க.. நானிங்கே உன்னில் முகிழ்த்திருக்க.. இதுதானே கண்ணே பலம் என்பது!!

வார்த்தைகளில் என்னால் சொல்ல முடிந்தது கொஞ்சம்தான்.. சொல்ல முடியாத அளவு சுமந்திருக்கிறது நெஞ்சம்தான்!!

வலி கூட சுகமாகிறது பார்த்தாயா? காதலில்மட்டும்தான் இது சாத்தியம்!!

ஒரு சமயம்கூட நினைக்க மறக்காத மனம்.. உன் அன்புமுகத்தோடு கொஞ்சிக்கிடக்கிறது!

நீ வரும்வரை உன் நினைவுகளோடுதான் போராடிக் கொண்டிருப்பேன்!!

நேற்றல்ல.. இன்றல்ல.. என்றென்றும்!!