கல்லும் சிலையும் ஒன்றே
கல்லிலொரு சிற்பம் கண்டாலதனை ‘கற்சிலை’ என்கின்றோம்.
பொன்னிலொரு சிற்பம் வடித்துக் கண்டாலதனைப் ‘பொற்சிலை’ என்கின்றோம்.
மரத்திலொரு சிற்பம் செதுக்கி வைத்தாலதனை மரச்சிலை என்கின்றோம்.
இதுபோல் வெண்கலத்தில் ஐம் பொன்னில் அமையும் சிற்ப வடிவங்களை வெண் கலச்சிலை என்றும் ஐம்பொன் சிலை எனவும் வழங்குகின்றோம்.
சிலை என்ற சொல்லுக்கு வேர் தேடில் ‘சிலை’ என்பது வட மொழி மூலம் எனத் தெரிகிறது.
சிற்பமாகச் செதுக்கப் படாத கல்லும் ‘சிலா’ (Shila) என்று தான் அழைக்கப் படுகிறது.
கோயிலின் மூலவர் கற்சிலையா, சுதை வடிவமா என்று கேட்டால் வட மொழி யறிந்த அர்ச்சகர் சிலா ரூபம் (கல் வடிவம்) என்று பதில் சொல்வார்.
கற்பாறை மேல் படிகின்ற ஒருவகை பூஞ்சை (காளான்) சில ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கல்லில் படர்ந்து காணப்பபடுவதால் அதை ‘சிலாஜித்’ என்கிறார்கள்.
‘சிலை’ என்ற சொல் வட சொல்லென ஏற்று அறிந்து கொண்டால் ‘கற்சிலை’ என்ற சொல் ‘கல்கல்’ என்றும் பொற்சிலை என்பது பொற்கல் என்றும் ‘மரச்சிலை' என்பது ‘மரக்கல்’ என்றும் பொருள் பெற்று விடுகிற தெனத் தெரிவதனால் பிழையற்ற தூயதமிழ் வேண்டும் எனில் சிலை என்ற சொல் நீக்கி, சிற்பம் என்ற சொல் இணைத்து கற்சிற்பம் பொற்சிற்பம், மரச் சிற்பம் என்று சொல்ல வேண்டும்.
சிற்பம் என்ற சொல்லுக்கு ஈடாக ஆரியத்தில் ‘சில்பா’ என்றொரு சொல் வழங்கி வருகிறது. என்றாலும் அது தமிழ்ச் சொல் தான்.
ஆரியத்திலும் கலந்துளது என்று வல்லுனர்கள் சொல்லுவதால் சிற்பம் தமிழெனவே கொள்வோம்.
சிலை என்றால் சிற்பம் என்றே இதுகாறும் வழங்கி வந்தோம். பிற சொற்கள் கலவாத துயமொழி உலகில் இலையென்பதால் இதுவே தொடரும். தூய தமிழ் சொல்லொன்று காணும் வரை.
Leave a comment
Upload