சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 110 விதியின் கீழ் வாக்குறுதிகளை சட்டசபையில் வாரி வழங்கியது என்று குற்றம் சாட்டினார். ஆனால் முதல்வர் ஸ்டாலினும், 110 விதியின் கீழ் தினம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளை, 110 விதியைக் காரணம் காட்டி, சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கமாட்டார்கள். 110 விதி என்பது அவசர அவசியத்திற்கு ஆக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டு திராவிட கட்சிகளும், 110 விதியை எல்லா அறிவிப்புகளுக்கும் பயன்படுத்துவது என்பது வழக்கமாகிவிட்டது.
சென்ற வாரம் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஒரு அறிவிப்பு, தற்போது எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான இருபத்தி ஒரு பேருக்கும் மணிமண்டபம் கட்டப்படும். அவர்களின் வாரிசுகளுக்கு, தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த அறிவிப்பை முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தற்போதைய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றார். பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜிகே மணி, சட்டசபையில் இதை வரவேற்று ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அதாவது குறிப்பாக வன்னியர் சமூகத்திற்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கேட்டு இன்றைய பாட்டாளி மக்கள் கட்சி, அன்றைய வன்னியர் சங்கம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடத்திய போராட்டம் அது. அதை தற்சமயம் திமுகவும் - பாமகவும் அறவழிப் போராட்டம் என்று சொல்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல...
செப்டம்பர் மாதம் 1987, 17-ஆம் தேதி முதல் இருபத்தி மூன்றாம் தேதி வரை... ஒரு வாரம் வன்னியர் சங்க தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்த போராட்டத்தை நடத்தினார். இதனால் தமிழ்நாட்டில் ஒரு வாரம் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மரங்களை, சாலை முழுக்க வெட்டிப்போட்டு போக்குவரத்தை தடுத்து நிறுத்தியது வன்னியர் சங்கம். அப்பாவி மக்கள் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு, தங்கள் வீடு திரும்ப முடியாமல் தங்களிடமிருந்த கைகடிகாரம், நகைகளை விற்று அவர்கள் இருந்த இடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வன்முறை தலைவிரித்து ஆடியது தவிர, வன்னியர் சங்க தொண்டர்கள் தலித் வகுப்பினரை கடுமையாக தாக்கி, அவர்களுடைய உடமைகளையும், வீடுகளையும் கபளீகரம் செய்தார்கள். போலீஸ் வேறுவழியின்றி... துப்பாக்கி சூடு நடத்தியதில் 21 பேர் இறந்து போனார்கள். இதைத் தொடர்ந்து ராமதாசை சில கட்சிகள், மரம் வெட்டி ராமதாஸ் என்றுகூட அழைத்தார்கள். அப்போது கோபப்பட்ட டாக்டர் ராமதாஸ், இனிமேல் யாராவது மரம் வெட்டி என்று சொன்னால் அவர் கையை வெட்டி விடுங்கள் என்று பொது மேடையில் சொன்னார்.
இப்போது அவர்களை தியாகிகள் என்று முதல்வர் ஸ்டாலின் வர்ணிக்கிறார், அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சொல்கிறார்.
இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கருத்து ஏதும் சொல்லவில்லை... காரணம்... தலித்கள் இந்தப் போராட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதை, பலமுறை திருமாவளவன் மேடையில் விவரித்து பேசியிருக்கிறார். இதனாலேயே பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று கூட சொல்லியிருக்கிறார்.
இருபத்தோரு பேர் துப்பாக்கி சூடுக்கு பலியானதை குறிப்பிடும் முதல்வர் ஸ்டாலின், அப்போது வன்னியர் சங்கத்தால்... பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை தனது வசதிக்காக மறந்து விட்டார்.
4 கோடி ரூபாயில் மணிமண்டபம்... அந்த குடும்பத்திற்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு என்று முதல்வர் அறிவித்ததை குறிப்பிட்டு டாக்டர் ராமதாஸ், எனது தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தை சமூக நீதிக்கான போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது என்று திமுக அரசுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது அவர்களை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறது. கலைஞர் பட திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது, பாட்டாளி மக்கள் கட்சி கலந்துகொண்டது. தற்போது அதிமுக, திமுகவை கண்டித்து வெளிநடப்பு செய்யும்போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி அவையில் உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது, பாட்டாளி மக்கள் கட்சி அந்த தீர்மானத்தை ஆதரித்து பேசியது.
1987இல் இந்த போராட்டம் நடந்தது. நான்கு முறை அதிமுகவும், இரண்டு முறை கருணாநிதி தலைமையிலான திமுக-வும், தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது. அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தேர்தல் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, இட ஒதுக்கீடு போன்றவற்றை பெரிதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை கண்டு கொண்டதில்லை. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை, எடப்பாடியை நிர்பந்தப்படுத்தி தான் அந்த உத்தரவை வாங்கினார்கள். அப்போதுதான் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவேன் என்று நிபந்தனை வைத்தார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் பாட்டாளி மக்கள் கட்சியை வன்முறையாளர் கட்சியாக தான் பார்த்தார்கள். அதனால் தான், இந்த மணிமண்டபம் போன்றவற்றையெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியால் கோரிக்கையாக வைக்க முடியவில்லை. இப்போதுகூட இந்த கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வைக்கவில்லை. திமுகவே தானாக முன்வந்து அறிவித்திருக்கிறது. இதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியை, பாராளுமன்ற தேர்தலின் போது தன் பக்கம் இருப்பது என்பது திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டம். அப்படியும் அவர் வரவில்லை என்றால் வன்னியர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை, திமுக தான் செய்தது என்று இது போன்ற விஷயங்களை பட்டியல் போட்டு, வன்னியர் வாக்கு வங்கியை கவர்வது என்பது ஸ்டாலினின் திட்டம். எனவே இப்போதைக்கு வேறுவழியின்றி பாட்டாளி மக்கள் கட்சி திமுக பக்கம் சாய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
அதே சமயம் சில வாரங்களுக்கு முன்பு தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், திமுக - பாட்டாளி மக்கள் கட்சிக்கு முக்கியத்துவம் தருவது பற்றிய தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் ஸ்டாலினுக்கும் தெரியும்.
Leave a comment
Upload