ஹாங்காங்கில் யாவ் தாங் என்ற இடத்தில் இருக்கும் பிள்ளையார். ஒரு தாய்லாந்து உணவகத்தின் வாசலில் இருக்கும் இந்த பிள்ளையாருக்கு, தல புராணமெல்லாம் இல்லை. அங்கே ஆனந்தமாக வீற்றிருக்கிறார். பிள்ளையார் என்றால் அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமாம்.
தெற்காசிய நாடுகளில் பிள்ளையாரின் ஊடுருவலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் சோழப் பேரரசர்களின் படையெடுப்பிலிருந்து ஆராய்ச்சி கட்டுரை போல எழுத வேண்டும்.
இது தாய்லாந்து நாட்டில் இருக்கும் விநாயகர்.
தாய்லாந்தில் விநாயகரின் பெயர் பிரா பிகானெட். அவரை அங்கு வெற்றியின் கடவுளாகவும், தடைகளை அகற்றுபவராகவும் வணங்குகின்றனர் தாய் மக்கள். தாய்லாந்து புத்த மதத்தினரும் பிள்ளையாரை வணங்குகின்றனர். கல்யாண விசேஷங்களுக்கும், கலை சார்ந்த விஷயங்களுக்கும் கணபதி தான் விருப்பமான கடவுள்.
ஜப்பானில் கணபதியின் பெயர் கஞ்சிடேன் என்கிறார்கள். இங்கு விநாயகர் புத்த மதத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறார். பல விதமான உருவங்களில் “கஞ்சிடேன்” வணங்கப்பட்டாலும், இரு உடல்களுடன் இருக்கும் இவர் தான் பிரசித்தி போல. பெண் விநாயகியும், ஆண் விநாயகரும் கட்டிக் கொண்டிருக்கும் இந்த உருவ வழிபாடு தவிர நான்கு கைகளுடன் இருக்கும் விநாயகரையும் ஜப்பானில் பார்க்கலாம்.
இதுவும் ஜப்பான் தான்.
மேலே இருக்கும் பிள்ளையார் திபத்தில் இருப்பவர்.
திபத்தில் இருக்கும் புத்தமதத்தில் பிள்ளையாரை அறிமுகப்படுத்தியது இந்திய புத்த மத தலைவர்கள் தானாம். அதிசா தீபங்கரா சிரிஞ்னா மற்றும் கயாதாரா என்ற புத்த மத தலைவர்கள் 11ம் நூற்றாண்டில் கணபதியை திபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். விநாயகரைப் பற்றிய பல்வேறு புத்தகங்களை திபத்திய மொழியில் மொழிபெயர்த்ததன் மூலம் கணபதி பக்தர்களை பெருக்கியது ஆச்சரியமூட்டும் விஷயம்.
வெளிநாடுகளில் பொதுமக்களின் பார்வைக்கு இருக்கும் விநாயகர்கள் ஒரு புறமெனில், என் அலுவலகத்தில் இருக்கும் 3 டி பிள்ளையார் என்னைக் கவர்ந்த தனியார் பிள்ளையார்.
அன்றாடம் அலுவலகத்திற்குள் நுழையுமுன் என்னை வரவேற்கும் பிள்ளையார், உள்ளூர் சீன மக்களுக்கும் மிகப் பரிச்சயமாகி விட்டார்.
கணேஷா அல்லது எலிஃபேண்ட் காட் என்று சொல்லி அழைக்கும் உள்ளூர் சீன மக்களுக்கு, அவர் அதிர்ஷ்டத்தின் அடையாளம்.
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எல்லோருக்கும் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை ஏராளமாக இருக்கிறது.
Leave a comment
Upload